Specials Stories

U19 கிரிக்கெட் உலகக் கோப்பை – 5வது முறையாக இறுதிப் போட்டியில் ’இந்தியா’

U19 கிரிக்கெட் உலகக் கோப்பையில் தொடர்ந்து 5வது முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறியது இந்தியா! தென்னாப்பிரிக்காவில் நடைபெற்று வரும் 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை அரை இறுதி போட்டியில், தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான பரபரப்பான ஆட்டத்தில் இந்திய அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதன் மூலம் தொடர்ந்து 5வது முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது.

இந்திய U19 கேப்டன் உதய் சஹாரன் டாஸ் வென்று, தொடரில் முதல் முறையாக சேஸிங்கைத் தேர்வு செய்தார். முதலில் பேட் செய்த தென்னாப்பிரிக்கா அணி 50 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 244 ரன்கள் சேர்த்தது , தென்னாப்பிரிக்கா அணியில் அதிகபட்சமாக தொடக்க ஆட்டக்காரரும் விக்கெட் கீப்பருமான லுவான்-ட்ரே பிரிட்டோரியஸ் 76 ரன்கள் சேர்த்தார்.

இந்தியா அணியில் ராஜ் லம்பானி 3 விக்கெட்களையும், முஷீர் கான் 2 விக்கெட்களையும் வீழ்த்தினர். நடப்பு U19 உலகக் கோப்பையில் இந்திய அணிக்கு எதிராக ஒரு அணி 200 ரன்களுக்கு மேல் அடித்திருப்பது இதுவே முதல் முறையாகும்.
245 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பேட்டிங்கை தொடங்கிய இந்தியாவுக்கு முதல் பந்தே பெரும் இடியாக விழுந்தது.

தென்னாப்பிரிக்காவின் இடது கை வேகப்பந்து வீச்சாளர் குவேனா மபாகா வீசிய முதல் பந்திலேயே இந்திய தொடக்க ஆட்டக்காரர் ஆதர்ஷ் சிங் , விக்கெட் கீப்பர் மான லுவான்-ட்ரே பிரிட்டோரியஸீடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் அர்ஷின் குல்கர்னி, தொடர்ந்து வந்த முஷீர் கான், பிரியன்ஷு மோலியா ஆகியோர் சொற்ப ரன்களில் வெளியேற 11 ஓவர்களில் வெறும் 34 ரன்கள் எடுத்து 4 விக்கெட்டுகளை இழந்திருந்தது இந்தியா.

நடப்பு U19 உலகக் கோப்பை தொடரில் தோல்வியே கண்டிராத இந்திய அணியின் வெற்றிப் பயணம் முடிவுக்கு வந்துவிடும் என்றே அனைவரும் எண்ணினர். ஆனால் அடுத்து களம் இறங்கிய கேப்டன் உதய் சஹாரன் மற்றும் சச்சின் தாஸ் ஜோடி இந்தியாவை மோசமான தொடக்கத்தில் இருந்து மீட்டெடுத்து 171 ரன்கள் சேர்த்து வலுவான பார்ட்னர்ஷிப்பை அமைத்தனர்.

தாஸ் 11 பவுண்டரிகள் மற்றும் 1 சிக்ஸருடன் 95 பந்துகளில் 96 ரன்கள் எடுத்து 43வது ஓவரில் ஆட்டமிழந்தார் . மறுபுறம் நிதானத்துடன் பேட் செய்த கேப்டன் சஹாரன் 124 பந்துகளில் 81 ரன்கள் எடுத்து அணியின் வெற்றிக்கு வழிவகுத்தார். கடைசி 3 ஓவரில் 18 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் அடுத்தடுத்து 3 விக்கெட்டுகள் விழுந்தாதால் கடைசி கட்டத்தில் ஆட்டம் விறுவிறுப்பாக சென்றது.

இருப்பினும் 8 பந்துகள் மீதம் இருந்த நிலையில் 245 ரன்கள் எனும் வெற்றி இலக்கை எட்டி 2 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது இந்தியா. U19 உலகக் கோப்பையில் 9வது முறையாகவும், தொடர்ந்து 5வது முறையாகவும் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது இந்திய அணி. இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்ற இளம் இந்திய அணியை சவுரவ் கங்குலி, கவுதம் கம்பீர் உள்ளிட்ட பல மூத்த வீரர்கள் பாராட்டியுள்ளனர் .

Article By Sathishkumar Manogaran