Specials Stories

நடிகர் மோகன் பிறந்தநாள் !!!

நடிகர் மோகன் தனது 64 வது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார். தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம் என 4 மொழிகளில் மோகன் நடித்துள்ளார்.

1977 ஆம் ஆண்டு பாலுமகேந்திராவின் இயக்கத்தில் வெளிவந்த கோகிலா எனும் கன்னட படம் மூலம் தான் மோகன் தனது திரையுலக பயணத்தை தொடங்கினார். தொடர்ந்து கன்னடம், மலையாளம் மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் நடித்து வந்த மோகன் 1980 ஆம் ஆண்டு பாலுமகேந்திராவின் இயக்கத்தில் வெளிவந்த மூடுபனி திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

தொடர்ந்து தமிழ் சினிமாவில் பல வித்தியாசமான கதைக் கருவுடன் இருக்கும் படங்களில் நடித்து தனக்கென ஒரு தனி அடையாளத்தை ரசிகர்கள் மத்தியில் உருவாக்கினார். பயணங்கள் முடிவதில்லை, கோபுரங்கள் சாய்வதில்லை, அர்ச்சனை பூக்கள், காற்றுக்கென்ன வேலி போன்ற படங்கள் மோகனின் திரையுலக வாழ்க்கையில் அவரை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்ற படங்களாய் அமைந்தது.

மோகன் படங்கள் என்றாலே பாடல்கள் சூப்பர் ஹிட் ஆகிவிடும் எனும் எழுதப்படாத விதி இருந்தது. அதற்கு காரணம், அவரது படங்களில் அமையும் பாடல்கள் அனைத்தும் ரசிகர்களின் மனதை கொள்ளை அடிக்கும் விதத்தில் இருந்தது தான். குறிப்பாக பிள்ளை நிலா, உதயகீதம், மௌனராகம் போன்ற படங்களில் அமைந்த பாடல்கள் மோகனின் ரசிகர் பட்டாளத்தை மேலும் பெரிதாக்க உதவியது.

இவரது படங்களில் இவர் மைக் பிடித்து பாடும்படி எடுக்கப்பட்ட பாடல்கள் அனைத்துமே மெகா ஹிட் பாடல்களாக அமைந்தது. அதனால் இவரை ரசிகர்கள் மைக் மோகன் என்றே பெயர் சூட்டி அழைத்தனர். 1999 ஆம் ஆண்டு அன்புள்ள காதலுக்கு என்னும் திரைப்படம் மூலம் மோகன் இயக்குனராகவும் தமிழ் சினிமாவில் தன் பரிமாணத்தை வெளிப்படுத்தினார். 2016 ஆம் ஆண்டு தெலுங்கில் வெளியான அபயிதோ அம்மாயி எனும்  திரைப்படம் தான் மோகன் நடித்து வெளிவந்த கடைசி திரைப்படம். நடிகர் மோகன் அவர்களுக்கு

சூரியன் FM சார்பில் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.