குறைந்த ரத்த அழுத்தம் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நடிகர் ரோபோ சங்கர் வயது (46) சிகிச்சை பலனின்றி காலமானார்!
ரோபோ சங்கர் நடிக்கும் காட்ஸ்ஜில்லா என்ற புதிய படத்தின் படப்பிடிப்பு கடந்த திங்கட்கிழமை பூஜையுடன் சென்னையில் தொடங்கியது. முதல் நாள் படப்பிடிப்பில் நீர்ச்சத்து குறைபாடு மற்றும் குறைந்த ரத்த அழுத்தம் காரணமாக மயங்கி உள்ளார். இதனை ஒட்டி சென்னை சாலிகிராமத்தில் உள்ள சூர்யா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுள்ளார்.

இதனை அடுத்து உடனடியாக துரைப்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு நேற்றிலிருந்து தொடர் சிகிச்சை அவருக்கு வழங்கப்பட்டு வந்தது. இருப்பினும் சிகிச்சை பலனின்றி தற்பொழுது உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
அவரது உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் இன்றைய தினம் அவர் வீடு திரும்புவார் என குடும்பத்தார் தரப்பில் தகவல் தெரிவித்திருந்த நிலையில், தற்பொழுது உயிரிழந்திருக்கிறார் என்ற செய்தி வெளியாகியுள்ளது.

தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் மிமிக்கிரி கலைஞராக பிரபலமான ரோபோ சங்கர் அதனைத் தொடர்ந்து படங்களிலும் நடிக்க தொடங்கினார்.
2007 ஆம் ஆண்டு வெளியான தீபாவளி திரைப்படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர் அதனைத் தொடர்ந்து மாரி, இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, புலி, விசுவாசம், மிஸ்டர் லோக்கல், வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானார்.
தொடர்ந்து திரைப்படங்களில் கவனம் செலுத்தி வந்த ரோபோ சங்கர் ஓராண்டுக்கு முன்பு மெலிந்த தோற்றத்துடன் மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டு அதற்குரிய சிகிச்சை பெற்று மீண்டு வந்தார்.

பட வாய்ப்புகள் பெரிய அளவில் வரவில்லை என்றாலும் தனியார் தொலைக்காட்சிகளில் நடுவராக பணியாற்றி வந்தார். அதேவேளையில் திரைப்படங்களிலும் நடிக்க தொடங்கினார்.
இந்த நிலையில் புதிய படத்தின் படப்பிடிப்பில் குறைந்த ரத்த அழுத்தம் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கடந்த இரண்டு நாட்களாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.