Cinema News Specials Stories

இதுவரை 12 முறை ஒன்றாக களமிறங்கியுள்ள விஜய், அஜித் திரைப்படங்கள்!

இன்றைய தமிழ் சினிமா ரசிகர்களை பொறுத்த வரையில் தீபாவளி, பொங்கல் எல்லாம் திருவிழா கிடையாது. என்றைக்கு விஜய், அஜித் திரைப்படங்கள் வெளியாகிறதோ அதுதான் அவர்களை பொறுத்த வரையில் தீபாவளி, பொங்கல்.

விஜய், அஜித் திரைப்படங்கள் வெளியாகும் நாட்கள் தமிழகம் முழுக்க ஒரு திருவிழா போல இருக்கும். தமிழகம் முழுக்க உள்ள பல தியேட்டர்களிலும் விதவிதமாக, அதிக உயரமான பல கட் அவுட்கள் வைக்கப்பட்டு, விடியற்காலை முதல் காட்சிக்கு முன்பே பூஜை நடத்தி, தாரை தப்பட்டைகள் கிழிய ரசிகர்கள் நடனமாட அந்த நாளே கொண்டாட்டமாகத் தொடங்கும்.

அதன் பின்பு முதல் காட்சி கொண்டாட்டம். பின்னர் விமர்சனங்கள் என படம் வெளியான தினத்திலிருந்து கிட்டத்தட்ட ஒரு வாரத்திற்கு விஜய், அஜித் படங்களை பற்றிய பேச்சு தொடரும். இப்படியிருக்கக் கூடிய இன்றைய சூழலில் விஜய், அஜித் திரைப்படங்கள் இரண்டும் ஒரே நாளில் ரிலீஸ் ஆனால் தமிழ்நாடு எப்படி இருக்கும்?

இப்போதே அதைப்பற்றிய பேச்சு களைகட்டத் தொடங்கிவிட்டது. நீண்ட நாட்களுக்குப் பிறது 2023 பொங்கலுக்கு விஜய், அஜித் இருவரின் திரைப்படங்களும் ஒரே நாளில் வெளியாகிறது.

இதே போல் இதற்கு முன்பு எப்போது விஜய், அஜித் திரைப்படங்கள் ஒன்றாக களம் இறங்கின. அவை என்னென்ன படங்கள் எந்த வருடம் வெளியாகின என்பது குறித்து இப்போது பார்ப்போம்.

1996 ஆம் ஆண்டு ஜனவரி 12 ஆம் தேதி விஜய் நடித்த கோயமுத்தூர் மாப்ளே, ஜனவரி 15 ஆம் தேதி அஜித் நடித்த வான்மதி திரைப்படங்கள் வெளியாகின.

1996 ஆம் ஆண்டு பிப்ரவரி 18 ஆம் தேதி விஜய் நடித்த பூவே உனக்காக, அதே நாளில் அஜித் நடித்த கல்லூரி வாசல் திரைப்படங்கள் வெளியாகின.

1997 ஆம் ஆண்டு டிசம்பர் 19 ஆம் தேதி விஜய் நடித்த காதலுக்கு மரியாதை, டிசம்பர் 12 ஆம் தேதி அஜித் நடித்த ரெட்டை ஜடை வயசு திரைப்படங்கள் வெளியாகின.

1998 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 14 ஆம் தேதி விஜய் நடித்த நிலாவே வா, ஆகஸ்ட் 15 ஆம் தேதி அஜித் நடித்த உன்னிடத்தில் என்னை கொடுத்தேன் திரைப்படங்கள் வெளியாகின.

1999 ஆம் ஆண்டு ஜனவரி 29 ஆம் தேதி விஜய் நடித்த துள்ளாத மனமும் துள்ளும், பிப்ரவரி 5 ஆம் தேதி அஜித் நடித்த உன்னைத் தேடி திரைப்படங்கள் வெளியாகின.

2000 மே 19 ஆம் தேதி விஜய் நடித்த குஷி, மே 19 ஆம் தேதி அஜித் நடித்த உன்னை கொடு என்னை தருவேன் திரைப்படங்கள் வெளியாகின.

2001 ஆம் ஆண்டு ஜனவரி 14 ஆம் தேதி விஜய் நடித்த ப்ரண்ட்ஸ், அதே நாளில் அஜித் நடித்த தீனா திரைப்படங்கள் வெளியாகின.

2002 ஆம் ஆண்டு நவம்பர் 4 ஆம் தேதி விஜய் நடித்த பகவதி, அதே நாளில் அஜித் நடித்த வில்லன் திரைப்படங்கள் வெளியாகின.

2003 ஆம் ஆண்டு அக்டோபர் 24 ஆம் தேதி விஜய் நடித்த திருமலை, அதே நாளில் அஜித் நடித்த ஆஞ்சநேயா திரைப்படங்கள் வெளியாகின.

2006 ஆம் ஆண்டு ஜனவரி 15 ஆம் தேதி விஜய் நடித்த ஆதி, ஜனவரி 14 ஆம் தேதி அஜித் நடித்த பரமசிவன் திரைப்படங்கள் வெளியாகின.

2007 ஆம் ஆண்டு ஜனவரி 12 ஆம் தேதி விஜய் நடித்த போக்கிரி, அதே நாளில் அஜித் நடித்த ஆழ்வார் திரைப்படங்கள் வெளியாகின.

2014 ஆம் ஆண்டு ஜனவரி 9 ஆம் தேதி விஜய் நடித்த ஜில்லா, ஜனவரி 10 ஆம் தேதி அஜித் நடித்த வீரம் திரைப்படங்கள் வெளியாகின.

இப்படி கிட்டத்தட்ட 12 முறை ஒன்றாக களமிறங்கிய விஜய், அஜித் திரைப்படங்கள் 13வது முறையாக 2023 பொங்கலுக்கு களம் காணவுள்ளன. தமிழகத்தில் முன்னணி நட்சத்திரங்கள் இருவரின் திரைப்படம் ஒரே நாளில் வெளியாகும் என்ற அறிவிப்பே மக்களிடத்தில் பெரும் பேசுபொருளாகியுள்ள நிலையில், பொங்கல் கொண்டாட்டமும் தற்போதே ஆரம்பித்து விட்டது. வாரிசு Vs துணிவு ஹேஷ்டேக் தினமும் சமூகவலைதளங்களை ஆக்கிரமிக்கத் தொடங்கிவிட்டது.

அதே சமயம் தொடர்ச்சியாக இரு படங்களின் அப்டேட்டுகளும் வந்த வண்ணம் உள்ளன. எனவே 2023 பொங்கல் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு சிறப்பாக அமையும் என்பதில் எந்த சந்தேகமுமில்லை. வாரிசு, துணிவு இரு படங்களும் மாபெரும் வெற்றி பெற வேண்டுமென சூரியன் FM சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

Article By MaNo