Cinema News Specials Stories

தமிழ் சினிமாவின் தலைசிறந்த 10 நடிகர்கள்!

இன்றைய தமிழ் சினிமாவில் கதாநாயகர்கள் என்றாலே இவர்கள் தான் எப்போதும் முன்னிலையில் இருப்பார்கள். இவர்களைத் தாண்டி நல்ல திரைப்படங்கள் வெளியாகும் போது, அந்த கதையின் கதாபாத்திரங்கள், புதுமுகங்கள் கூட திறமையின் அடிப்படையில் பேசப்படுவார்கள். ஆனால் இப்போது நாம் பார்க்கப் போகும் 10 நடிகர்களுக்கான ரசிகர் வட்டம் என்பது எப்போதும் நிலையானதாக இருக்கும். அதன் அடிப்படையில் அந்த 10 கதாநாயகர்கள் குறித்து இப்போது பார்ப்போம்

ரஜினிகாந்த்

70ஸ், 80ஸ் கிட்ஸ் முதல் 2K கிட்ஸ் தலைமுறை வரை அனைத்து தலைமுறைகளையும் தன்வசம் ஈர்த்து, தமிழ் சினிமாவை ஆட்சி செய்து வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இத்தனை வயதிலும் கதாநாயகனாக நடிக்கக் கூடிய ஒரே இந்திய நடிகர் என்ற பெருமைக்குரியவர். மக்களும் அதனை ஏற்றுக் கொள்கிறார்கள். அதனால் தான் அவர் தமிழ் சினிமாவின் முடிசூடா மன்னனாக இன்று வரை விளங்கிவருகிறார்.

ரஜினிகாந்த் என்ற பெயரின் மீதான ஈர்ப்பு தமிழ் சினிமா உள்ளவரை நிலைத்து நிற்கும். அவரது நடிப்பும், ஸ்டைலும் பல தலைமுறைகள் கடந்தாலும் பேசுபொருளாகவே இருக்கும். தமிழ் சினிமாவிற்கு கிடைத்த பொக்கிஷங்களில் ஒருவர் ரஜினிகாந்த் என்றால் அது மிகையாகாது.

கமல்ஹாசன்

தமிழ் சினிமாவுக்கு கிடைத்த மற்றுமொரு மாபெரும் பொக்கிஷம் கமல்ஹாசன். சினிமாவிலேயே பிறந்து வளர்ந்து வேரூன்றி நிற்கும் சிகரம் இவர். கடந்த சில வருடங்களில் வேறு சில காரணங்கள் காரணமாக படங்கள் எதிலும் நடிக்கவில்லை, அதற்கு முன்பு நடித்த படங்களும் சரியாக ஓடவில்லை. அவரது காலம் முடிந்து விட்டது என பலரும் பேசிவந்த நிலையில், இந்த வருடம் அவர் நடிப்பில் உருவான விக்ரம் திரைப்படம் வெளியாகி இந்திய அளவில் வசூல் சாதனை படைத்தது. தமிழ் சினிமா ரசிகர்கள் அனைவரும் படத்தை மாபெரும் அளவில் கொண்டாடினர்.

இதுவரை தான் சினிமாவில் சம்பாதித்த அனைத்தையும் நவீன சினிமாவிற்காகவும், நல்ல சினிமாவிற்காகவுமே செலவழித்தவர். சினிமாவின் எதிர்காலத்தை கணித்து அதற்கேற்ப செயல்படக்கூடியவர். சுனாமி முதல் பல விஷயங்களை நிகழ்வதற்கு முன்பே அவரது படங்களில் பேசியிருப்பார். இன்றைய சினிமா தலைமுறைக்கு மட்டுமின்றி, இனி வரப்போகும் அத்தனை தலைமுறைக்கும் ஒரு சினிமா பாடமாக இவரது வாழ்க்கை இருக்கும்.

விஜய்

தற்போதைய தமிழ் சினிமாவின் பாக்ஸ் ஆபிஸ் கிங் என்றால் அது இவர்தான் என திரைத்துறையில் உள்ள பலரும் கூறும் ஒரு நடிகர் விஜய். அறிமுகமானது முதல் இன்று வரை அதே இளமையோடும், துள்ளலோடும், திரையில் தோன்றி ரசிகர்களை குதூகலப்படுத்தி கமர்ஷியலாக மாஸ் காட்டும் நடிகர் விஜய். குறிப்பாக இவரது படங்களில் பாடல்கள் மற்றும் நடனம் சிறப்பாக இருக்கும். தமிழ் சினிமாவில் நன்றாக நடனக்கூடிய நடிகர்களில் முதன்மையானவர் என பல நடன இயக்குநர்களாலும் பாரட்டப்பட்டவர்.

காதல், காமெடி, சென்டிமென்ட், ஆக்‌ஷன் என அனைத்தும் இவருக்கு கைவந்த கலை. ஆரம்பத்தில் பல்வேறு வித்தியாசமான கதைகளில் நடித்திருந்தாலும் இன்று பெரிதாக ரிஸ்க் எதுவும் எடுக்காமல் முழுக்க முழுக்க தன்னுடைய ரசிகர்களுக்காக கமர்ஷியல் ஹிட் படங்களை மட்டுமே கொடுத்து வருகிறார்.

இந்நிலையில் வாரிசு படத்திற்கு பிறகு லோகேஷ் கனகராஜ் உடன் கைகோர்த்திருக்கும் படமானது ஒரு முழுநீள கேங்ஸ்டர் திரைப்படமாக இருக்கும் என்பது ரசிகர்களிடையே மாபெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. தடைகளை படிகளாக மாற்றி தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக திகழ்ந்து கொண்டிருக்கும் நடிகர் விஜய் புதுமுகங்களுக்கு ஒரு நம்பிக்கை நாயகனாக என்றும் விளங்குவார்.

அஜித்

எந்த சினிமா பின்புலமும் இன்றி தமிழ் சினிமாவில் கால்பதித்து இன்றைய தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகனாக விளங்கி வருபவர் அஜித். ரசிகர் மன்றங்களை கலைத்து விட்டு, சினிமாவை தனது பணியாக செய்து கொண்டு, தன் விருப்பத்திற்கேற்ப துப்பாக்கி சுடுதல், Long Bike Ride இப்படி இன்னும் பல்வேறு விஷயங்களில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டே தன் வழியில் பயணித்தாலும், இவரை பற்றியோ அல்லது இவரது படத்தை பற்றியோ ஏதாவது ஒரு தகவல் வெளியானால் போதும் சமூகவலைதளங்களை இவரது ரசிகர்கள் ஆக்கிரமித்து விடுவார்கள். அந்த அளவு ஆக்டிவான ரசிகர்களை கொண்டவர் நடிகர் அஜித்.

அஜித் இருந்தால் போதும் படம் ஹிட் என தயாரிப்பாளர்களுக்கு தெரியும். விஜய் மற்றும் அஜித் படங்களுக்கு இடையே வசூல் போட்டி இன்று வரை நீடித்துக் கொண்டே இருக்கிறது. அது ஒவ்வொரு படத்திற்கும் மாறவும் செய்யும். தமிழ் சினிமாவில் அஜித் என்ற பெயரை விட, விஜய் என்ற பெயரை விட, விஜய் அஜித்/அஜித் விஜய் என இருவரின் பெயர்களும் தான் தொடர்ச்சியாக இன்று வரை பேசப்பட்டுக் கொண்டே இருக்கிறது.

சூர்யா

நடிகர் கமல்ஹாசனுக்கு பிறகு தமிழ் சினிமாவில் புதிய முயற்சிகளுக்கு அதிகம் வாய்ப்பளிப்பவர் நடிகர் சூர்யா என்றே சொல்லலாம். சினிமாவில் அறிமுகமானது முதல் இதுவரை எந்த கதாபாத்திரத்திற்கும் பொருந்தி போகக் கூடிய ஒரு கதாநாயகன் இவர். இதில் ஆச்சரியம் என்னவெனில் புதிய முயற்சிகளாக இருந்தாலும் இவர் நடிக்கும் படங்கள் பெரும்பாலும் வெற்றிப் படங்களாகவே அமையும். அந்த அளவு ஒவ்வொரு கதைக்கும் கதாபாத்திரத்திற்கும் இவரின் மெனக்கெடல்கள் தெரியும்.

அதே சமயம் பஞ்ச் பேசி மாஸ் ஹீரோவாகவும் நடித்துக் காட்டுவார். இவரது மாஸ் நடிப்பில் உருவான சிங்கம் 1, 2 & 3 ஆகிய 3 பாகங்களும் மிகப்பெரிய ஹிட். திடீரென கதைக்கேற்ற சாதாரண நாயகனாக நடிப்பார். இப்படி இவர் நடித்த சூரரைப் போற்று, ஜெய் பீம் இரு படங்களும் வெற்றி. இப்படி எந்த விதமாகவும் நடிப்புக்காக தன்னை அர்ப்பணித்துக் கொள்வதோடு, தான் நடிக்கும் படங்களை வெற்றிப்படங்களாக மாற்றிக் காட்டும் நடிகர் சூர்யாவுக்கு எப்போதும் தமிழ் சினிமாவில் தனி இடம் உண்டு.

விக்ரம்

விஜய், அஜித் தமிழ் சினிமாவில் அறிமுகமானது முதலே இவரும் நடித்து வந்தாலும் தன்னுடைய நடிப்புத் திறமையை வெளிப்படுத்த முடியாமல், ரசிகர்களை சென்று சேர முடியாமல் தவித்து வந்தார். சேது படத்தில் விக்ரமை கதாநாயகனாக நடிக்க வைத்து அதற்கு முற்றுப்புள்ளி வைத்தார் இயக்குநர் பாலா. அன்று உருவான சீயான் விக்ரம், இன்று வரை தமிழ் சினிமாவில் வெற்றி நடை போட்டு வருகிறார். இந்த வருடம் அவருக்கு மிகவும் சிறப்பான வருடமாக அமைந்தது.

Chiyaan Vikram Photos

மகன் துருவ் உடன் இணைந்து மகான் படத்தில் வெறித்தனமாக நடித்திருந்தார். அதே போல் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் மிக மிக முக்கியமான ஆதித்த கரிகாலன் வேடமேற்று அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். மேலும் இப்படத்தில் ப்ரமோஷன் பணிகளின் போது தஞ்சை பெரிய கோவில் குறித்து நடிகர் விக்ரம் பேசிய வீடியோ சமூகவலைதளங்களில் பெரும் கைத்தட்டல்களை வாங்கிக் குவித்தது.

தமிழ் சினிமாவில் கமல்ஹாசனை காட்டிலும் அதிக வேடங்கள் அணிந்து நடித்தவர் என்றால் அது விக்ரம் மட்டுமே. சமீபத்தில் வெளியான கோப்ரா படத்தில் கூட அத்தனை வேடங்களில் நடித்திருப்பார். இப்படி படத்திற்கு படம் மாறுபட்ட வேடங்களில் வித்தியாசமான கதைக்களத்தில் நம்மை ரசிக்க வைக்கும் சீயான் விக்ரம் இனிவரும் வருடங்களில் அடுத்தடுத்த கட்டத்திற்கு செல்ல வேண்டும்.

தனுஷ்

இன்றைய தமிழ் சினிமாவில் சிறப்பான நடிப்பை வெளிக்காட்டக் கூடிய ஒரு நடிகர் என்றால் அனைவருக்கும் சட்டென நினைவுக்கு வருவது தனுஷ் தான். தமிழ் சினிமாவின் முக்கியமான கலைஞர்கள் பலரும் செதுக்கிய சிற்பம் என்று கூட சொல்லலாம். தனது நடிப்புத் திறமையால் கோலிவுட்டில் தொடங்கி பாலிவுட் சென்று இன்று ஹாலிவுட்டிலும் கால் பதித்து தமிழுக்கு பெருமை சேர்த்துக் கொண்டிருப்பவர்.

அனைத்து மொழிகளிலும் தனுஷின் நடிப்பை பார்த்து ஜாம்பவான்கள் பலரும் பாராட்டி வருகின்றனர். ராஞ்சனா திரைப்படம் மற்றும் ஷமிதாப் படத்தில் அமிதாப் உடனான தனுஷின் நடிப்பு இந்திய சினிமா ரசிகர்கள் அனைவராலும் ரசிக்கப்பட்டது. இப்படியாக தனுஷ் நடிக்கும் படங்களுக்கு உலகெங்கும் வரவேற்பு உண்டு. இந்த வருடம் வெளியான திருச்சிற்றம்பலம் திரைப்படத்தில் ஒரு சாதாரண Delivery Boy-ஆக வந்து தமிழ் சினிமாவின் தலை சிறந்த நடிகர்களான பாரதிராஜா, பிரகாஷ் ராஜ் இருவருடனும் இணைந்து அவ்வளவு அழகாக நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார்.

படம் மாபெரும் வெற்றிபெற்று வசூலை அள்ளிக்குவித்தது. இது தவிர்த்து பாடலாசிரியர், பாடகர், இயக்குநர் என்ற முகங்களும் தனுஷுக்கு உண்டு. தமிழ் சினிமாவிற்கு ஒரு முகம் வரைந்தால் அதில் நிச்சயம் தனுஷின் முகம் தனியாக தெரியும்.

சிம்பு

தனது தந்தையால் தமிழ் சினிமாவில் அறிமுகம் செய்யப்பட்டாலும், தனக்கென தனி ஸ்டைல் மற்றும் பாணியை உருவாக்கி தமிழ் சினிமா ரசிகர்களை ஆட்கொண்டவர் சிம்பு. இளம் வயதிலேயே கதாநாயகனாகி விட்டாலும் அதற்குரிய திறமைகளை தாண்டி நடனம், பாடல் பாடுவது, மேடைப் பேச்சாளர், இயக்குநர் என பன்முகங்கள் கொண்ட கலைஞனாக தன்னை வெளிக்காட்டி பிரமிக்க வைத்தார்.

கதாநாயகனான பின் கடந்த சில வருடங்களுக்கு முன் வரை சினிமா துறையில் சிம்புவிடம் நிறைய சிக்கல்கள், அவர் பார்க்காத பிரச்னைகளே இல்லை என்று கூறலாம். அதையெல்லாம் தாண்டி கடந்த சில வருடங்களாக அவர் படங்களில் நடிக்கவே இல்லை. ஆனாலும் அவ்வப்போது ட்ரெண்டிங்கில் இடம்பிடித்து விடுவார். அவர் பற்றிய செய்திகள் சமூகவலைதளங்களில் வந்து கொண்டே இருக்கும். அவ்வளவு பிரச்னைகளையும் தீர்த்து விட்டு, அவற்றையெல்லாம் கடந்து வந்து இன்று மறுபடியும் தான் விட்டுச் சென்ற இடத்தை தானே பிடித்திருக்கிறார் சிம்பு.

நம்மை சுற்றி நம்மை புரிந்து கொண்ட சிலர் இருந்தால் போதும் வாழ்வில் வரும் பிரச்னைகளை கடந்து விடலாம் என்பதற்கு முன்னுதாரணமாய் நம் கண்முன் நின்று கொண்டிருக்கிறார். தொடர்ச்சியாக ஈஸ்வரன், மாநாடு, வெந்து தணிந்தது காடு என அடுத்தடுத்து ஹிட் படங்கள் கொடுத்து வருகிறார். அடுத்தடுத்து இவருடைய படங்கள் ரிலீசுக்காக வரிசை கட்டி நிற்கின்றன.

சிவகார்த்திகேயன்

தற்போதைய தமிழ் சினிமாவில் விஜய், அஜித்திற்கு அடுத்து மிகப்பெரிய பாக்ஸ் ஆபிஸ் ஓபனிங் கொண்ட நடிகராக சிவகார்த்திகேயன் விளங்கி வருகிறார். தொலைக்காட்சி நிகழ்ச்சியில் அறிமுகமாகி படிப்படியாக தனது திறமைகளை வெளிப்படுத்தி தனக்கென தனி ரசிகர் வட்டத்தை உருவாக்கினார். பின் சினிமாவில் அறிமுகமாகி படிப்படியாக கதாநாயகனாக வளர்ந்து இன்று தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகனாக வளர்ந்து நிற்கிறார்.

Sivakarthikeyan

சின்னத்திரை நட்சத்திரங்களும் திறமையிருந்தால் வெள்ளித்திரைக்கு வரலாம் என்பதற்கு எடுத்துக்காட்டாக விளங்குபவர் சிவகார்த்திகேயன். இவருடைய இந்த மிகப்பெரிய வளர்ச்சிக்கு காரணம் வேறு எதுவுமில்லை. உழைப்பின் மீதான அவரின் ஈடுபாடும், அவருடைய திறமைகளை அவர் வளர்த்துக் கொண்ட விதமும் தான் என்பது அனைவரும் அறிந்ததே. அதுமட்டுமின்றி இவரது படங்கள் குறிப்பாக குழந்தைகள் மற்றும் குடும்பங்களால் பெரிதும் ரசிக்கப்படுகிறது என்பதே இவரின் மாபெரும் வெற்றிக்கு காரணம். காமெடியனுக்கு ஹீரோயிசம் வராது என்று கூறினர், அதை எதிர் நீச்சல் படத்தில் மாற்றியமைத்தார்.

ஹீரோவாக நடிக்கலாம், நடிகனாக முடியாது, சென்டிமென்ட் காட்சிகளில் நடிக்கத் தெரியவில்லை என்றனர். டான் படத்தில் அதையும் மாற்றியமைத்துள்ளார். இப்போது இவரது நடனத்திற்கென தனி ரசிகர்கள் உருவாகியுள்ளனர். மேலும் பாடல் எழுதுகிறார், பாடல் பாடுகிறார், இப்படி தன்னால் என்னென்ன முடியுமென ஒவ்வொன்றையும் செய்து காட்டிக் கொண்டேயிருக்கிறார். இனி வரும் படங்களில் சிவகார்த்திகேயனின் அடுத்த கட்டத்தை எதிர்நோக்கி காத்திருப்போம்.

விஜய் சேதுபதி

சினிமாவில் ஜெயிக்க வயது ஒரு பொருட்டல்ல என்று நிரூபித்த நடிகர் விஜய் சேதுபதி. அறிமுகமான படம் முதல் இன்று வரை அவர் ஏற்று நடிக்கும் படங்கள் அத்தனையும் வித்தியாசமானவை. அவரது கதாபாத்திரங்களும் வித்தியாசமானவை. அத்தனை கதாபாத்திரங்களிலும் அழுத்தமாக பொருந்தக் கூடியவர்.

ரஜினி, கமல், விஜய் என அனைவருக்கும் வில்லனாக நடித்த ஒரே நபர். தான் வில்லனாக நடித்த அத்தனை படங்களிலும் கதாநாயகர்களை தாண்டி தன்னை ரசிக்கவைக்கும் படியான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார். விஜய் சேதுபதி வில்லனாக திரையில் தோன்றும் போது வரும் கைத்தட்டல்களே அதற்கு சான்று. இவ்வளவு பெரிய நடிகனான பின்னும் Guest Role பண்ணத் தயங்காதவர்.

வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி கதாநாயகனாக நடித்துள்ள விடுதலை திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படி கதையின் நாயகனாக மட்டுமே நடிப்பேன் என முரண்டு பிடிக்காமல் தான் ஏற்கும் கதாபாத்திரத்தை கதையின் நாயகனை தாண்டி ரசிக்க வைக்கும் விஜய் சேதுபதிக்கு தமிழ் சினிமாவில் பெருமளவு ரசிகர்கள் உண்டு. வரும் வருடங்களில் இன்னும் வித்தியாசமான கதாபாத்திரங்களில் விஜய் சேதுபதியை பார்த்து கொண்டாடுவோம்.

Article By MaNo