Specials Stories

Monday Motivation Playlist !!

பொதுவாக திங்கள் கிழமை என்றாலே பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவர்களும், ஆபீஸ் வேலைக்கு செல்லும் உத்தியோகஸ்தர்களும் முகம் சுளிப்பது வழக்கம். வாரத்தின் முதல் நாள் இந்த சலிப்பை தவிர்ப்பது கடினமே.

இந்த சலிப்பிலிருந்து நம்மை வெளிக்கொண்டுவர உதவுவது ஊக்கமளிக்கும் சில பாடல்களே. அந்த வகையில் திங்கள் கிழமை நம்மை Motivate செய்யக்கூடிய 10 பாடல்களின் தொகுப்பை இந்த பதிவில் காணலாம்.

1. எல்லா புகழும் இறைவனுக்கே

தளபதி விஜய் நடிப்பில் வெளிவந்த அழகிய தமிழ் மகன் திரைப்படத்தில் இடம் பெற்ற “எல்லா புகழும் இறைவனுக்கே” பாடல், கேட்கும் அனைவருக்கும் ஒரு புது விதமான புத்துணர்ச்சியையும், வலிமையையும் கொடுக்கும். இப்பாடல் இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமானின் இசையும், வாலிப கவிஞர் வாலியின் ஊக்கமளிக்கும் வரிகளும் கொண்டு அமைந்திருக்கும். வாழ்வில் எத்தனை துன்பங்கள், வெற்றிகள், தோல்விகள் வந்தாலும் அனைத்தையும் மறந்து நதிபோல ஓடிக் கொண்டிருக்க வேண்டும் என்பதை நம் மனதில் பதிய வைத்துள்ளது இப்பாடல்.

உனக்குள்ளே மிருகம்

நம் வாழ்வில் கஷ்ட காலங்களை கடப்பதற்கு தன்னம்பிக்கை மிகவும் அவசியம். அந்த வகையில் கேட்கும் அனைவருக்கும் தன்னம்பிக்கை கொடுக்கும் விதத்தில் அமைந்திருக்கும் பாடல் தல அஜித் நடிப்பில் வெளிவந்த பில்லா 2 திரைப்படத்தில் இடம்பெற்ற “உனக்குள்ளே மிருகம்” பாடல். வாழ்க்கையின் போராட்டத்திற்கு புது அர்த்தத்தை கொடுக்கும் வகையில் இப்பாடல் அமைந்திருக்கும்.

” நரகம் அதில் நீயும் வாழ்ந்தால், மிருகம் என மாறவேண்டும், பலி கொடுத்து பயமுறுத்து, வெட்ட வெட்ட தலை நிமிர்த்து” போன்ற நா. முத்துக்குமாரின் வரிகள் நம்மை எதிர் நீச்சல் போட்டு வாழ்க்கையில் போராட ஊக்குவிக்கும்.

மாற்றம் ஒன்று தான் மாறாதது.

சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் வெளிவந்த திரைப்படம் “கோச்சடையான்’. ஒரு மனிதன் வாழ்க்கையை எப்படி வாழ வேண்டும் என்பதை எடுத்துரைக்கும் வகையில் இப்பாடல் அமைந்திருக்கும்.

இப்பாடலில் வைரமுத்துவின், “மாறுவதெல்லாம் உயிரோடு, மாறாததெல்லாம் மண்ணோடு, மாற்றம் ஒன்றுதான் மாறாதது” எனும் வரிகள் வாழ்க்கையில் மாற்றங்களை ஏற்றுக் கொண்டு நாம் முன்னோக்கி செல்ல வேண்டும் எனும் கருத்தை தெரிவிக்கும்படி அமைந்திருக்கும். இது மட்டுமின்றி மேலும் பல கருத்துக்களும் இப்பாடலில் இடம் பெற்றிருக்கும் .

எந்தப் பக்கம் காணும் போதும்

வாழ்வில் வரும் கஷ்டங்களை நாம் கடந்து செல்ல வேண்டுமே தவிர, அதை நினைத்து கவலைப் பட்டு தேங்கி விடக்கூடாது என்பதை அழகாக எடுத்துரைத்திருக்கும் தர்மதுரை திரைப்படத்தின் “எந்த பக்கம்” பாடல். இப்பாடலை எழுதியதற்காக வைரமுத்து அவர்களுக்கு தேசிய விருது வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இன்பமும், துன்பமும் வாழ்வின் ஒரு அங்கம். அதைக் கடந்து செல்வதே சரியான அணுகுமுறை என்பதை இப்பாடல் நமக்கு தெரிவிக்கும்.

இன்னும் என்ன தோழா

“யாரும் இல்லை தடை போட, உன்னை மெல்ல எடை போட, நம்பிக்கையில் நடை போட சம்மதமே! “.

இதை வரிகள் என்று சொல்வதை விட வெற்றிப்பாதையின் மந்திரம் என்றே சொல்லலாம். ஏழாம் அறிவு திரைப்படத்தில் அமைந்துள்ள “இன்னும் என்ன தோழா” பாடல் எத்தனை முறை கேட்டாலும் மீண்டும் மீண்டும் நம்மை ஊக்குவிக்க தவறாத பாடலாக இருந்து வருகிறது. இப்பாடலை பாடலாசிரியர் பா. விஜய் எழுதியுள்ளார்.

Secret of success

“நேர்மை தான் வெற்றியின் ரகசியமே” என்ற உண்மையை உரக்கச் சொல்லி, நம்மை ஊக்குவித்த ஒரு பாடல் பாய்ஸ் திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள “சீக்ரட் ஆஃப் சக்ஸஸ்” பாடல். இப்பாடலில் வாலியின் வாலிப வரிகளல் புத்துணர்ச்சியை கொடுக்கும் வகையில் அமைந்திருக்கும்.

இந்த காலத்து இளைஞர்களுக்கு ஏற்றவாறு, அவர்களின் பாணியிலேயே அவர்களுக்கு அறிவுரை கூறும் வகையில் இப்பாடலின் வரிகள் எழுதப்பட்டிருக்கும்.

டிக் டிக் டிக்.

ஜெயம் ரவி நடிப்பில் வெளிவந்த “டிக் டிக் டிக்” திரைப்படத்தின் டைட்டில் பாடலான “இவ்வத்தின் நுதிகாண” எனும் பாடல், ஒரு செயலை நாம் செய்து முடிக்க எந்த விதமான எண்ணத்துடன் தடைகளை எதிர்கொள்ள வேண்டும் என்பதை எடுத்துச் சொல்லியிருக்கும்.

மதன் கார்க்கி எழுதியுள்ள “விதி சிறிது, மதி பெரிது, தடை சிறிது, விடை பெரிது, பொருள் சிறிது, அருள் பெரிது ” எனும் வரிகள் வெற்றியை எதிர்நோக்கி காத்திருப்பவர்களின் எண்ணம் எவ்வளவு கூறாகவும் சீராகவும் இருக்க வேண்டும் என்பதை உணர்த்தி இருக்கும்.

நிமிர்ந்து நில்

“தடைகளை உடைத்திடு, தாமதம் அதை விடு” எனும் கங்கை அமரனின் வரிகள் சாதிக்க விரும்புபவர்களுக்கு விருப்பமான வரிகளாக இருந்து வருகிறது. யுவன் சங்கர் ராஜாவின் கம்பீர இசையிலும் சங்கர் மகாதேவனின் ஊக்கம் அளிக்கும் குறளிலும் ஒலிக்கும் இப்பாடல் ஒவ்வொரு நாளும் தவறாமல் கேட்க வைக்கும் Motivation பாடலாக அமைந்துள்ளது.

முன் செல்லடா.

“விதி மேல் பழியை போடாமல், நீ உன் மேல் பழியைப் போடு, ஆண்டவன் கொஞ்சம் தூங்கட்டும் உன் வாழ்வின் காரணம் தேடு”.

நம் வாழ்வில் சந்திக்கும் தோல்விகளுக்கும், கஷ்டங்களுக்கும் பிறரை பழி போடாமல் நாமே பொறுப்பேற்று முன் நோக்கி செல்ல வேண்டும் எனும் கருத்தை அழகாக கூறியிருக்கிறது முன் செல்லடா பாடல். இப்பாடலை மதன் கார்க்கி எழுதியுள்ளார்.

நெஞ்சே எழு

ஏ ஆர் ரகுமான் இசையமைத்து பாடியுள்ள நெஞ்சே எழு பாடல் உண்மையிலேயே கேட்போரின் நெஞ்சத்தை எழ வைத்து தன்னம்பிக்கை கொடுக்கும் என்பதில் சந்தேகமில்லை. ” வலியால் உன் உயிர் தேய்ந்தாலும், உன் காதல் அழியாது” எனும் வரிகள், நாம் காதலுடன் நேசிக்கும் எந்த ஒரு விஷயத்தின் மீதும் உள்ள காதல் ஒரு போதும் பொய்யாகாது, அதை வெல்ல நாம் துணிவுடன் போராட வேண்டும் என்பதை எடுத்துரைக்கும். இப்பாடலை குட்டி ரேவதி மற்றும் ஏ.ஆர்.ரஹ்மான் இணைந்து எழுதியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இது போன்ற ஊக்கமளிக்கும் பாடல்களை திங்கள் கிழமை மட்டுமின்றி, நாள்தோறும் சூரியன் FM-ல் கேட்டு வாழ்வில் அடுத்தகட்டத்திற்கு அனைவரும் பயணிக்க வேண்டும் என வாழ்த்துகிறோம்.

கேளுங்க கேளுங்க கேட்டுகிட்டே இருங்க !!!!