Specials Stories

Global Forgiveness Day 2025: மன்னிப்பு கேக்குறவன் வீரன்..! மன்னிக்கிறவன் பெரிய மனுஷன்..!

Forgiveness Day 2025
Forgiveness Day 2025

இந்த உலகில் இருக்கும் ஆயிரக்கணக்கான மொழிகளில், இலட்சக்கணக்கான வார்த்தைகள் இருக்கிறது. அந்த வார்த்தைகளில் சில மட்டுமே, மனதோடு கலந்து நமது உணர்வுகளை வெளிப்படுத்துவதாக அமையும். அப்படிப்பட்ட ஒரு வார்த்தையை பற்றி தான் இன்று நாம் பேசப்போகின்றோம். அந்த வார்த்தை…

கேட்பவருக்கும் அதை வழங்குபவருக்கும் மிகப்பெரிய ஆத்ம திருப்தியை தரும். அதைக் கேட்பவர்கள் கூனிக்குறுகி தனது கடந்த கால தவறுகளுக்கான பிராயச்சித்தமாய் இன்னொருவரிடம் மானசீகமாக மண்டியிட்டு வேண்டும்பொழுது, அதை வழங்குபவர் அதை வழங்கும் மனநிலையில் சூழ்நிலையில் இருந்தால் பெரும் மனதோடு வழங்குவார். அப்படி அவர் வழங்கி விட்டால் அது அவரின் பெருந்தன்மைக்கும் அவரின் உயரிய குணத்திற்கும் சான்றாக அமையும்.

அதே நேரத்தில் அதைக் கேட்டு வாங்கியவருக்கு அது ஒரு தண்டனையாக கூட அமைந்து விடும். இப்படி கருணையும் தண்டனையும் ஒரு சேர வழங்கும் ஆற்றல் கொண்ட அந்த வார்த்தை “மன்னிப்பு”. ஏன் இன்று மன்னிப்பை பற்றி பேசுகிறோம் என்றால், இன்று உலகம் தழுவிய “மன்னித்தல் தினம்”. தனது முந்தைய பிழைகளை ஒருவன் மனம் நெகிழ்ந்து தனது தவறுகளுக்காக மன்னிப்பு கேட்கும் பொழுதே அவன் முழு மனிதனாக மாறிவிட்டான் என்று தான் அர்த்தம்.

நாமும் கூட நம்மையும் அறியாமல் பல பிழைகளை நம் வாழ்நாளில் பல நேரங்களில் பல மனிதர்களிடம் புரிந்து இருப்போம். நம் உறவுகளிடம், நட்புகளிடம், குடும்ப உறுப்பினர்களிடம் என நாம் பல சமயங்களில் பலரின் மனங்களை காயப்படுத்தி இருப்போம் .நம்மால் காயப்பட்ட அந்த மனிதர்களிடம் காலம் கடந்தாவது நாம் மன்னிப்பு கேட்க வேண்டும் அவ்வாறு செய்யும் பொழுது, அது அவர்களுக்கு ஓர் ஆறுதலாக இருக்கிறதோ இல்லையோ நமக்கு அது மிகப்பெரிய நிவாரணமாக அமைந்து விடும். எனவே இன்றைய தினத்தில் நமது ஈகோகளை எல்லாம் விட்டுவிட்டு நம்மால் காயப்பட்டவர்களிடமும் நம்மால் நொந்து போனவர்களிடமும் மன்னிப்பு கேட்டால் அது நமக்கும் அவர்களுக்கும் இடையே இருக்கின்ற உறவு இடைவெளியை வெகுவாக குறைக்கும். நம் மனங்களின் மையத்தில் இருக்கும் சுமைகளை கரைக்கும்.

Article By – கே எஸ் நாதன்