Stories Trending

உறங்கி போன உன்னத கலைஞன்

54 ஆண்டுகளாக ஓய்வின்றி ஒலித்து கொண்டிருந்த குரல் இன்று ஓய்வெடுத்துக்கொண்டது…

மக்களின் மனதை அமைதி படுத்திய குரல் இன்று அமைதியானது…

தெய்வீகம் குடி கொண்டிருந்த குரல் இனி தெய்வமாய்…

இவர் குரல் ஒலிக்காத தமிழகத்தை இனி கற்பனை செய்து பார்க்க இயலவில்லை …

தலைமுறைகள் தாண்டி பாடி வந்த இந்த சூரியன் விடியாத அஸ்தமத்தை பூண்டது…

மூச்சு விடாமல் பாடி நம்மை வாய் பிளக்க வைத்த பாடகன் மூச்சுத்திணறலால் அவதிப்பட்டதை கண்ட உலகம் இவரின் நலத்திற்காக பிராத்தித்தது…

நலம் பெற்று மீண்டு வா, மீண்டும் பாட வா என தமிழகமே இவருக்காக ஒன்று சேர்ந்ததை கண்டு அந்த விண்ணுலகமும் இவரை அடைய  ஆசை கொண்டது போல…

மேடை பாடகராக ஆரம்பித்த இவர் பாடிய பாடல்களே இன்று பல மேடை பாடகர்கள் பாடும் பாடலாக ஒலித்து  கொண்டிருக்கின்றது…

எந்த மொழி பாடலாக இருப்பினும் அதன் சூழ்நிலை, வரிகளின் அர்த்தம் மற்றும் உச்சரிப்பை ஆராய்ந்துணர்ந்த பிறகே பாடுவார் இந்த பாடும் நிலா…

உலகில் எந்த பாடகரும் செய்யாத சாதனையாக தன் வாழ்நாளில் 16 மொழிகளில், 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட திரைப்பட பாடல்களையும், பல ஆல்பங்களையும் பாடியுள்ளார்.

தமிழ் சினிமாவை தமது குரலில் ஆண்டு வந்த சிம்மக்குரலோன் T M சௌந்தர்ராஜன் மற்றும் மெல்லிசை குரலோன் P B ஸ்ரீனிவாஸ் ஆகிய இருவரின் இடங்களையும் நிரப்பிய பெருமை இவரை சேரும்…

இரவில் ஒலிக்கும் இசைஞானியின் இசையோடு கலந்து மனதை நேரடியாக வருடும் பல பாடல்களுக்கு சொந்தக்காரர்..

கவிஞரின் வரிகளுக்கும், இசைஞானிகளின் இசைக்கும் உயிர் தந்த குரல் இனி நினைவுகளில் மட்டும்…

தத்துவத்தில் போதனையும்,

பக்தியில் தெய்வீகத்தையும்,

சோகத்தில் கண்ணீரையும்,

தோல்வியில் விரக்தியையும்,

ஏமாற்றத்தில் ஏக்கத்தையும்,

மகிழ்ச்சியில் உற்சாகத்தையும்,

காதலில் துள்ளலையும் தந்த உன்னத குரலோன் இந்த பாலசுப்ரமணியம்…

தென்னக மொழிகளில் தேர்ந்தவரான இவர் பல மாற்று மொழி படங்களின் குரலாகவும் இருந்துள்ளார்…

பாடலை தாண்டி, இசையமைப்பாளராகவும், நடிகராவும் முத்திரை பதித்த நிலா… பாடுவதில் ஒருவரால் இதனை மாற்றங்கள் நிகழ்த்த முடியுமா என்று வியந்து பார்க்க வைத்த வித்தகன்…

பாடலுக்கிடையே நாம் கேட்டு ரசித்த சிரிப்பையும், அழுகையையும், வசனத்தையும் சிறப்பாக கையாண்ட  ஆகச்சிறந்த கலைஞன்…

சூப்பர்ஸ்டாரின் ஓப்பனிங் – ஆக இருந்தாலும், உலக நாயகனின் நடிப்பாக இருந்தாலும் தனது பன்முக குரலால் உயிர் கொடுத்த பாட்டு பிரம்மன் இவர்…

கன்னட மொழியில் 1981 ம் ஆண்டு காலை 9 மணியிலிருந்து இரவு 9 மணி வரை இவர் பாடிய 21 பாடல்களே ஒரு பின்னணி பாடகர் ஒரு நாளில் பாடிய அதிகபட்ச பாடல்களாகும்.. தமிழில் 19 பாடல்களும், ஹிந்தியில் 16 பாடல்களும் ஒரு நாளில் பாடியுள்ளதும் சாதனை மகுடத்தை அலங்கரிப்பவையாகும்..

இசையுலகில் இவரின் இடம் எவராலும் நிரப்படலாம்…

ஆனால் இவர் மக்கள் மனதில் போட்ட சிம்மாசனம் எவராலும் நிரப்பட இயலாது…

தமிழக மூலைகளில் இவர் குரல் ஒலிக்காத இடமில்லை…

இவரின் குரலை சுவைக்காத மனிதரில்லை…

இவரை நினைக்காமல் இனி நாமில்லை…

இந்த தேகம் மறைந்தாலும் இசையாய் மலர்வேன் என்ற வரி எங்கோ ஒலித்துக்கொண்டிருக்கும் வரையில் SPB என்னும் இசைக்குரலோனிற்கு அழிவில்லை…