Cinema News Specials Stories

ஆடையின் ஓராண்டு வெற்றி!!!

அமலாபாலின் துணிச்சலான நடிப்பில் வெளிவந்த திரைப்படம் ஆடை. இந்த திரைப்படம் வெளியாகி ஒரு வருடம் நிறைவடைகிறது. அமலாபாலின் திரையுலக வாழ்க்கையில் ஒரு தவிர்க்க முடியாத வெற்றிப்படமாக ஆடை அமைந்தது.

ஆடை திரைப்படத்தை ரத்னகுமார் இயக்க விஜி சுப்பிரமணியன் தயாரித்தார். இத்திரைப்படத்தில் அமலாபாலுடன் இணைந்து விவேக் பிரசன்னா, ரம்யா சுப்பிரமணியன், சரித்திரன், ஸ்ரீரஞ்சனி ஆகியோர் நடித்திருப்பர். அமலாபால் ஏற்று நடித்த காமினி கதாபாத்திரம் ஒரு துணிச்சலான தைரியமான பெண்ணின் கதாபாத்திரமாக சித்தரிக்கப்பட்டிருக்கும்.

தனியார் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக பணிபுரியும் காமினிக்கு திடீரென்று ஏற்படும் சிக்கலிலிருந்து எப்படி தப்பிக்கிறார் என்பதை மையமாக வைத்து ஆடை திரைப்படம் எடுக்கப்பட்டிருக்கும். உடைகள் எதுவும் இன்றி ஒரு காலியான கட்டிடத்தில் மாட்டிக்கொண்டு எப்படி ஒரு பெண் தன் மானத்தையும், உயிரையும் காப்பாற்றிக் கொள்கிறாள் என்பதை தத்ரூபமாக இயக்குனர் ரத்தினகுமார் படமாக்கியிருப்பார்.

அதுமட்டுமின்றி பிராங்க் ஷோக்கள் எப்படி ஒருவரின் வாழ்க்கையை மாற்றி விடும், அதன் விளைவுகள் ஒருவரை எப்படி மனரீதியாக பாதிக்கும் எனும் சமூக கருத்தையும் இப்படம் உள்ளடக்கியிருக்கும். கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் பல கதைகளை சமீபத்தில் தமிழ்சினிமா பார்த்திருந்தாலும், ஆடை திரைப்படம் அதிலும் மாறுபட்ட ஒரு துணிச்சலான கதைக்களத்தை கொண்டு அமைந்திருந்தது.

பிரதீப் குமாரின் இசையும் இப்படத்தின் விறுவிறு காட்சிகளுக்கு ஏற்ப பொருந்தி இருந்தது. இப்படத்தின் ரிலீசுக்கு முன் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் குறித்தும், ட்ரெய்லர் குறித்தும் பல்வேறு விமர்சனங்கள் வந்திருந்தாலும், இப்படம் வெளியான பின்பு இது சமூகத்திற்கு தேவையான ஒரு நல்ல படைப்பு என்றே விமர்சகர்களால் கொண்டாடப்பட்டது.

அமலாபாலின் திரையுலக வாழ்க்கையில் அவர் ஏற்று நடித்த வித்தியாசமான கதாபாத்திரங்களில் முதன்மையான கதாபாத்திரமாக காமினி கதாபாத்திரம் இருக்கிறது. இதுபோன்ற படங்கள் வெற்றி அடைவதால் கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதாபாத்திரங்களை தேர்வு செய்வதில் அமலா பால் உட்பட பல நடிகைகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.