தமிழ் சினிமாவை தன் பால் திரும்பி பார்க்க வைத்த ஓர் “ரசனை மிகுந்த இலக்கியவாதி “பால நாதன் பெஞ்சமின் மகேந்திரன்.” ஒவ்வொரு புல்லும் இவரின் கேமரா பார்வையில் அழகு பெறுவது ஆச்சர்யம்! இவருடைய படைப்பில் ஒவ்வொரு படமும் இன்னொரு முகம் பெறும்.
சினிமா என்பதை வெறும் பொழுதுபோக்காக மட்டும் இல்லாமல் மற்றொரு உலகமாக காண்பித்தார். சூரியனின் அழகை ரசிக்க வைத்தார். பனிப்பொழிவை உணர வைத்தார். அவ்வளவு ஏன் கடற்கரையை கூட கதாபாத்திரமாக மாற்றியமைத்த பன்முக திறமை பெற்றவர் தான் ‘பாலு மகேந்திரா’.
ஒளிப்பதிவாளராக, இயற்கையான ஒளிகளைக் கொண்டே சிறந்த காட்சி அனுபவத்தை உருவாக்குவதில் அசாத்தியமான வல்லமை பெற்றிருந்தார் பாலு மகேந்திரா. ஒரு இயக்குநராக நிலைபெற்றுவிட்ட பிறகு மற்ற இயக்குநர்களின் படங்களுக்கு பாலு மகேந்திரா ஒளிப்பதிவு செய்யவில்லை. தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி என 5 மொழிகளில் 23 திரைப்படங்களை இயக்கினார் பாலு மகேந்திரா.

அவர் இயக்கிய படங்கள் யதார்த்தத்தையும் இயல்பையும் பதிவு செய்து, நிஜவாழ்க்கைக்கும் மிக நெருக்கமான படங்களாக இருந்தன. அவருடைய படங்களில் சண்டைக் காட்சிகளையும், செட் போட்டு எடுக்கப்பட்ட டூயட் பாடல்களையும் விரல் விட்டு எண்ணிவிடலாம்.
மூடு பனி’, ‘மூன்றாம் பிறை’ போன்ற கிளாசிக் அந்தஸ்து பெற்றுவிட்ட படங்களாகட்டும் ‘மறுபடியும்’ , ‘வண்ண வண்ண பூக்கள்’, ‘ஜூலி கணபதி’ போன்ற மனித உறவுகளைச் சுற்றி அமைந்த படங்களாகட்டும் ‘நீங்கள் கேட்டவை’ , ‘ரெட்டைவால் குருவி’ , ‘சதிலீலாவதி’ உள்ளிட்ட கலகலப்பை மையமாகக் கொண்ட படங்களாகட்டும் அனைத்திலும் உண்மைக்கும் இயற்கைக்கும் நெருக்கமான பாலு மகேந்திராவின் முத்திரை அழுத்தமாகப் பதிந்திருக்கும்.
நாம ஜெயிக்கிறோம், சம்பாதிக்கிறோம், ஒண்ணுமே இல்லாம போறோம் , இது எல்லாத்தையும் தாண்டி நாம இஷ்டப்பட்ட வேலைய இஷ்டப்பட்ட நேரத்துல செய்றோம் அப்படிங்கறது எவ்வளவு பெரிய பாக்கியம்! என்ற வசனத்தை அவர் நிறைய இடங்களில் பதிவு செய்து இருக்கிறார். அதற்கு எடுத்துக்காட்டாகவும் வாழ்ந்தார்.
சினிமாவிற்கான பாலுமகேந்திராவின் பங்களிப்பு எப்போதும் நினைவு கூறப்படும். சினிமாவை இவர் அளவிற்கு நேசித்த இன்னொரு படைப்பாளியை இன்றைய தலைமுறை பார்க்குமா என்பது கேள்விக்குறிதான்.
சினிமாவை செல்லுலாய்ட் வடிவிலான வரலாறாக பார்த்த பாலுமகேந்திராவின் பிறந்தநாளன்று அவரை நினைவு கூறுவதில் பெருமகிழ்ச்சி அடைகிறது சூரியன் பண்பலை.
வரி வடிவம் : விஜித்ரா
தொகுப்பாளர், சேலம் சூரியன் பண்பலை.