தமிழ் சினிமாவில் தனக்கான தனித்துவத்தையும், பெரும் ரசிகர்கள் பட்டாளத்தையே தன் வசம் வைத்திருக்கும் சூர்யா மற்றும் ஜோதிகா இருவரின் திரை வாழ்க்கையிலும்,பொது வாழ்க்கையிலும் திருப்பு முனையாக அமைந்த படம் தான் காக்க காக்க. இந்த படம் வெளியான காலகட்டத்தில் புதுமையான கதைக்களம், மேக்கிங்கால் ரசிகர்களை ஈர்த்த இந்த படம் பாக்ஸ் ஆபிஸில் வெற்றியும் பெற்றது.
தெலுங்கு, இந்தி உள்பட பிறமொழிகளிலும் ரீமேக் செய்யப்பட்ட மென்மையான காதலும், அதிரடி ஆக்ஷனும் நிறைந்த காக்க காக்க படம் வெளியாகி இன்றுடன் 21 ஆண்டுகள் ஆகிறது, இப்படத்தின் இயக்குனர் கெளதம் வாசுதேவ் மேனன் இந்த கதையை கூறாத நடிகர்களே இல்லை. குறிப்பாக விஜய், அஜித், விக்ரம் என முக்கிய ஹீரோக்களிடம் சொல்லப்பட்டு அவர்கள் நடிக்க மறுத்து பின்னர் சூர்யா நடித்த காக்க காக்க படம் அவரது சினிமா வாழ்க்கையில் பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது.
அதிரடி போலீஸ் கதையில் அழகிய காதல் சொன்ன படமாக உள்ளது. இந்த படத்தில் இடம் பெற்றுள்ள பாடல்கள் 21 ஆண்டுகள் ஆன பின்னும் இன்றுவரை அதன் தனித்துவம் குறையவில்லை, தனது அற்புத இசையை ஹாரிஸ் ஜெயராஜ் இந்த படத்துக்காக கொடுத்திருப்பார். படத்தில் இடம்பெறும் உயிரின் உயிரே, என்னைக் கொஞ்சம் மாற்றி, ஒன்றா, ரெண்டா ஆசைகள், ஒரு ஊரில் அழகே உருவாய், தூது வருமா என அனைத்து பாடல்களுமே இப்போதும் ப்ளே லிஸ்டில் இருப்பவைதான்.
பாடல்கள் பின்னணி இசையிலும் ஒரு வித அதிர்வலைகளை ஏற்படுத்தியிருப்பார். காக்க காக்க என்றாலே இசையும் நினைவில் வருவதை தவிர்க்க முடியாத அளவில் படத்துடன் பிணைந்து ஹாரிஸ் ஜெயராஜின் இசை இருக்கும். தமிழ் சினிமாவில் இரண்டு க்ளைமாக்ஸுடன் வந்த படங்களில் ஒன்று தான் காக்க காக்க., போலீஸ் ஆபிசரின் வாழ்க்கையை ரியலாக சொன்ன ஆக்ஷன் த்ரில்லர் படமாக இருக்கும்.
சூர்யா, ஜோதிகா காதல் ஜோடிகளாக வலம் வந்த தொடகத்தில் உருவான இந்த படத்தின் அதிரடி காட்சிகளுக்கு இணையாக காதல் காட்சிகளுக்கும் வெகுவாக பேசப்பட்டது. பின்பு இருவரும் நிஜ வாழ்க்கையில் திருமணமும் செய்துகொண்டார்கள். தமிழ் சினிமாவில் பல ACTION த்ரில்லர் படங்கள் வந்தாலும் வந்து கொண்டிருந்தாலும் காக்க காக்க திரைப்படத்திற்கு தனி இடம் என்றுமே உண்டு.