சாமானிய மக்கள் மனதில் சொக்கத் தங்மாய் பதிந்த விஜயகாந்த் அவர்கள் 1952 ஆம் ஆண்டு மதுரையில் பிறந்து,”நாராயணன் விஜயராஜ் அழகர் சுவாமி” எனும் இயற்பெயரோடு, தமிழ் சினிமா துறையில் சாதிக்க வேண்டும் என்று வெறியில், சென்னை வந்து தனது பெயரை விஜயகாந்த் என்றும் மாற்றிக் கொண்டார்.
இவரது முதல் படம், 1979-ஆம் ஆண்டு எம்.ஏ.காஜாவின் இயக்கத்தில் வெளியான ‘இனிக்கும் இளமை’. இவரது சினிமா வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்பத்தை ஏற்படுத்திய திரைப்படம் ‘சட்டம் ஒரு இருட்டறை’. இந்த திரைப்படம் தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி என பல மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது.
1984ஆம் ஆண்டு, விஜயகாந்தின் சினிமா வாழ்க்கையில் மிகவும் முக்கியமான ஆண்டு. அந்த ஒரே ஆண்டில் மட்டும் விஜயகாந்த நடித்த 18 திரைப்படங்கள் வெளியாகின. கிராமங்களில் இவரது படங்கள் வெளியாகும் தினத்தன்று திருவிழாவுக்கு செல்வது போல கூட்டம் கூட்டமாக குடும்பத்துடன் மக்கள் வண்டி கட்டிக்கொண்டு படம் பார்க்கச் செல்வார்கள்.
அந்த அளவுக்கு,தனது தனித்துவமான நடிப்பு மற்றும் கம்பீரமான தோற்றம் என அனைத்திலும் மக்கள் மனதை கவர்ந்தவர். 1991ஆம் ஆண்டு, ஆர்.கே.செல்வமணி இயக்கத்தில் விஜயகாந்த் அவர்களின் 100 வது திரைப்படமான ‘கேப்டன் பிரபாகரன்’ படம் வெள்ளிவிழா கொண்டாடியது. இந்த படத்திற்கு பிறகுதான் சினிமா துறையிலும், ரசிகர்கள் மத்தியிலும் கேப்டன் என்ற பட்டம் பெற்றார்.
1998 ஆம் ஆண்டு நடிகர் சங்க தலைவர் ஆன விஜயகாந்த் அவர்கள், பல இளம் நடிகர்களுக்கு கை கொடுத்திருக்கிறார்.54 புதிய இயக்குனர்களை அறிமுகம் செய்திருக்கிறார் , அதோடு மட்டுமல்லாமல் புதிய தயாரிப்பாளர்களுக்கும், புதிய தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் அதிக வாய்ப்பு கொடுத்த ஒரு நடிகர் விஜயகாந்த் அவர்கள் மட்டுமே.
பிலிம் இன்ஸ்டியூட் மாணவர்களுடன் சேர்ந்து, காவிய தலைவன் ,உழவன் மகன், செந்தூரப்பூவே, ஊமை விழிகள் போன்ற படங்களில் நடித்து பிலிம் இன்ஸ்டியூட் மாணவர்களுக்கு தமிழ் சினிமாவில் மிகப்பெரிய அடையாளத்தை ஏற்படுத்திக் கொடுத்தார்.
அதன் பிறகு தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக மாறினார். ‘புலன் விசாரணை’, ‘சேதுபதி ஐபிஎஸ்’, ‘சத்ரியன்’, ‘வானத்தைப் போல’, ‘தவசி’, ‘ரமணா’ என 150 திரைப்படங்களுக்கும் மேல் நடித்துள்ளார் விஜயகாந்த். தமிழ் சினிமாவிலும் சரி, அரசியலிலும் சரி விஜயகாந்த் ஏற்படுத்திய தாக்கம் வெகு பெரியது. தர்மதுறை, கருப்பு எம்.ஜி.ஆர் , கேப்டன், புரட்சி கலைஞர் என தமிழ் மக்கள் கொண்டாடிய விஜயகாந்த் அவர்களை , அவரது 71 வது வயதில் தன்னோடு அழைத்து சென்றது இயற்கை, மண்ணை விட்டு நீங்கி சென்றாலும், விஜயகாந்த் எனும் சகாப்தத்திற்கு, வரலாற்றில் என்றும் தனி தடம் உண்டு… விஜயகாந்த் அவர்களின் பிறந்தநாளில் அவரை நினைவு கூர்வதில் பெருமை கொள்கிறது சூரியன் பண்பலை.