சிதறால் மலைக் கோவில், சிதறால் குகைக் கோவில் என்று பல பெயர்களால் அழைக்கப்படும் சிதறால் கோவில் கன்னியாகுமரி மாவட்டத்தில் சிதறால் கிராமத்தில் அமைந்துள்ளது. தென்தமிழகத்தில் பண்டைய காலத்தில் மதநல்லிணக்கத்திற்கு சான்றாக இந்த இடம் விளங்கியுள்ளது. ஏனெனில் இந்த ஜெயின் கோவிலோடு இந்து கோவில் ஒன்றும் அங்கு அமைந்திருப்பதே அதற்கான காரணம்.
இந்த வரலாற்று சிறப்புமிக்க மலைக்கோவில் கன்னியாகுமரியிலிருந்து 48 கிலோமீட்டர் தூரத்திலும், நாகர்கோவிலிலிருந்து 30 கிலோமீட்டர் தூரத்திலும் அமைந்துள்ளது. இங்கு காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை மக்கள் அனுமதிக்கப்படுகின்றனர்.

இது கடல் மட்டத்திலிருந்து ஆயிரம் அடி உயரத்தில் அமைந்துள்ளது. இந்த சமண குடைவரைக் கோயிலில் நீங்கள் உள்ளே போகப் போக இருபுறங்களிலும் குளிர்ச்சியூட்டும் வகையில் அழகிய மரங்களை காண இயலும். இந்த வரலாற்று சிறப்பு மிக்க கோவில் இந்திய தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
இங்குள்ள சமண கோவிலில் இருபத்தி நான்கு தீர்த்தங்கரர்களுடைய புடைப்பு சிற்பம் இருக்கின்றது. இருப்பதினான்காவது தீர்த்தங்கரரான மகாவீரர் முக்குடை கீழ் அமர்ந்திருக்கும் சிற்பம் சிறப்பான ஒன்று. அதன் கீழ் சிம்மவாஹனம் ஒன்றையும் நம்மால் காண இயலும். மகாவீரரின் சிற்பத்திற்கடுத்து பத்மாவதி தாயாரின் சிற்பத்தையும் நம்மால் காண இயலும்.

இங்கு செதுக்கப்பட்டுள்ள மகாவீரர், பார்சுவநாதர், தீர்த்தங்கரர்கள், பத்மாவதி போன்ற சிற்பங்கள் சுற்றுலா பயணிகளையும் இங்கு வழிபட வரும் பக்தர்களையும் கவரும் வகையில் அமையப்பெற்றுள்ளது. இங்கு காணப்படும் அனைத்து புடைப்பு சிற்பங்களும் மிகவும் பிரம்மிபூட்டும் வகையில் அமைந்திருக்கின்றன.
இது ஒரு குடைவரை கோவிலாகவே அறியப்படுகின்றது, ஏனெனில் இந்த கோவில் மலையை குடைந்து அமைக்கப்பட்டுள்ளது. இந்த சமண புடைப்பு சிற்பக்கங்களுக்கு அடுத்து ஒரு பகவதி அம்மன் கோவிலும் உள்ளது. கிபி 13 ஆம் நூற்றாண்டில் சமண கோயிலில், பகவதியம்மனை பிரதிட்டை செய்து இந்து சமயக் கோயிலாக மாற்றப்பட்டுள்ளதாக நம்பப்படுகிறது.

பகவதி அம்மன் கோவில் முன்பு பலிபீடம் ஒன்றும், ஒரு குளமும் உள்ளது. கோவிலின் இடதுபுறத்தில் கல்வெட்டுகளையும் காண இயலும். இவை வட்டெழுத்துக்களால் எழுதப்பட்டிருக்கின்றன. அதன் அருகில் இருக்கும் தூண் ஒன்றிலும் வட்டெழுத்துக்கள் எழுதப்பட்டிருப்பதை நம்மால் காண இயலும்.
இதன்மூலம் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே சமணம் மற்றும் இந்து சமய கோவில்களை ஒரே இடத்தில் மக்கள் வழிபட்டுள்ளனர் என்பதை அறியலாம். இது பண்டைய காலத்து மக்களின் மதநல்லிணக்கத்திற்கு சான்றாக அமைந்துள்ளது.
சிதறால் மலையின் உச்சியில் சென்றால் விமானம் போன்ற அமைப்புகொண்ட கட்டடம் ஒன்றை காணலாம்.

இயற்கை எழில் கொஞ்சும் சிதறால் மலைக் கோவில் நம் வாழ்க்கையில் ஒருமுறையாவது காண வேண்டிய வரலாற்று சிறப்புமிக்க இடங்களுள் ஒன்றாகும்.