Specials Stories

கலையுலக சிற்பி பாலச்சந்தர்!!!

ஒரு துறையில் காலடி எடுத்து வைப்பதே பெரிதாக கருதப்படும் சூழலில், அந்தத் துறையில் 50 ஆண்டுகள் தன்னிகரற்ற சாதனையாளராக வலம் வருவது சாதாரணம் இல்லை. அப்படி 50 ஆண்டுகள் கலைப் பணி செய்து தன் படைப்புகளால் மக்கள் மனதில் இருந்து என்றும் நீங்கா ! நீக்க முடியா! கலை காதலனாக இருந்து வருகிறார் இயக்குனர் சிகரம் பாலச்சந்தர். 1930ஆம் ஆண்டு திருவாரூர் மாவட்டத்திலுள்ள நன்னிலத்தில் பிறந்த இவருக்கு சிறுவயதிலிருந்தே நாடகங்களிலும், சினிமாவிலும் ஒரு அளவற்ற ஆர்வம்.

“கலைஞனாக இருக்க முதலில் கலைகளின் காதலனாக இருக்க வேண்டும்” என்ற கூற்றுக்கு ஏற்ப தனது பள்ளிப் பருவத்திலிருந்தே திரைப்படங்களை காதலிக்கத் தொடங்கினார் பாலச்சந்தர்.

எம்.கே.தியாகராஜ பாகவதர் படங்களை விரும்பிப் பார்த்த பாலச்சந்தருக்கு, தானும் ஒரு சினிமா கலைஞனாக வேண்டும் என்ற ஆசை துளிர்விடத் தொடங்கியது. சிதம்பரத்தில் உள்ள அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் விலங்கியல் படித்துக்கொண்டிருந்த இவர் கல்லூரியில் நடைபெறும் பேச்சு, எழுத்து மற்றும் நாடகப் போட்டிகளில் மிகுந்த ஆர்வத்துடன் பங்கேற்றுள்ளார்.  ஒவ்வொரு போட்டியிலும் தன் திறமையை பாலச்சந்தர் சிறப்பாக வெளிப்படுத்தியதால் கல்லூரியில் பாலசந்தரை அடையாளம் காணாதோர் ஒருவருமில்லை.

K Balachander's 2nd death anniversary: Remembering the revolutionary  filmmaker - Movies News

படிப்படியாக தனது கலை ஆர்வத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல நினைத்த பாலச்சந்தர் தனது நண்பர்களுடனும், சக கலைஞர்களுடன் இணைந்து சில நாடகங்களை எழுதி, இயக்கி நடித்து வந்துள்ளார். பாலச்சந்திரன் திரைக்கதை அம்சத்தைப் மூலதனமாக வைத்து எடுக்கப்பட்ட அனைத்து நாடகங்களும் ரசிகர்களை எளிதில் கவரும் வகையில் அமைந்தது. பல்வேறு துறையை சார்ந்தவர்களும் பாலசந்தரின் நாடகத்தை விரும்பிப் பார்த்த காலம் உண்டு.

அப்படி இவர் இயக்கி நடித்த “மேஜர் சந்திரகாந்த்” எனும் நாடகம் பல திரையுலக பிரபலங்களும் பார்த்து  பாராட்டும் விதத்தில் அமைந்தது. இந்த நாடகத்தை ரசித்துப் பார்த்த நடிகர் எம்.ஜி.ஆர், தான் நடித்து வெளிவந்த “தெய்வத் தாய்” திரைப்படத்தில் பாலசந்தருக்கு திரைக்கதை எழுதும் வாய்ப்பை அளித்தார். அதே சமயத்தில் நகைச்சுவை நடிகர் நாகேஷ் கதாநாயகனாக நடித்து வெளிவந்த சர்வர் சுந்தரம் திரைப்படத்திற்கும் பாலச்சந்தர் திரைக்கதை எழுதினார். இந்த இரு படங்களுமே ஒட்டுமொத்த தமிழ்த் திரையுலகினரும் பாலச்சந்தரை திரும்பிப் பார்க்க வைக்கும் படி அமைந்தது.

9 best films of K Balachander! | News | Zee News

1965 ஆம் ஆண்டு முதன் முதலில் ஒரு திரைப்பட இயக்குனராக தனது பயணத்தை “நீர்க்குமிழி” படம் மூலம் தொடங்கினார். திரைப்படங்களின் மையக் கருத்துக்கு ஏற்ப திரைக்கதை அமைப்பது அவ்வளவு எளிதான காரியமில்லை. ஆனால் கதை அமசத்திலும் திரைக்கதை நகர்விலும் ஒரு புதிய புரட்சியை ஏற்படுத்தினார் பாலசந்தர். இவரின் படங்களை நாம் திரையில் காணும்போது “ஒரு திரைப்படத்தை தான் பார்க்கிறோமா ? அல்ல ஒருவரின் வாழ்க்கையை அவர்களுடன் சேர்ந்து வாழ்கிறோமா? ” என்ற சந்தேகம் ஏற்படும் அளவிற்கு எதார்த்தமான திரைக்கதையை பாலச்சந்தர் வடிவமைத்திருப்பார். நடிகர்களுக்காக திரைப்படங்களை பார்த்து பழகிய ரசிகர்களை, ஒரு இயக்குனருக்காக திரையரங்குகளுக்கு அழைத்துச் சென்றது பாலசந்தரின் திரைக் காவியங்கள்.

ஒட்டுமொத்த தமிழ் சினிமாவையும் பாலச்சந்தருக்கு முன், பாலச்சந்தருக்கு பின் என இரு பாகங்களாக பிரிக்கலாம். “இப்படித் தான் சினிமா இருக்க வேண்டும்” என்பதை மாற்றி “இப்படியும் சினிமா இருக்கலாம்” என்பதை உரக்கச் சொன்னவர் நம் இயக்குனர் சிகரம்.

நாம் விரும்பி பணியாற்றும் துறை நமக்கு  என்ன கொடுத்துள்ளது என்பதை தாண்டி அத்துறைக்கு நாம் எதை விட்டுச் செல்கிறோம் என்பதுதான் அத்துறையில் நமது அடையாளமாக கருதப்படும். அந்த வகையில் பாலச்சந்தர் உருவாக்கிய கலைக் கப்பலின் பயணிகளாகவே திரைக்கடலில் இந்த தமிழ் சினிமா பயணிக்கிறது என்று சொன்னால் அது மிகை இல்லை. தனது இயக்கத்திலும், தயாரிப்பிலும் இவர் அறிமுகப்படுத்திய புதுமுகங்கள்தான் இன்று தமிழ் சினிமாவிற்கு விலாசமாக வலம் வந்து கொண்டிருக்கின்றனர். சொல்லப்போனால் இவர் அறிமுகம் செய்த கலைஞர்களுக்கு இந்திய சினிமாவில் இன்று அறிமுகமே தேவையில்லை என்று கூட சொல்லலாம். 

தமிழ் சினிமாவின் இரு பெரிய பிரம்மாண்ட தூண்களாக கருதப்படும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் உலகநாயகன் கமலஹாசன் ஆகிய இருவரையும் திரைத் தோட்டத்தில் விதைத்து வைத்த வித்துவான் பாலச்சந்தர். நாசர், டெல்லி கணேஷ், சார்லி, பிரகாஷ்ராஜ், மதன் பாபு ஆகியோரையும் தமிழ் சினிமாவில் அறிமுகப் படுத்தி அவர்களை தன் கலை தோட்டத்துப் பூக்களாக பூக்கச் செய்துள்ளார். இவர்கள் மட்டுமின்றி பாலசந்தர் அறிமுகப்படுத்திய கதாநாயகிகளுக்கு எப்போதுமே மவுசு அதிகம் தான். ஸ்ரீதேவி, ஸ்ரீவித்யா, ஜெயப்பிரதா, ஜெயசுதா, ஜெயசித்ரா, சுஜாதா, சரிதா, கீதா என கலையுலகின் தங்க சிலைகளையும் இயக்குனர் சிகரம் அறிமுகப்படுத்தியுள்ளார்.

K Balachander: Trendsetter and Giant Among Film-Makers
K.Balachander with Rajini & Kamal

கதாநாயகிகளை Duet-ற்கு மட்டுமே உபயோகப் படுத்திக் கொண்டிருந்த பல இயக்குனர்கள் மத்தியில், கதாநாயகிகளை மையமாக வைத்தே கதை அமைத்த ஒரு கலைப் பித்தன் பாலசந்தர். இவர் இயக்கிய மனதில் உறுதி வேண்டும், கல்கி, அவள் ஒரு தொடர்கதை போன்ற திரைப்படங்கள் இன்றைய ஹீரோயின் centric திரைப்படங்களுக்கு விதைகளாக பார்க்கப்படுகிறது.

தரமான படைப்புகளை தானே தயாரித்துக் கொடுக்கவும் தயங்கவில்லை இயக்குனர் சிகரம். பாலச்சந்தரின் சொந்த தயாரிப்பு நிறுவனமான கவிதாலயா புரொடக்ஷன்ஸ் பல உன்னத வெற்றிப் படைப்புகளை சினிமா  ரசிகர்களுக்கு மட்டுமின்றி தொலைக்காட்சி மற்றும் டிஜிட்டல் ரசிகர்களுக்கும் வழங்கிக் கொண்டிருக்கிறது. கவிதாலயா தயாரித்து மணிரத்னம் இயக்கி வெளிவந்த ரோஜா திரைப்படம் மூலம் தான் இசைப்புயல் இந்திய சினிமாவில் வீசத் தொடங்கியது என்பது குறிப்பிடத்தக்கது… ஆம் ஏ.ஆர்.ரஹ்மானின் திரையுலக வாழ்க்கைக்கு அடித்தளம் அமைத்தது பாலச்சந்தரின் கவிதாலயா தான்.

பாலச்சந்தரை கௌரவப்படுத்தும் வகையில் இந்திய அரசு 1987ஆம் ஆண்டு இவருக்கு பத்மஸ்ரீ விருது அளித்துள்ளது. ஒரே ஒரு தேசிய விருது என்பதே திரையுலக கலைஞர்களின் கனவாக இருக்கையில், தனது வாழ்நாளில் 8 தேசிய விருதுகளை வாங்கி குவித்துள்ளார் இயக்குனர் சிகரம். அந்த எட்டு விருதுகளில் ஒன்று இந்திய கலைத்துறையில் உயரிய விருதாக கருதப்படும் தாதா சாகேப் பால்கே விருது என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படி சினிமாவையும் பல சினிமா கலைஞர்களையும் கட்டமைத்த இந்த கலைச் சிற்பி தலைமுறைகள் தாண்டியும் தன் படைப்புகளில் வாழ்வார் என்பதே மறுக்கமுடியாத உண்மை. இவர் தொட்ட சிகரத்தை தொட சீறிக் கொண்டிருக்கும் இந்தத் தலைமுறை படைப்பாளிகளுக்கும் தெரியும் இயக்குனர் சிகரம் என்றால் அது பாலசந்தர் ஒருவரே என்று.

Top K Balachander movies you can watch online | Entertainment News,The  Indian Express

பாலச்சந்தர் அவர்களின் 91வது பிறந்த நாளில் அவரை நினைவு கொள்வதில் பெருமிதம் கொள்கிறது சூரியன் FM.