Cinema News Specials Stories

அனைவரும் கண்டிப்பாக பார்க்க வேண்டிய திரைப்படம் ’மெட்ராஸ்’

”மெட்ராஸ்” திரைப்படம் தமிழ் சினிமாவில் ஒரு தலைசிறந்த படைப்பாகும். ஈர்க்கக்கூடிய கதையம்சம், எதிர்பாராத திருப்பங்கள் மற்றும் வடசென்னை தெருக்களின் அழகியல் காட்சிகளுடன் பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவான ஒரு அற்புதமான திரைப்படம்.

அரசியல் மற்றும் அரசியல் கும்பல் போட்டிகளின் பின்னணியை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட “மெட்ராஸ்” திரைப்படம், அதன் கதாபாத்திரங்களின் வழி படத்தின் உணர்வை பார்வையாளர்களுக்கு எளிதாக கடத்தியது. சென்னை மக்களின் வாழ்வியல், நட்பு, வாழ்க்கை முறை அனைத்தையும் அப்படியே படம் பிடித்து காட்டியது. படத்தில் கார்த்தி முழுக்க முழுக்க ஒரு சென்னை பையனை போலவே இருப்பார். கார்த்தியின் நடிப்பில் மெட்ராஸ் திரைப்படம் ஒரு மைல்கல் என்று கூட சொல்லலாம்.

படத்தின் திரைக்கதை அத்தனை பிரமிப்பாக இருக்கும். இதயத்தை தொடக்கூடிய காதல் காட்சிகள், தீவிரமான ஆக்‌ஷன் காட்சிகள் உடன் சமூக கருத்தையும் முன்வைக்கும் படமாக அமைந்ததே இதன் வெற்றிக்கு காரணம். பல உணர்வுப்பூர்வமான தருணங்களை, உரையாடல்களை மக்களிடத்தில் கொண்டு சேர்த்த ஒரு திரைப்படமாக இது அமைந்தது.

திரைப்பட பிரியர்களுக்கு “மெட்ராஸ்” திரைப்படம் நிச்சயம் ஒரு Visual Treat தான். சந்தோஷ் நாராயணனின் இசை கதைக்கு மேலும் மெருகேற்றியிருக்கும். சாதி அடிப்படையிலான அரசியல் மற்றும் சமூக சமத்துவமின்மை போன்ற சிக்கலான விஷயங்கள் குறித்து “மெட்ராஸ்” திரைப்படத்தில் நிறைய பேசியிருந்தார் இயக்குநர் பா.ரஞ்சித்.

அதே சமயம் படத்தின் கதையும் தொய்வில்லாமல் விறுவிறுப்பாக செல்லும். தமிழகத்தில் சமூக அரசியல் நிலைமையை தைரியமாக மக்கள் பார்வைக்கு வைத்திருப்பார் இயக்குநர். எனவே இந்த திரைப்படம் பலருக்கும் தன்னை தொடர்புபடுத்திக் கொள்ளக்கூடிய வகையில் அமைந்தது.

“மெட்ராஸ்” என்பது திரைப்படம் மட்டுமல்ல; அது தமிழ் சமூக அரசியல் பண்பாட்டின் அனுபவம்/அடையாளம். தமிழ் சினிமாவில் என்றும் நிலைத்து நிற்கக் கூடிய படங்களின் வரிசையில் மெட்ராஸ் திரைப்படத்திற்கு எப்போதும் தனி இடம் உண்டு. அதுமட்டுமல்ல தமிழ் சினிமாற்கு வருகை தரக்கூடிய அடுத்த தலைமுறை நிச்சயம் பார்க்க வேண்டிய திரைக்கதை கொண்ட படம் என்றும் சொல்லலாம்.

Article By RJ shree

About the author

Suryan Web Desk

A desk hand that tirelessly churns out news articles and videos.