நடிகை தேவயானி தனது 46-வது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார். தமிழ் , தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி, பெங்காலி என 6 மொழிகளில் 70-ற்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள தேவயானி தென்னிந்திய திரையுலகின் தவிர்க்க முடியாத முன்னணி கதாநாயகியாக ரசிகர்கள் மனதில் இடம்பிடித்துள்ளார்.

பெங்காலி படங்களில் தன் திரையுலக பயணத்தை தேவயானி துவங்கியிருந்தாலும் தமிழ் சினிமா தான் தேவயானிக்கு தனி அடையாளத்தை கொடுத்தது. கிட்டத்தட்ட அணைத்து முன்னணி தமிழ் கதாநாயகர்களுடனும் தேவயானி நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
1997-ல் விக்ரமன் இயக்கத்தில் வெளிவந்த சூரியவம்சம் படத்திற்காகவும் 2000-ஆம் ஆண்டு வெளிவந்த பாரதி திரைப்படத்திற்காகவும் தமிழ்நாடு அரசின் சிறந்த நடிகைக்கான விருதை தேவயானி பெற்றுள்ளார். அதுமட்டுமின்றி 2010-ஆம் ஆண்டு தமிழக அரசு தேவயானிக்கு கலைமாமணி விருது வழங்கியும் கௌரவித்துள்ளது.

90s-ன் கனவு நாயகியாக கொடி கட்டிப்பறந்த தேவயானி சில தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார். தேவயானி நடித்த கோலங்கள் மெகாத்தொடர் சன் டி.வியில் 1533 பாகங்களாக ஒளிபரப்பப்பட்டது குறிப்பிடத்தக்கது. அந்த தொடர் குடும்ப ரசிகர்களை கவரும் வகையில் அமைந்தது.
தேவயானியின் பிறந்தநாளுக்கு ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அவருக்கு சூரியன் FM சார்பிலும் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.