தல அஜித்தின் வெற்றிப்படங்களில் ஒன்றான கிரீடம் திரைப்படம் வெளியாகி இன்றுடன் 13 வருடங்கள் நிறைவடைகிறது. மலையாளத்தில் 1989 ஆம் ஆண்டு வெளியான கிரீடம் திரைப்படத்தின் ரீமேக்தான் இப்படம் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படத்தில் அஜித்குமார், திரிஷா, ராஜ்கிரன், அஜய், விவேக், சரண்யா, சந்தானம், வினோத் கிஷன், கொச்சின் ஹனிபா என பலர் நடித்துள்ளனர். ஒரு சாதாரண நடுநிலை குடும்பத்தில் உள்ள இளைஞரை எப்படியாவது ஒரு கண்ணியமான போலீஸ் ஆபீசராக உருவாக்க வேண்டும் என்ற தந்தையின் ஆசை எத்தனை தடங்கல்களை தாண்டி நிறைவேறுகிறது என்பதே இப்படத்தின் கதைச்சுருக்கம்.
இயக்குனர் ஏ.எல்.விஜய் இயக்கிய முதல் படம் கிரீடம் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தில் பிரியதர்ஷன் உதவி இயக்குனராக பணியாற்றினார். “தவமாய் தவமிருந்து” படத்திற்கு பின்னர் ராஜ்கிரண்-சரண்யா இணைந்து கதாநாயகனுக்கு பெற்றோர்களாக இப்படத்தில் இணைந்தார்கள். நடிகர் சந்தானம் தல அஜித்துடன் இணைந்து நடித்த முதல் படமும் இதுதான்.

பூவெல்லாம் உன் வாசம் திரைப்படத்திற்குப் பின்னர் தல அஜித் ஒரு பெரிய குடும்பத்தின் அங்கமாக இப்படத்தில் தான் நடித்தார். இப்படத்தின் திரைக்கதையும் வசனங்களும் கதையின் விறுவிறுப்பை மேலும் அதிகப்படுத்தியது என்றே கூறலாம். இப்படத்திற்கு மறைந்த பாடலாசிரியர் நா.முத்துக்குமார் வசனம் எழுதியிருப்பது குறிப்பிடத்தக்கது.
ஜி.வி. பிரகாஷ் குமாரின் இசையில் அமைந்த அனைத்து பாடல்களுமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. குறிப்பாக “அக்கம் பக்கம்” பாடல் 2007 ஆம் ஆண்டின் ரசிகர்கள் கொண்டாடும் மெலடி பாடலாக அமைந்தது. தல அஜித் – திரிஷா ஜோடி திரையில் நன்றாக எடுபட்டது. குறிப்பாக அஜித் திரிஷாவிற்கு ப்ரொபோஸ் செய்யும் காட்சி மிகவும் அழகான காட்சியாக அமைந்தது.

பழம்பெரும் நடிகர் பாலாஜியின் சுஜாதா சினி ஆர்ட்ஸ் 1989 க்கு பிறகு நீண்ட இடைவெளி விட்டு தயாரித்த படம் கிரீடம். இப்படம் வசூல் ரீதியாகவும் நல்ல லாபத்தை ஈட்டியது குறிப்பிடத்தக்கது. சென்டிமெண்ட், ஆக்சன், காமெடி, காதல், கருத்து, என அனைத்தையும் உள்ளடக்கிய மசாலா கமர்ஷியல் விருந்தாக தல ரசிகர்களுக்கு கிரீடம் திரைப்படம் அமைந்தது. சூப்பர் சுப்பராயனின் சண்டைக்காட்சிகளும் இப் படத்திற்கு மேலும் வலு சேர்க்கும் வகையில் அமைந்தது.
இருவேறு முடிவுகளை கொண்ட இத்திரைப்படம் குடும்பங்களின் வரவேற்பை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படம் வெளியாகி பதிமூன்று ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் தல ரசிகர்கள் அதை இணையத்தில் #13YearsOfKireedam #Kireedam என கொண்டாடி வருகின்றனர்.