
A.L. விஜய் இயக்கத்தில் ஆர்யா, எமி ஜாக்சன் நடித்து வெளிவந்த மதராசப்பட்டினம் திரைப்படம் வெளியாகி இன்றுடன் 10 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைப்பதற்கு முன்பு இருந்த மதராசபட்டினத்தை தத்ரூபமாக திரையில் காட்டி இருப்பார் விஜய். நாசர், சதீஷ், எம்.எஸ் பாஸ்கர், அப்புகுட்டி, சம்பத்ராம் என பலரும் இப்படத்தில் நடித்திருப்பர்.
மெட்ராஸ் பிரசிடென்சியின் ஆளுநர் மகளாக இருக்கும் எமி ஜாக்சனுக்கும் சலவைத் தொழிலாளியான ஆர்யாவுக்கும் இடையே இருக்கும் அற்புதமான காதலை மையமாக வைத்து இப்படத்தின் கதை நகரும். ஆர்யாவின் பரிதி கதாபாத்திரமும் எமி ஜாக்சனின் எமி வில்கின்சன் அல்லது துரை அம்மாள் கதாபாத்திரமும் தமிழ் சினிமா ரசிகர்கள் மனதில் ஒரு சிறப்பிடத்தை பிடித்த காதல் கதாபாத்திரங்களாக மாறியது. எமி ஜாக்சன் நடித்த முதல் தமிழ் படம் மதராசபட்டினம் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜி.வி பிரகாஷின் பின்னணி இசையும் பாடல்களும் படத்தின் கதைக்கு உயிர் ஊட்டும் வகையில் அமைந்திருக்கும். இப்படத்தில் அமைந்த அனைத்து பாடல்களுமே சூப்பர் ஹிட்டானது. பூக்கள் பூக்கும் தருணம், வாம்மா துரையம்மா, ஆருயிரே போன்ற பாடல்கள் 2010 ஆம் ஆண்டின் ரசிகர்களின் மனம் கவர்ந்த பாடல்களாக அமைந்தது.

இப்படத்திற்கு பெரும்பாலும் நல்ல விமர்சனங்களே எழுந்தது. சுதந்திரத்திற்கு முன் இருந்த மெட்ராஸ்-ஐ அழகாக படமாக்கியதற்காக A.L. விஜய்க்கும், இப்படத்தின் ஒளிப்பதிவாளர் நிரவ் ஷாவிற்கும் விமர்சகர்கள் இடையே பாராட்டுக்கள் குவிந்தது.
காதலுக்கு மதம், இனம், நாடு, நிறம், மொழி என எதுவும் தேவை இல்லை என்பதை உணர்த்தும் வகையில் மதராசப்பட்டினம் அமைந்தது. படம் வெளியாகி இத்தனை ஆண்டுகள் கழித்தும் மக்கள் மனதில் நீங்காத காதல் காவியமாய் மதராசப்பட்டினம் நிலைக்கிறது.
