2026 Pongal celebration Special – தமிழர்களோட முக்கியமான பண்டிகைகளில் ஒண்ணு, இந்த தைத்திருநாள். ஒரு வருஷம் பிறக்குதுன்னா, முதலில் காலண்டர்ல போய் தேடக்கூடிய ஒரு நாள் அப்படினா, அது கண்டிப்பா தைத்திருநாளாகத்தான் இருக்கும். வருஷத்துல ‘லாங் லீவ்’ கிடைக்கிற ஒரே பண்டிகையும் இது தான். ஆனா, இந்த லீவை என்ஜாய் மட்டும் பண்ணுனா போதுமா? எதுக்காக இந்த நாட்களைக் கொண்டாடுகிறோம் என்று தெரிய வேண்டாமா? இவ்வளவு நாட்கள் நீங்க தெரியவில்லை என்றாலும் பரவாயில்லை, இன்னைக்கு இதை படிச்சு தெரிஞ்சுக்கோங்க.
போகித் திருநாள்
இது பண்டிகையோட முதல் நாள். போகித் திருநாளை பொதுவா “பழையன கழிதலும் புதியன புகுதலும்” அப்படித்தான் சொல்லுவாங்க. இத படிச்ச உடனே அந்த நாளோட முக்கிய நோக்கம் என்னனு உங்களுக்குப் புரிஞ்சிருக்கும். இருந்தாலும் நான் சொல்லக் கடமைப்பட்டிருக்கேன். வீட்டுல இருக்குற தேவையற்ற பொருட்களை நீக்கி, வீட்டை சுத்தம் செய்யறது தான் இதோட சிறப்பு. இந்த நாள் தான் மார்கழி மாசத்தோட கடைசி நாளும் கூட.
தைத்திருநாள்
இது பண்டிகையோட ரொம்ப முக்கியமான நாள். ஒரு படத்துல ‘ஹீரோ’ எப்படியோ, அதேபோல தான் இந்த நாலு நாள் கொண்டாட்டத்துல தைத்திருநாள் ரொம்ப முக்கியம். இந்த நாள் அப்போ என்ன பண்ணுவாங்கனா, வாசல் முழுக்க வண்ண வண்ணமா கோலம் போடுவாங்க. எங்க ஊர்ல எல்லாம் போகிப் பண்டிகை நைட்டே கோலம் போடத் தொடங்கிடுவாங்க, அப்பதான் அடுத்த நாள் விடியகாலையில கோலத்தை முடிக்க முடியும். அப்படி இல்லைனா விடியற்காலை மூணு மணிக்கே எழுந்து கோலம் போடுவாங்க. அதுக்கு அப்புறமா தான் இந்த நாளே தொடங்கும்.
முதல்ல விவசாயத்துக்கு உறுதுணையா இருக்குற சூரிய பகவானுக்கு நன்றி சொல்லி ஆரம்பிப்பாங்க. இந்த நாளோட முக்கிய நோக்கமே இதுதான். அப்புறம் வீட்டுக்கு வெளியில சூரிய ஒளி படக்கூடிய இடத்துல மண் அடுப்பு வச்சு, புதுப் பானையை வச்சு, அந்தப் பானையில கோலம் போட்டு, பானைக்குள்ள பால் ஊத்தி பொங்கல் வைப்பாங்க. அது பொங்கி வரும்போது குடும்பத்துல இருக்குற எல்லாரும் சேர்ந்து “பொங்கலோ பொங்கல்! பொங்கலோ பொங்கல்!” அப்படின்னு குலவையிடுவாங்க. பொங்கல் ரெடியான உடனே சாமிக்கு படைச்சுட்டு எல்லாரும் குடும்பமா உட்கார்ந்து சாப்பிடுவாங்க.

மாட்டுப் பொங்கல்
இந்த நாளோட முக்கிய நோக்கம், விவசாயத்துக்கு உறுதுணையா இருக்கிற மாடுகளைக் கொண்டாடுனும். உழைப்பவன் உழவன் என்றால், அவனுக்குத் தோள் கொடுப்பது கால்நடைகள். இந்த ஒரு வரி இந்த நாளோட அர்த்தத்தை அழகா சொல்லும்னு நினைக்கிறேன். என்னதான் முக்கியமான நாள் தைத்திருநாளா இருந்தாலும், எனக்குப் பர்சனலா பிடிச்சது மாட்டுப் பொங்கல்தான்.
அன்னைக்கும் விடியகாலையில் வாசல் முழுக்க கோலம் போட்டுதான் அந்த நாளை ஆரம்பிப்பாங்க. மாடுகளைக் குளிப்பாட்டி, கொம்புக்கெல்லாம் கலர் பூசி, அதோட உடம்புல அஞ்சு விரல்களால வண்ணத்தை பதிச்சு, கழுத்துல கலர் கலரா பலூன் கட்டி, மாடுகளைச் சிங்காரிச்சு அவ்வளவு அழகா மாத்திருப்போம். மாடு மட்டும் கண்ணாடியைப் பார்த்தா “இது நானா?” அப்படின்னு கேக்குற அளவுக்கு அலங்காரம் பண்ணுவோம். இந்த நாள்ல மாடுகளுக்காகவே தனியா பொங்கல் செய்வாங்க. அப்புறம் கரும்ப பத்தி சொல்ல மறந்துட்டேனே! எங்க வீட்டில மாட்டுப் பொங்கலுக்காக வாங்குற கரும்பை முதல்ல மாட்டுக்குக் கொடுத்துட்டு, அது சாப்பிட்டு மீதி இருக்கிறதைத்தான் எனக்குக் கொடுப்பாங்க. அந்த அளவுக்கு மாடுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து வழிபடுவாங்க. இந்த நாள்லதான் பல ஊர்கள்ல ஜல்லிக்கட்டு நடக்கும். அதைப்பத்தி உங்களுக்குச் சொல்ல வேண்டிய அவசியமே இருக்காது, ஏன்னா அது தமிழர்களோட வீர விளையாட்டுனு நம்ம எல்லாருக்குமே தெரியும்.
காணும் பொங்கல்
பொங்கல் பண்டிகையோட கடைசி நாள்தான் காணும் பொங்கல். இந்த நாளோட நோக்கம், நம்ம சொந்தக்காரங்க, பிரண்ட்ஸ் எல்லாரையும் பார்த்து பெரியவங்க கால்ல விழுந்து ஆசிர்வாதம் வாங்குறதுதான். இந்த நாள்ல சின்னப் பசங்களுக்கு நிறைய ‘காசு’ கிடைக்கும். சிட்டில இருக்கிறவங்க பீச், மால், தியேட்டர்னு போய் ஜாலியா என்ஜாய் பண்ணுவாங்க. கிராமத்துல இருக்குறவங்க சொந்தக்காரங்களோட ஒண்ணா உட்கார்ந்து சிரிச்சுப் பேசி, விதவிதமான சாப்பாட்டைச் சாப்பிட்டு என்ஜாய் பண்ணுவாங்க. இந்த பண்டிகை மத்தவங்க மேல அன்ப வெளிப்படுத்துறதுக்காகவும், உறவுகளோட பலத்தை மேம்படுத்தவும் கொண்டாடுகிற ஒரு அழகான திருவிழா.
கிராமத்துல இருக்கிறவங்க பொங்கல் பண்டிகையை எப்பவுமே சிறப்பா கொண்டாடுவாங்க. ஆனா சிட்டில இருக்கிறவங்க, பொங்கலை வெறும் ஒரு லீவா மட்டும்தான் பாக்குறாங்களே தவிர, அதை யாரும் பெருசா கொண்டாடுறது கிடையாது. நம்ம எங்க இருந்தாலும் சரி, தமிழர்களோட பாரம்பரியமான இந்தத் திருநாளைக் கொண்டாட மட்டும் மறந்துடாதீங்க. எல்லாருக்குமே இனிய தைத்திருநாள் நல்வாழ்த்துக்கள்!
Article by – RJ Sandhiya

