மணிரத்னம் இயக்கத்தில் சியான் விக்ரம், ஐஸ்வர்யா ராய் ஆகியோர் நடித்து வெளிவந்த வெற்றிப் படம் ராவணன். இன்றுடன் (June 18, 2020), இப்படம் வெளியாகி 10 ஆண்டுகள் நிறைவடைகிறது.

விக்ரம், ஐஸ்வர்யா ராய், பிரித்திவிராஜ் ஆகியோர் இப்படத்தில் முன்னணி கதாபாத்திரங்களாக நடித்திருப்பர்.
அதுமட்டுமின்றி பிரபு, கார்த்திக், பிரியாமணி, ஜான் விஜய் என ஒரு பெரிய நட்சத்திரப் பட்டாளமே இப்படத்தில் வலம் வருவார்கள்.
ராமாயணம் கதையை தழுவி எடுக்கப்பட்ட இப்படம், ஒவ்வொரு காட்சியிலும் படத்துடன் ராமாயணத்திற்கு இருக்கும் தொடர்பை வெளிக்காட்டும் வகையில் அமைந்திருக்கும். கதையின்படி விக்ரம் ராவணனாகவும் , ஐஸ்வர்யா ராய் சீதையாகவும், பிரித்திவிராஜ் ராமனாகவும் சித்தரிக்கப்பட்டிருப்பர். படத்தின் இறுதிக் காட்சி வரை விறுவிறுப்புக்கும், சுவாரஸ்யமான திரைக்கதைக்கும் பஞ்சமே இருக்காத வகையில் படம் அமைந்திருக்கும்.

சுபாஷினியின் வசனங்கள் ஒவ்வொன்றும் படம் பார்ப்போரை சுற்றி முற்றி பார்க்கவிடாமல், படத்தை கவனிக்க வைக்கும்படி அமைந்திருக்கும். ஏ.ஆர்.ரகுமான் + மணிரத்னம் கூட்டணி என்றாலே ரசிகர்களுக்கு விருந்து தான். அந்த வகையில் இப்படத்தின் பின்னணி இசையும், பாடல்களும் கதைக்கு ஏற்ப பொருந்தி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது.
ராவணன் பக்கத்திலிருந்து ராமாயணத்தை உற்றுநோக்கும் போது எது நீதி? எது அநீதி? என்பதை விளக்கும் வகையில் இப்படம் அமைந்திருக்கும். இப்படம் பாலிவுட்டிலும் கோலிவுட்டிலும் ஒரே சமயத்தில் படமாக்கப்பட்டது. இந்தியில் அபிஷேக் பச்சன் ராவணன் கதாபாத்திரத்தில் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.