அரபிக்கடல் வங்கக்கடல் முட்டிக்கொள்ளும் குமரிமுனையில் ஒரு முறையில் கடல் அலைகள் வந்து வந்து முத்தமிட்டு செல்லுகின்ற ஒரு கடற்கரை கிராமம் தான் முட்டம்.
அந்த மீனவ கிராமத்தில் வசிப்பவர்கள் தவிர, யாரும் அதிகம் உச்சரிக்காத பெயராக இருந்த அந்த ஊரின் பெயர்
1981-க்கு பிறகு தமிழகமெங்கும் அறியப்பட்டது. அதற்கு காரணம் ஒரு திரைப்படம். முற்றிலும் புதுமுகங்களை வைத்து வெளியான அந்த படம் பட்டிதொட்டியெல்லாம் கொடிகட்டிப் பறந்தது. அதில் பலமுகங்கள் அறிமுகங்களாக இருந்தன.
குறிப்பாக கதாநாயகன்-கதாநாயகி இருவரும் அதில் அறிமுகமாகிறார்கள். அவர்கள் இருவரும் பின்னாளில் முன்னணி நட்சத்திரங்களாக வலம் வந்தார்கள். அவர்கள் அற்முகமான படம் 1981-ல் மணிவண்ணன் கதையில், பாரதிராஜாவின் இயக்கத்தில் வெளிவந்த ‘அலைகள் ஓய்வதில்லை’. தனது 16வது வயதில் சினிமாவில் அறிமுகமாகிய திரை நாயகி தான் இன்றைய நமது கதையின் நாயகி. 1965-ல் கேரளாவில் பிறந்த ராதாவின் இயற்பெயர் உதய சந்திரிகா.

ஏற்கனவே சினிமாவில் தன் பெயரை நன்கு பதிய வைத்திருந்த தனது அக்கா அம்பிகாவை போல் தானும் புகழ்பெற வேண்டும் என்று நினைத்திருந்த சமயத்தில் தான் பாரதிராஜாவின் அறிமுக நாயகியாக அலைகள் ஓய்வதில்லை படத்தில் தோன்றினார். அந்தப் படத்தின் மாபெரும் வெற்றியை அடுத்து ராதாவுக்கு அடுத்தடுத்த பட வாய்ப்புகள் தேடி வந்தது.
மீண்டும் பாரதிராஜாவின் இயக்கத்தில் ‘டிக் டிக் டிக்’ படத்தில் நடித்தார். அதற்குப் பிறகு பல படங்களில் தோன்றினார். 1982-ல் மணிவண்ணன் இயக்கத்தில் ஜூலி என்ற பாத்திரத்தில் ‘கோபுரங்கள் சாய்வதில்லை’ படத்தில் ராதாவுக்கு நல்ல கதாபாத்திரம் கிடைத்தது.
இதே நேரத்தில் தமிழ் தவிர மலையாளம், கன்னடம், தெலுங்கு, ஹிந்தி என பிற மொழி படங்களிலும் ஒரு பிஸியான நடிகையாக இருந்தார். கமல், ரஜினி, பிரபு, கார்த்திக், சத்யராஜ், விஜயகாந்த், சிவக்குமார் என அனைத்து முன்னணி தமிழ் நடிகர்களுடனும் நடித்து இருக்கிறார்.

1985 ராதாவின் வாழ்க்கையில் மறக்க முடியாத வருடம். காரணம் நடிகர் திலகம் சிவாஜியுடன் சேர்ந்து முதல் மரியாதை படத்தில் குயிலி என்ற கதாபாத்திரத்தில் தன் இயல்பான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார் ராதா. முதல் மரியாதை அந்த வருடத்திற்கான சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விருதை ராதாவுக்கு பெற்றுத் தந்தது.
1981-ல் ஆரம்பித்து 1991 வரை பத்து ஆண்டுகள் தென்னிந்திய சினிமாவில் குறிப்பாக தமிழ் திரை உலகில் தவிர்க்க முடியாத நடிகையாக வலம் வந்த ராதா இப்போது தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் வலம் வருகிறார். பல வெற்றிப்படங்களில் நாயகியாக நடித்திருக்கும் நடிகை ராதாவின் பிறந்த தினம் ஜூன் 3. அவரின் பிறந்த நாளில் அவருக்கு வாழ்த்துக்கள் சொல்வதில் பெருமை கொள்கிறது சூரியன் FM.
Add Comment