பாலாஜி மோகன் இயக்கத்தில் தனுஷ் நடித்த மாஸ் மசாலா திரைப்படம் “மாரி”. இப்படம் வெளியாகி 5 ஆண்டுகள் நிறைவு பெற்ற நிலையில் அதை தனுஷ் ரசிகர்கள் இணையத்தில் கொண்டாடி வருகின்றனர்.

இப்படத்தில் தனுஷ், காஜல் அகர்வால், விஜய் ஜேசுதாஸ், ரோபோ ஷங்கர், வினோத், காளி வெங்கட், மைம் கோபி, சண்முகராஜன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருப்பர். 2015ஆம் ஆண்டு ரம்ஜான் ரிலீசாக மாரி அமைந்தது.
இப்படம் முழுக்க முழுக்க தனுஷிற்கு ஒரு மாஸ் திரைப்படமாக அமைந்தது. காமெடி, சண்டை காட்சிகள், துள்ளாட்டம் போடும் பாடல்கள், விருவிருப்பான திரைக்கதை என கமர்சியல் ரசிகர்களுக்கு ஏற்றவாறு இப்படம் அமைந்தது.

அனிருத்தின் பின்னணி இசையும், பாடல்களும் இப்படத்திற்கு மேலும் வலு சேர்க்கும் விதத்தில் அமைந்திருக்கும். இப்படத்தில் அமைந்த அனைத்து பாடல்களுமே ரசிகர்கள் கொண்டாடும் சூப்பர் ஹிட் பாடல்களாக அமைந்தது. குறிப்பாக மாரி திரைப்படத்தின் பின்னணி இசை பலரின் மொபைல் ரிங்டோனாக ஒலித்தது.
தமிழில் வெளியாகி மாரி வெற்றிப்படமாக அமைந்ததால் இப்படம் தெலுங்கில் “மாஸ்” எனும் பெயரில் மொழிபெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டது. அதுமட்டுமின்றி பெங்காலி மொழியில் “பாஸ் கிரி” என்ற பெயரில் ரீமேக்கும் செய்யப்பட்டது. மாரி திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து படத்தின் இரண்டாம் பாகம் 2018 ஆம் ஆண்டு வெளிவந்தது குறிப்பிடத்தக்கது.

இப்படத்தில் தனுஷ் உபயோகித்திருக்கும் கூலிங் கிளாஸ் பிரத்தியேகமாக மாரி கதாபாத்திரத்திற்கு என்றே உருவாக்கப்பட்டதாம். அந்த கண்ணாடியைப் போன்ற நகல் கண்ணாடி இன்றுவரை தயாரிக்கப்படவில்லையாம். இந்த கண்ணாடியை பத்திரமாக வைத்திருந்து மாரி படத்தின் இரண்டாம் பாகத்திற்கு படக்குழுவினர் உபயோகித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இப்படத்தில் தனுஷ் அணிந்து வரும் உடைகள் அனைத்தும் இப்படத்திற்குப் பின் மிகவும் பிரபலமானது.

மாரி திரைப்படம் வெளியாகி ஐந்து ஆண்டுகள் நிறைவுபெற்ற நிலையிலும் ரசிகர்கள் மனதை விட்டு நீங்காத மாஸ் திரைப்படமாக இருந்து வருகிறது. தனுஷின் ரசிகர்கள் இப்படத்தின் வெற்றியை சமூக வலைதளங்களில் #5YearsOfTharaLocalMaari #5YearsOfMaari என ஆரவாரமாக கொண்டாடி வருகின்றனர்.