பரத்பாலா இயக்கத்தில் தனுஷ் நடித்த மரியான் திரைப்படம் வெளியாகி இன்றுடன் 7 ஆண்டுகள் நிறைவடைகிறது. இப்படத்தின் வெற்றியை இணையத்தில் தனுஷின் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

மரியான் திரைப்படம் ஒரு மாறுபட்ட கதை களத்தில் அமைந்ததோடு இப்படத்தில் ஒரு சிறந்த நட்சத்திர குழுவும், தொழில்நுட்ப குழுவும் இணைந்து பணியாற்றியது. தனுஷ் மற்றும் பார்வதி திருவோது முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்க ஜகன், அப்புக்குட்டி, உமா ரியாஸ், சலீம் குமார், இமான் அண்ணாச்சி ஆகியோர் துணை கதாபாத்திரங்களில் நடித்திருப்பர்.
உள்ளூரில் கடல் ராசாவாக சுற்றித்திரியும் தனுஷ் பணத்திற்காக நாடு விட்டு நாடு சென்று அங்கிருந்து மீண்டும் சொந்த ஊருக்கு திரும்ப முடியாமல் கொள்ளைக் கூட்டத்திடம் சிக்கித் தவித்து எப்படி தப்பிக்கிறார் என்பதே இப்படத்தின் கதை சுருக்கம். இப்படத்தில் தனுஷின் தத்ரூபமான நடிப்பை பாராட்டாதவர்களே இருக்க மாட்டார்கள்.

இசைப்புயல் ஏ.ஆர். ரகுமானின் பின்னணி இசையும் பாடல்களும் மரியானின் திரைக்கதைக்கு ஏற்ப பொருந்தி படம் பார்ப்போரின் மனதில் ஆழமாக பதிந்தது. இசைப்புயலின் இசை என்றாலே அது நிச்சயம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுவிடும் என்பது தெரிந்த விஷயமே. அதிலும் மரியான் படத்தின் ஒவ்வொரு பாடலுமே ரசிகர்கள் கொண்டாடும் விதத்தில் அமைந்தது. குறிப்பாக கடல் ராசா நான், நெஞ்சே எழு, சோனாப்பரியா போன்ற பாடல்கள் 2013 ஆம் ஆண்டின் மக்கள் கொண்டாடும் பாடல்களாக அமைந்தது.
ஆஸ்கர் விருது பெற்ற இந்தியர்கள் இருவருமே இப்படத்தில் இணைந்து பணியாற்றியுள்ளனர். ஏ.ஆர். ரகுமான் இசை அமைப்பாளராகவும், ரசூல் பூக்குட்டி ஒலி வடிவமைப்பாளராகவும் மரியான் படத்தில் பணியாற்றியுள்ளனர். இப்படத்தின் வசனங்களை பிரபலம் தமிழ் எழுத்தாளரும் நாவலரும் ஆனால் ஜோ.டி.குரூஸ் அவர்கள் எழுதியுள்ளார்.

இப்படம் கடலோரத்தில் நடக்கும் காட்சிகளையும், வெளிநாட்டில் இருக்கும் காட்சிகளையும் தத்ரூபமாக படம் பிடிக்க வேண்டியிருந்ததால் இப்படத்தில் பெல்ஜியன் ஒளிப்பதிவாளரான மார்க் கோனிக்ஸ் கேமராவை கையாண்டார். தொழில்நுட்ப ரீதியாக இப்படத்திற்கு வித்தியாசமான பல முயற்சிகளை இப்படக்குழு செய்தது.
தமிழில் ஆரோ 3டி ஒலி வடிவமைப்பில் வெளியிடப்பட்ட முதல் திரைப்படம் மரியான் ஆகும். ஏ.ஆர். ரகுமானின் AM ஸ்டூடியோவில் தான் இந்த ஆரோ தொழில்நுட்பம் இப்படத்திற்கு ரெகார்ட் செய்யப்பட்டது. இப்படத்தில் தனுஷ் திரையில் சிறுத்தையுடன் இருப்பது போன்ற காட்சிகளெல்லாம் இடம்பெற்றிருக்கும். இப்படத்தின் நெஞ்சே எழு பாடல் நம்பியாவிலுள்ள கோஸ்டல் பாலைவனப்பகுதியில் படமாக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இப்படத்திற்கு விமர்சகர்கள் இடமும் ரசிகர்களிடமும் நல்ல வரவேற்பு கிடைத்தது. இப்படம் வெளியாகி 7 ஆண்டுகள் நிறைவுபெற்ற நிலையில் தனுஷின் ரசிகர்கள் இப்படத்தின் வெற்றியை இணையத்தில் கொண்டாடுகின்றனர்.