Cinema News Specials Stories

2022 – தமிழ் சினிமாவின் தலை சிறந்த 10 இயக்குநர்கள்!

2022 ஆம் ஆண்டு தமிழ் சினிமா ரசிகர்களால் பெரிதும் ரசிக்கப்பட்ட, பேசப்பட்ட 10 இயக்குநர்கள் குறித்து தற்போது பார்ப்போம்.

மணிரத்னம்

தமிழ் சினிமாவில் உங்களுக்கு பிடித்த இயக்குநர் யாரென்று கேட்டால் 90% பேர் கூறும் பெயர் ‘மணி ரத்னம்’. தமிழில் பகல் நிலவு படத்தின் மூலம் 1985ஆம் ஆண்டு இயக்குநராக அறிமுகமானவர் இன்று வரை தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநராக திகழ்ந்து வருகிறார். சினிமாவை அணு அணுவாக ரசித்து உருவாக்குவதே இவரது வெற்றி. அந்த வகையில் இந்த வருடம் 2022-ல் வெளியான பொன்னியின் செல்வன் பாகம் 1 சினிமா ரசிகர்களால் பெரிதும் கொண்டாடப்பட்டது.

Mani-Ratnam

கிட்டத்தட்ட 40 ஆண்டுகளாக வெற்றி இயக்குநராக நிலைத்து நிற்பது என்பது ஒரு இமாலய சாதனை. இவருடைய படங்கள் அனைத்தும் இவருக்கு முன்பும், பின்பும் சினிமாவிற்கு வந்த இயக்குநர்கள் பலருக்கும் பாடமாக அமைந்துள்ளது. இனி வரும் காலங்களிலும் அப்படித்தான் இருக்கும்.

லோகேஷ் கனகராஜ்

மாநகரம் என்ற படம் தமிழில் வெளிவந்த போது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. படத்தினை அறிமுக இயக்குநர் ஒருவர் இயக்கியுள்ளார் என்பது மட்டுமே தெரியும். அடுத்ததாக கைதி திரைப்படம் வெளியான போது தான் அவர் பெயர் லோகேஷ் கனகராஜ் என்று தெரிந்தது. படத்தை தமிழ் சினிமா ரசிகர்கள் கொண்டாடி தீர்த்தனர். அடுத்து தமிழ் சினிமாவின் பாக்ஸ் ஆபிஸ் கிங் விஜயுடன் மாஸ்டர் திரைப்படம். தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநரானார் லோகேஷ் கனகராஜ்.

அவரது படங்கள் அனைத்தும் வெற்றிப்படங்களாக அமைந்தன. கமல்ஹாசன் படங்களை மட்டுமே பார்த்து சினிமா கற்றுக்கொண்டு இயக்குநரானவர் கமல்ஹாசனை சந்திக்க நேர்ந்தது. அப்பொழுது நிகழ்ந்த அற்புதம் தான் விக்ரம் திரைப்படம். இந்த வருடம் வெளியாகி இந்திய சினிமா ரசிகர்கள் அனைவரையும் வியக்க வைத்தது. அடுத்து மீண்டும் விஜயுடன் இணைந்து ஒரு முழு கேங்ஸ்டர் கதையை உருவாக்கவுள்ளார். இந்த வருடம் தமிழில் அதிகம் பேசப்பட்ட இயக்குநர் என்றால் அது இவர் தான்.

பிரஷாந்த் நீல்

KGF & KGF 2 திரைப்படங்கள் இந்திய சினிமா வரலாற்றில் ஒரு மாபெரும் தாக்கத்தை ஏற்படுத்திய படங்கள் என்றே சொல்லலாம். குறிப்பாக ஒரு ஹீரோ கதாபாத்திரத்தை எப்படியெல்லாம் அதிகப்படியான மாஸ் கொடுத்து திரையில் காண்பிக்கலாம், அதனை பார்வையாளர்களிடமும் கடத்தலாம் என்பதற்கு இனி வரும் காலங்களில் KGF தான் Reference-ஆக இருக்கும். அப்படி படத்தில் வரும் ஒவ்வொரு கதாபாத்திரத்தின் மாஸும் கொஞ்சமும் குறையாமல் அனைவருக்கும் ரசிக்கும்படி உணர்வூப்பூர்வமாக காட்சிப்படுத்தியிருப்பார் பிரஷாந்த் நீல்.

Prashanth Neel talks about the 'emotional madness' that went into creating  'K.G.F: Chapter 2' - The Hindu

ஒரு சாதாரண டயலாக் வைத்து படத்தின் காட்சிகளில் யாரும் எதிர்பார்க்க முடியாத அளவில் தாக்கத்தை ஏற்படுத்தியிருப்பார். அப்படி ஒரு தாத்தா சொல்லும் உணர்ச்சிப்பூர்வமான டயலாக்கிற்கு பிறகுதான் Toofan பாடலே ஆரம்பிக்கும். தமிழில் KGF படத்தின் மாஸ் டயலாக்குகள் மிகப்பெரிய அளவில் ஹிட்டானவை. மாஸ் படங்களுக்கு புது திரைக்கதை வடிவத்தை கொடுத்து இந்திய சினிமா வரலாற்றில் தனி இடம் பிடித்துள்ள பிரசாந்த் நீல் இந்த வருடத்தில் மறக்க முடியாத இயக்குநர்.

ராஜமெளலி

மஹதீரா படத்திலிருந்தே தென்னிந்திய சினிமா ரசிகர்களுக்கு பரிட்சயமான இயக்குநர் ராஜமெளலி, நான் ஈ திரைப்படத்தின் மூலம் வட இந்திய சினிமா உலகை திரும்பி பார்க்க வைத்தார். அடுத்து வெளியான பாகுபலி 1 மற்றும் பாகுபலி 2 திரைப்படங்கள் உலக சினிமாவே இந்திய சினிமாவை திரும்பி பார்க்கும்படி செய்தது. அந்த வகையில் இந்த வருடம் இவரது இயக்கத்தில் வெளியான RRR திரைப்படமும் பெரும் வெற்றிபெற்றுள்ளது.

தென்னிந்திய சினிமாவில் இயக்குநர் சங்கருக்கு பிறகு அனிமேஷன் தொழில்நுட்பத்தை பிரமிக்க வைக்கும் வகையிலும், நம்பும் வகையிலும் கையாளக் கூடிய மற்றுமொரு இயக்குநர் ராஜமெளலி. அதற்கு அவரது அனைத்து திரைப்படங்களுமே சாட்சி. அந்த வகையில் இவரும் இந்த வருடத்தில் அதிகம் பேசப்பட்ட இயக்குநர்.

பார்த்திபன்

தமிழ் சினிமா ஒரு பக்கம் கமர்ஷியலாக உலகத் தரத்திற்கு உயர்ந்து வந்தாலும், கலைத்தன்மையில் உலகத் தரத்திற்கு அதனை உயர்த்த அயராது உழைப்பவர் இயக்குநர் மற்றும் நடிகர் பார்த்திபன். கலை, தொழில்நுட்பத்துடன் தனது வித்தியாசமான எண்ணங்களையும், புதிய முயற்சிகளையும் ஒருங்கிணைத்து யாரும் எதிர்பாராத வகையில் ஒரு புதுமையான சினிமாவை உருவாக்கிக் காட்டக் கூடியவர். ஒத்த செருப்பு படத்தில் படம் முழுக்க தனது கதாபாத்திரம் மட்டுமே திரையில் வரும்படி தனி ஒருவனாக நடித்து, இயக்கி ஆச்சரியப்படுத்தியிருப்பார்.

படம் முழுக்க பார்த்திபனையே பார்த்தாலும் படம் சலிப்பு தட்டாது. அடுத்த படியாக உலகின் முதல் Non Linear Single Shot திரைப்படமாக இரவின் நிழல் படத்தை உருவாக்கி உலக சினிமா ஜாம்பவான்கள் பட்டியலில் இடம்பிடித்துள்ளார். இந்த வருடம் வெளியான இப்படம் பலராலும் பேசப்பட்டு வரும் படமாக அமைந்துள்ளது. இப்படி தனது வித்தியாசமான, புதிய முயற்சிகளால் தனக்கென தனி ரசிகர் வட்டத்தை உருவாக்கி வைத்திருக்கிறார் பார்த்திபன்.

பா.ரஞ்சித்

தமிழ் சினிமாவில் குறிப்பிட்ட அரசியல் மட்டுமே பல வருடங்களாக பேசப்பட்டு வந்த நிலையில், அதனை மாற்றியமைத்தவர் பா.ரஞ்சித். தனது திரைப்படங்களின் மூலம் ஒடுக்கப்பட்ட மக்கள் அனைவருக்குமான அரசியலை முகத்திற்கு நேராக, பிறரை காயப்படுத்தாமல், ஒரு உரையாடலாக முன்வைக்கிறார். பெண்களின் சிந்தனையும் செயலும் எப்படி இருக்க வேண்டும் என இவரது படங்களில் அற்புதமாக காட்சிப்படுத்தியிருப்பார். இப்படி இத்தனை விஷயங்களையும் படத்தின் சுவாரசியமும் குன்றாத வகையில் படங்களில் சேர்த்திருப்பார்.

எனவே இவருடைய படங்கள் எப்போது வெளியானாலும் பெரிய அளவில் பேசப்படும். அப்படித்தான் இந்த வருடம் காதலை மையப்படுத்தி இவர் இயக்கத்தில் உருவாகியிருந்த நட்சத்திரம் நகர்கிறது திரைப்படமும் பேசப்பட்டது. இவற்றை தாண்டி படிப்பு, கலாச்சார, பண்பாட்டு மேம்பாட்டு கலை நிகழ்ச்சிகள், நிகழ்வுகள் என பல்வேறு சமூக முன்னேற்றத்திற்கான பணிகளையும் தொடர்ந்து செய்கிறார். இதுவே இவருடைய தொடர் வெற்றிக்கு காரணம்.

கார்த்திக் சுப்பாராஜ்

குறும்படங்கள் வளர்ச்சியடைந்த காலத்தில் அதன் மூலம் சினிமா கற்றுக்கொண்டு, தமிழ் சினிமாவின் பாணியையே மாற்றிய இளம் இயக்குநர்களில் ஒருவராக பீட்சா படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் கார்த்திக் சுப்பாராஜ். தனது தனித்துவத்தை நிலைநிறுத்தும் வகையில் இயக்குநராக, எழுத்தாளராக, தயாரிப்பாளராக தமிழ் சினிமாவிற்கு ஜிகர்தண்டா, இறைவி, மேயாத மேன், மெர்குரி, பேட்ட உள்ளிட்ட திரைப்படங்களை தமிழ் சினிமாவிற்கு கொடுத்துள்ளார்.

Karthik-Subbaraj

அப்படி இந்த வருடம் அப்பா சீயான் விக்ரம், மகன் துருவ் விக்ரமை வைத்து இவர் இயக்கிய மஹான் திரைப்படம் ஓடிடியில் வெளியாகி பெரிய ஹிட்டானது. படம் தியேட்டர் மெட்டீரியலாக இருந்தும் தியேட்டரில் வெளியாகாதது ரசிகர்களிடையே வருத்தத்தை உண்டாக்கினாலும், படத்தின் வெற்றி அதனை மறக்க வைத்தது. ஜிகர்தண்டாவில் பார்த்து வியந்த பாபி சிம்ஹாவை மஹான் திரைப்படத்தில் மீண்டும் காண முடிந்தது. இப்படியாக இந்த வருடத்தில் மறக்க முடியாத மஹான் திரைப்படத்தை கொடுத்த கார்த்திக் சுப்பாராஜ் அடுத்தடுத்து பழையபடி வெற்றிப்படங்களை கொடுக்க வாழ்த்துக்கள்.

நெல்சன் திலீப்குமார்

நெல்சன் திலீப்குமார் தமிழ் சினிமாவில் கோலமாவு கோகிலா திரைப்படத்தின் மூலம் காலடி எடுத்து வைத்து, டாக்டர் படத்தின் மூலம் காலூன்றி நின்றார். டாக்டர் படத்தில் சிவகார்த்திகேயன் இதுவரை நடித்திராத ஒரு கதாபாத்திரத்தில் வித்தியாசமாகவும் அழகாகவும் நடித்திருந்தார். நெல்சனின் டார்க் காமெடி இந்த படத்தில் பெரிய அளவில் ரசிக்கப்பட்டது. அடுத்ததாக இந்த வருடம் அவரது இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான பிரமாண்டமான திரைப்படம் தான் பீஸ்ட். இந்த வருடம் வெளியான அதிக எதிர்பார்ப்பு கொண்ட முதல் தமிழ் படமும் கூட.

Nelson-Dilipkumar

படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் வசூலை அள்ளிக் குவித்தது. இதையடுத்து தற்போது தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாருடன் கைகோர்த்து ஜெயிலர் படத்தை இயக்கி வருகிறார் நெல்சன். ஜெயிலர் படத்தில் நெல்சன் அடுத்த கட்டத்திற்கு செல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஹெச்.வினோத்

சதுரங்க வேட்டையாடி தமிழ் சினிமாவில் முன்னணி இடத்திற்கு வந்த ஹெச்.வினோத், தீரன் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஒரு ஆளுமையாக மாறினார். அடுத்ததாக தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோ அஜித்குமாரை இயக்கும் வாய்ப்பு அவரைத் தேடி வந்தது. நேர்கொண்ட பார்வை படத்தை இயக்கி ஹாட் ட்ரிக் வெற்றியை பதிவு செய்தார். அடுத்ததாக மீண்டும் அஜித்குமாருடன் இணைந்து வலிமை படத்தை இயக்கினார். இந்த வருட ஆரம்பத்தில் வெளியான வலிமை திரைப்படம் வசூல் வேட்டை ஆடியது. வலிமை அப்டேட்டிலிருந்து படம் வெளியாகும் வரை அதிகம் பேசப்பட்ட இயக்குநர் ஹெச்.வினோத் என்பது அனைவரும் அறிந்த ஒன்று.

Valimai' director H Vinoth opens up about working with Ajith, calls him “a  man of positivity” | Tamil Movie News - Times of India

தற்போது மூன்றாவது முறையாக அஜித்குமாருடன் இணைந்து துணிவு படத்தை இயக்கியுள்ளார். 2023 பொங்கலுக்கு வெளியாகவுள்ள துணிவு திரைப்படம் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை உண்டாக்கியுள்ளது. மேலும் வாரிசுடன் இத்திரைப்படம் மோதவுள்ளதால் பட ரிலீசுக்காக தமிழ் சினிமா ரசிகர்கள் அனைவரும் காத்திருக்கின்றனர். தமிழ் சினிமாவில் நுழைந்ததுமே தனது திரைப்படங்களின் மூலம் ஹாட் ட்ரிக் வெற்றியை பதிவு செய்த ஹெச்.வினோத், அஜித் குமாருடன் இணைந்து ஹாட் ட்ரிக் வெற்றியை பதிவு செய்வாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

ப்ரதீப் ரங்கநாதன்

2019 ஆம் ஆண்டு கோமாளி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஒரு இளம் இயக்குநர் அறிமுகமானார். படம் அனைத்து தரப்பினராலும் ரசிக்கும்படியாக இருந்தது. அந்த படத்திற்காக இயக்குநருக்கு விருதும் கிடைத்தது. அந்த மேடையில் விருது வாங்கிய கையுடன், அடுத்து நான் சிறந்த நடிகருக்கான விருது பெறுவேன் என அந்த இயக்குநர் கூறுகிறார். 2022 இறுதியில் யாரும் எதிர்பார்க்காத வேளையில் அந்த இயக்குநரின் 2வது படம் வெளியாகிறது. அதில் அவரே கதாநாயகனாக நடித்திருக்கிறார். அதுதான் லவ் டுடே திரைப்படம்.

படம் வெளியாகி பட்டிதொட்டியெங்கும் ஹிட் அடிக்கிறது. இத்தனைக்கும் ஒரு சாதாரண புதுமுகம், Startup Heroine தான் நடித்திருக்கின்றனர். யுவன் சங்கர் ராஜா இசை. இதையெல்லாம் தாண்டி படத்தின் நடிகரும், இயக்குநருமான ப்ரதீப் ரங்கநாதன் தமிழகமெங்கும் அனைவராலும் கொண்டாடப்படுகிறார். ஏனெனில் படமானது அனைத்து மக்களின் வாழ்க்கைக்கு நெருக்கமானதாகவும், அனைவராலும் ரசிக்கும்படியானதாகவும் அமைந்திருந்தது.

கோமாளி படத்திற்கான விருது மேடையில் அவர் கூறியபடியே அவருடைய நடிப்பிற்காக அடுத்த விருது வாங்கலாம் என பலரும் கூறி வருகின்றனர். இப்படியாக இந்த வருடத்தில் அனைவராலும் கொண்டாடப்பட்ட ஒரு இயக்குநர் ப்ரதீப்.

Article By MaNo