Cinema News Specials Stories

அஜித்தும் அன்பும்!

Ajith

அஜித் தனது ரசிகர்களுக்காக ஒரு பத்திரிகை சந்திப்பு, ஒரு திரைப்பட நிகழ்வு என எதிலும் கலந்து கொள்வதில்லை என்று பலர் கூறலாம். ஆனால் அவர் அப்படி கலந்து கொள்ளாமல் இருப்பதே தன்னுடைய ரசிகர்களுக்காகத்தான் என்பது அஜித்தின் உண்மையான ரசிகர்களுக்கு தெரியும்.

2011 ஆம் ஆண்டு ஏப்ரல் 29 ஆம் தேதி அதிரடியான ஒரு அறிவிப்பை வெளியிட்டார் அஜித். ரசிகர் மன்றத்தை கலைப்பது குறித்த அறிவிப்பு தான் அது. தமிழகம் முழுக்க பெரியளவில் பேசப்பட்டது இந்த விஷயம். தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருக்கும் எவரும் இப்படி ஒரு செயலை செய்ய மாட்டார்கள் என்று கூறினார்கள். பின்னாட்களில் அவரது அறிவிப்புக்கான அர்த்தம் அனைவருக்கும் புரிந்தது.

அந்த அறிவிப்பின் போது அஜித் கூறியிருந்த விஷயம் இதுதான். “நீண்ட நாட்களாகவே என்னைச் சிந்திக்க வைத்த ஒரு கருத்தைச் சொல்ல இன்றே உகந்த நேரம் என கருதி இந்த அறிக்கையை வெளியிடுகிறேன். நான் என்றுமே ரசிகர்களை, எனது சுயநலத்துக்காக பயன்படுத்தியதில்லை. எனது தனிப்பட்ட விருப்பு, வெறுப்புக்காக அவர்களை கேடயமாகப் பயன்படுத்தி கொண்டதும் இல்லை, பயன்படுத்தவும் மாட்டேன்.

நான் நடித்த படங்கள் நன்றாக இருந்தால், அதற்கு ஆதரவு தரவும், சரியாக இல்லாவிட்டால் விமர்சிக்கவும் ரசிகர்களுக்கு உரிமை உண்டு. எனது திரைப்படத்தை ரசிக்கும் ரசிகர்கள் அனைவரும் என் இயக்க உறுப்பினர்கள் இல்லை என்பதை நான் அறிவேன். என் ரசிகர்களிடையே இக்காரணத்தைக் கொண்டு நான் வித்தியாசம் பார்ப்பதில்லை, பார்க்கவும் மாட்டேன்.

கோஷ்டி பூசல், ஒற்றுமையின்மை, தலைமையின் கட்டுப்பாட்டிற்கு இணங்காமல் தன்னிச்சையாக செயல்படுவது, தனிப்பட்ட அரசியல் கருத்துக்காக நற்பணி இயக்கத்தை பயன்படுத்துவது என்ற பல்வேறு காரணங்கள் என் எண்ண ஓட்டத்திற்கு உகந்ததாக இல்லை.

சமுதாய நல பணிகளில் ஈடுபடுவது கூட யாருக்கும் இடையூறு இல்லாமல் குறிப்பாக தங்களது குடும்பத்திற்கு சுமையாக இல்லாமல் செய்ய வேண்டும் என்பதையே வலியுறுத்தி வருகிறேன். நலத் திட்டங்கள் செய்வதற்கு இயக்கம் என்ற அமைப்பு வேண்டாம், நல் உள்ளமும் எண்ணமும்போதும் என்பதே என் கருத்து” என கூறியிருந்தார்.

இந்த அறிவிப்பு வெளியாவதற்கான காரணம் என்ன தெரியுமா? அஜித்தை காண்பதற்காக ரசிகர்கள் அவரது வீட்டின் முன் பிறந்தநாளுக்கு 2 நாட்களுக்கு முன்பே வந்து காத்திருந்து கூச்சலிடத் தொடங்கியுள்ளனர். சில ரசிகர்கள் சாப்பிடாமல் நீண்ட தூரம் பயணப்பட்டு வந்து காத்திருந்துள்ளனர். இதையெல்லாம் பார்த்து மனமுடைந்த அஜித் இந்த பிரச்னை குறித்து ஆழமாக யோசிக்கத் தொடங்கினார். ஒரு நடிகனுக்கு ரசிகர்கள் இருக்க வேண்டும். ரசிக வெறி கொண்ட ரசிகர்கள் இருக்கக் கூடாது. ரசிகர்களை நல்வழிப் படுத்த வேண்டும். ரசிகர்கள் எனக்காக நேரத்தை வீணடிக்காமல் அவர்கள் வாழ்க்கையை பார்க்க வேண்டும் என்று விரும்பினார். அதன் விளைவாக எடுத்தது தான் அந்த முடிவு.

அதுமட்டுமின்றி சமீபத்தில் அஜித் ரசிகர்கள் சிலர் அரசியல் சர்ச்சையில் சிக்கிய போது, “அரசியலுக்கு வரும் எண்ணமில்லை. நேரடியாகவோ மறைமுகமாகவோ அரசியலில் ஈடுபடும் எண்ணமும் இல்லை. எனது பெயரோ, புகைப்படமோ அரசியல் நிகழ்வுகளில் இடம்பெறுவதை விரும்பவில்லை.

எனது படங்களில் அரசியல் சாயம் இருக்கக்கூடாது என்பதில் தெளிவாக உள்ளேன். எனக்கு உள்ள அரசியல் விருப்பு வெறுப்புகளை பிறர் மீது திணிக்க விரும்பவில்லை. வரிசையில் நின்று வாக்களிப்பதே அதிகபட்ச அரசியல் தொடர்பு. ரசிகர்களும் தனிப்பட்ட அரசியல் நிலைப்பாட்டை பிறர் மீது திணிக்காதீர்கள். வாழு, வாழ விடு” என்று அறிக்கை வெளியிட்டுள்ளார்.

கொரோனா சூழலில் வலிமை படம் மிகவும் தாமதமான சமயத்தில் ரசிகர்களில் சிலர் பல்வேறு பொது நிகழ்ச்சிகளில் வலிமை அப்டேட் வேண்டுமென கேட்டு கூச்சலிட்டு வந்தனர். இந்த நிகழ்வுகள் அதிகரித்துக் கொண்டே வர, ஒரு கட்டத்தில் “என் மீதும் என் படங்கள் மீதும் அபரிமிதமான அன்பு கொண்டு எதையும் எதிர்பாராமல் அன்பு செலுத்தும் என் உண்மையான ரசிகர்களுக்கும் மக்களுக்கும் வணக்கம்.

கடந்த சில நாட்களாக என் எனும் பெயரில் வலிமை அப்டேட் கேட்டு அரசு, அரசியல், விளையாட்டு மற்றும் பல்வேறு நிகழ்வுகளில் சிலர் செய்யும் செயல்கள் என்னை வருத்தமுற செய்கிறது. பொறுமையாக இருங்கள். உரிய நேரத்தில் அறிவிப்பு வரும்.

உங்களுக்கு சினிமா பொழுதுபோக்கு, எனக்கு சினிமா ஒரு தொழில். நான் எடுக்கும் முடிவுகள் என் தொழில் மற்றும் சமூக நலன் சார்ந்தவை. நம் செயல்களே சமூகத்தில் நம் மீது மரியாதையை கூட்டும்” என்று அறிக்கை வெளியிட்டார்.

இப்படி பல விஷயங்கள் அஜித் குறித்து சொல்லிக் கொண்டே இருக்கலாம். அனைத்து சிக்கலான சூழ்நிலைகளிலும் தனது ரசிகர்களை நல்வழிப்படுத்த வேண்டும் என்பது மட்டுமே அவரது நோக்காக இருக்கும். மேம்போக்காக இந்த விஷயங்களை அணுகும் பலருக்கும் இந்த விஷயம் புரிவதில்லை.

இறுதியாக ஒரு சம்பவம். சமீபத்தில் தேர்தல் வாக்களிப்பு சமயத்தில், கொரோனா சூழலில் தனக்கு முன்பு வந்து செல்ஃபி எடுத்தவரின் மொபைலை பிடுங்கி வைத்து கொண்டார் அஜித். சிறிது நேரத்திற்கு பின் அந்த நபரை அழைத்து பேசி இனி இவ்வாறு செய்யாதீர்கள் என்று கூறி மொபைலை திரும்ப கொடுத்தார்.

பொது இடத்தில் எப்படி இருக்க வேண்டும் என்பதை உணர்த்து விதமாகவே அஜித் அவ்வாறு செய்தார். இப்படியாக பல உதாரணங்களை சொல்லிக் கொண்டே போகலாம். அஜித் எனும் ஆளுமையை ரசிகர்கள் கொண்டாடுவது இந்த பிரத்யேக குணங்களால் தான். அதனால் தான் ரசிகர் மன்றங்களை கலைத்த போதும் ரசிகர்களின் அன்புக்குரியவராக அஜித் இருக்கிறார். ரசிகர்கள் மீதான அஜித்தின் அன்பும் என்றும் நிலைத்திருக்கும்.

நடிகர் அஜித் அவர்களுக்கு சூரியன் FM சார்பில் பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம்.

Article By MaNo