ஒட்டுமொத்த இந்திய சினிமா ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள RRR திரைப்படத்தின் trailer தற்போது வெளியாகியுள்ளது. trailer ஆரம்பிக்கும் முதல் நொடியிலிருந்து விறுவிறுப்பையும், பிரம்மாண்ட அதிரடி காட்சிகளையும் உள்ளடக்கி trailer நகர்கிறது.
பாகுபலி ஒன்று மற்றும் இரண்டாம் பாகத்தை இயக்கி இந்திய சினிமாவை உலகையே திரும்பிப் பார்க்க வைத்த ராஜமௌலி மற்றொரு பிரம்மாண்டத்தை அரங்கேற்ற தயாராகிவிட்டார் போல தெரிகிறது. என்.டி.ஆர், ராம்சரண், அஜய் தேவ்கன், ஆலியா பட், ஒலிவியா மோரிஸ், சமுத்திரகனி என ஒரு மிகப் பெரிய நட்சத்திர பட்டாளம் இந்த வரலாற்று சிறப்புமிக்க திரைப்படத்தில் நடித்துள்ளது.

இப்படத்திற்கு திரைக்கதை எழுதி இயக்கியது ராஜமௌலி என்றாலும் படத்தின் கதையை உருவாக்கியது பாகுபலிக்கு கதை தீட்டிய விஜயேந்திர பிரசாத் என்பது குறிப்பிடத்தக்கது. ஆங்கிலேயர் ராஜ்ஜியத்தையும், ஹைதராபாத் நிஜாம் ராஜ்ஜியத்தையும் எதிர்த்து போராடிய அல்லுறி சீதாராம ராஜு மற்றும் கோமரம் பீம் ஆகியோரின் வாழ்க்கை வரலாறு தான் இந்த RRR.
அல்லுறி சீதாராம ராஜு கதாபாத்திரத்தில் ராம் சரணும், பீம் கதாபாத்திரத்தில் என்.டி.ஆர்-ம் இப்படத்தில் நடித்துள்ளனர். ஏறத்தாழ 400 கோடி ரூபாய் செலவில் எடுக்கப்பட்ட இப்படம் உலகம் முழுவதும் தெலுங்கு, தமிழ், ஹிந்தி, மலையாளம், கன்னடம் என ஐந்து மொழிகளில் வெளியாகிறது. இப்படம் வருகிற 2022 ஜனவரி 7ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. RRR வசூல் ரீதியாக ஒரு புதிய சாதனையை நிகழ்த்தும் என திரைத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஏற்கனவே இப்படத்தின் teaser, glimpse, பாடல்கள் ஆகியவை ரசிகர்களுக்கு படம் பார்க்க வேண்டும் என்ற ஆர்வத்தை அதிகப்படுத்தி இருந்த நிலையில், டிரைலர் வெளியாகி ரசிகர்களை மேலும் உற்சாகப்படுத்தியுள்ளது. பாகுபலியின் சூப்பர் ஹிட் பாடல்களை இசையமைத்த எம்.எம்.கீரவாணி அவர்களே RRR திரைப்படத்திற்கும் இசை அமைத்துள்ளார்.
ட்ரெய்லரின் ஆரம்பத்தில் ஒரு பிரிட்டிஷ் கவர்னர் கோந்து இனத்தை சேர்ந்த ஒரு சிறுமியை தூக்கிக்கொண்டு செல்கிறார். “அந்த இனத்தில் இருப்பவர்களுக்கு என்ன கொம்பா இருக்கிறது” என ஒருவர் கேட்கவே, “கொம்பு இல்லை, ஒரு காவலன் இருக்கிறான்” என்ற வசனத்துடன் என்.டி.ஆரின் entry வருகிறது. அவரின் நெருங்கிய நண்பரான ராம்சரண் கம்பீரமான போலீஸ் கதாபாத்திரத்தில் entry கொடுக்கிறார். இந்திய திரையுலகின் முக்கியமான இரண்டு நட்சத்திரங்கள் இப்படிப்பட்ட ஒரு பிரம்மாண்ட திரைப்படத்தில் சேர்ந்து நடிப்பது இந்திய சினிமாவை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்லும் முயற்சிகளில் ஒன்றாகும்.
ராஜமௌலியின் மற்றொரு பிரம்மாண்டமான RRR திரைப்படத்தின் தமிழ் trailer-ஐ கீழே காணுங்கள்.
இப்படம் வெற்றியடைய சூரியன் FM சார்பில் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம்.