திரைப்படப் பாடல்கள் என்பது பலருக்கும் பலவிதமான அனுபவங்களையும், உணர்வுகளையும் தருகின்ற இசை ஈர்ப்பு விசை.
பொழுதுபோக்காக இருக்கும் திரைப்பட பாடல்கள் பல சமயங்களில் நம்மை தாலாட்டும் அம்மாவாக, தோள் உரசும் தோழனாக, நம்மை செதுக்கும் சிற்பியாக, சுமந்து செல்லும் படகாக, நம் கண்ணீரை வாங்கிக் கொள்ளும் கோப்பையாக என அனைத்து நேரங்களிலும் நமக்குள் ஒவ்வொரு வித புதுப்புது உணர்வுகளை ஏற்படுத்தும்.
இப்படிப்பட்ட பாடல்களை கேட்கும் பொழுது பெரும்பாலும், அதை இசையமைத்தவர்களுக்கும், பாடியவர்களுக்குமே அந்த பெருமை போய் சேர்ந்து விடுகிறது. அதற்கு வரி வடிவம் அளித்து உயிர் கொடுத்த பாடல் ஆசிரியர்களை நாம் மறந்து விடுகின்றோம்.
அதில் சில கவிஞர்கள் மட்டுமே விதிவிலக்காக இருக்கிறார்கள். பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், கவியரசு கண்ணதாசன், கவிப்பேரரசு வைரமுத்து, நா.முத்துக்குமார், பழனி பாரதி என மிகச் சிலரே நம் ஞாபகங்களில் வந்து போகிறார்கள்.
அந்த வரிசையில் மிக முக்கியமான இடம் பிடித்த கவிஞர் தான் பா விஜய். பொதுவாக நிறங்களுக்கும் சாபம் இருக்கின்றது என்பதற்கு கருமை நிறம் ஓர் எடுத்துக்காட்டு. தலைக்கேசமும் கருவிழியும் கருப்பாக இருக்க வேண்டும் என்று விரும்புகின்ற நாம், ஏனோ நம் தோலின் நிறம் மட்டும் கருப்பாக இருக்கக் கூடாது என்று விரும்புகின்றோம், நினைக்கின்றோம்.
இரண்டாயிரத்தில் வந்த ஒரு பாடல் அந்த எண்ணத்தை மாற்றி, கருப்பின் சிறப்பை அழகாக சொன்னது, கருப்பின் பெருமையை சொன்ன அந்த பாடல் தமிழ்நாட்டின் பட்டி தொட்டிகளில் எல்லாம் பிரபலமானது. கருப்பானவர்கள் எல்லோரும் கம்பீர நடை போட உதவியது அந்த பாடல்.
அது இரண்டாயிரத்தில் வெளிவந்த வெற்றிக் கொடி கட்டு படத்தில் இடம்பெற்ற கருப்புதான் எனக்கு புடிச்ச கலரு பாடல் அந்த பாடல் வந்த பிறகு தான் பா. விஜய் என்ற கவிஞனை தமிழகம் திரும்பிப் பார்த்தது.
அந்த பாடலை எழுதுவதற்கு முன்பே 1996 இல் ஞானப்பழம் படம் மூலம் அறிமுகமான பா விஜய் ஏற்கனவே நீ வருவாய் என, வானத்தை போல, உன்னைக் கொடு என்னை தருவேன் உள்ளிட்ட சில படங்களில் பாட்டு எழுதி இருந்தார். வெற்றிக் கொடி கட்டு படம் வந்த அதே ஆண்டில் பா. விஜய் சிநேகிதியே படத்தில் ‘தேவதை வம்சம் நீயே’ பாடலையும், பார்வை ஒன்றே போதுமே படத்தில் ‘ஏ அசைந்தாடும்’ பாடலையும் எழுதி பெரும் கவனத்தை ஈர்த்தார்.
அடுத்த ஆண்டு 2001 இல் துள்ளுவதோ இளமை, சமுத்திரம், உள்ளம் கொள்ளை போகுதே என வரிசையாக பல படங்களில் பா விஜய்யின் பேனா கவிதை உழவு செய்தது.எல்லாவற்றுக்கும் முத்தாய்ப்பாக 2004 இல் இயக்குனர் சேரன் இயக்கத்தில் வெளிவந்த ஆட்டோகிராப் படத்தில் இடம்பெற்ற ஒவ்வொரு பூக்களுமே பாடல் துவண்டு போன உள்ளங்களை தூக்கி நிறுத்தியே பாடலாக அமைந்தது.

“காலப்போக்கில் காயம் எல்லாம் மறைந்து போகும் மாயங்கள் “என்ற வரிகளும் “மனிதா உன் மனதை கீறி விதை போடு மரமாகும், அவமானம் படுதோல்வி எல்லாமே உரமாகும்” உள்ளிட்ட இன்னும் பல தன்னம்பிக்கை நிறைந்த வரிகளும் அந்தப் பாடல் இன்றும் ஒரு நம்பிக்கைக்குரிய தத்துவ பாடலாக, பா விஜய்யின் அற்புதமான படைப்பாக அமைந்தது.
இந்த பாடலுக்காக 2004 இல் பா விஜய் சிறந்த பாடலாசிரியருக்கான இந்தியாவின் தேசிய விருது பெற்றார். அதன் பிறகு அடுத்தடுத்த ஆண்டுகளில் பல பாடல்களை எழுதி மக்களின் மனதில் நிரந்தரமாக குடியேறினார் பா விஜய் .
கவிஞராக பாடலாசிரியராக இருந்த பா விஜய் “ஞாபகங்கள்”, “இளைஞன்”, “ஸ்ட்ராபெரி” போன்ற படங்களில் நாயகனாக திரையுலகிலும் ஜொலிக்க ஆரம்பித்தார்.

பாடல் ஆசிரியராக மட்டுமல்லாமல் ஒரு சிறந்த படைப்பாளியாகவும் பா விஜய் பரிணமிக்கிறார். “உடைந்த நிலாக்கள்”, “போர் புறா”, ” நிழலில் கிடைத்த நிம்மதி”, “கண்ணாடி கல்வெட்டுகள்”, “ஞாபகங்கள்”, “சௌபர்ணிகா” என 50-க்கும் மேற்பட்ட படைப்புகளை படைத்துள்ள பா விஜய் தேசிய விருது, சினிமா எக்ஸ்பிரஸ் விருது உள்பட பல விருதுகளை வாங்கி உள்ளார்.
இளம் கவிஞர்களில் முக்கியமானவராக கருதப்படுகின்ற பா விஜய்யின் பிறந்த தினம் அக்டோபர் 20ஆம் தேதியில், இன்னும் பல படைப்புகளையும் பாடல்களையும் பா விஜய்யின் பேனா நமக்கு வழங்க வேண்டும் என்ற எதிர்பார்ப்புடனும் அன்பான வேண்டுகோளுடனும் அவரை வாழ்த்துவதில் பெருமை கொள்கிறது சூரியன் FM.