Specials Stories

வெண்ணெயும் ஆன்மிகமும்

வெண்ணெயும் ஆன்மிகமும்
வெண்ணெயும் ஆன்மிகமும்

நம் உணவு ஒன்றை கடவுளுக்கு படைப்பதில் நாம் அலாதி பிரியம் கொண்டவர்கள். அப்படி ஒரு உணவு பொருளை படைப்பதின் வகை காரணத்தை தெரிந்து கொள்வோம். வெண்ணெய் என்பது நம் அன்றாட உணவில் இல்லையென்றாலும் நமக்கு பிடித்த ஒன்று தான் வெண்ணெய் என்றாலே நம் நினைவிற்கு கிருஷ்ணர்தான் வருவார். எத்தனையோ பொருட்கள் இருந்தாலும் கண்ணனுக்கு ஏன் வெண்ணெய் மட்டும் மிகவும் பிரியமானதாக இருந்தது?கண்ணனுக்கு வெண்ணெய் படைத்து வழிபடுவதற்கு என்ன காரணம்? என்பதை இங்கு தெரிந்து கொள்ளலாம்.

தெய்வங்களில் கிருஷ்ணருக்கும், ஆஞ்சநேயருக்கும் வெண்ணெய் படைத்து வழிபடுவது மிகவும் சிறப்பானதாகும். ஆனால் கண்ணன் வெண்ணெய் திருடு சாப்பிட்டதற்கும், அவருக்கு வெண்ணெய் பிரியமாக இருப்பதற்கும் பின்னால் மிகப் பெரிய ஆன்மிக ரகசியம் அடங்கி உள்ளது. அதாவது நமக்குள் இறை பக்தியை உறை விட்டு, வைராக்கியம் என்னும் உரியிலே வைத்து, பக்தியாகிய மத்தையும், ஞானமாகிய கயிறையும் கொண்டு கடைந்தால், நமக்குள் மறைந்திருக்கும் இறை தன்மையாகிய வெண்ணெய் வெளிப்படும்.

மத்தில் தான் வெண்ணெய் படியும், கயிறில் படியாது. அது போல் பக்தியில் தான் இறைவன் நிறைந்திருப்பான். வெறும் ஞானம் மட்டும் இருந்தால் அங்கு இறைவன் ஒட்டுவது இல்லை. பக்தியில் வெளிப்பட்ட இறைத்தன்மையாகிய வெண்ணெய்யை உண்டு, கோபியர்களுக்கு அருள் புரிந்ததே இதற்கு பின்னால் இருக்கும் தத்துவமாகும். இரண்டாவதாக ஆஞ்சநேயருக்கு பக்தர்கள் வெண்ணெய் சாத்தி வழிபடுவதை காண்போம்.

ஆஞ்சநேயரை வழிபடுபவர்கள் பெரும்பாலும் வெண்ணெய் காப்பு செய்தும், வெற்றிலை மாலை சமர்பித்தும் வழிபடுவது வழக்கம். அசோகவனத்தில் சீதையை கண்ட ஆஞ்சநேயருக்கு வெற்றிலையை தூவி ஆசி வழங்கியதாலும், போரில் ஏற்பட்ட காயத்தினால் உண்டான வெம்மையை குறைக்கவும் ஆஞ்சநேயருக்கு சீதை வெண்ணெயை தடவியதாலும், ஆஞ்சநேயருக்கு வெண்ணெய் காப்பும், வெற்றிலை மாலையும் அணிவிக்கப்படுவதாக கூறப்படுகிறது.

பக்தர்கள் எந்த ஒரு காரியத்தை செய்யும் முன்பு ஆஞ்சநேயரை வேண்டிக்கொண்டால் அந்தக் காரியம் ஜெயமாக முடியும் என்பது நிச்சயம். இவருக்கு மிகவும் பிடித்தமானது செந்தூரமும், வெண்ணெயும், வெற்றிலையும் தான். அதனால் தான் இவரை தரிசிக்க செல்லும் பெரும்பாலானவர்கள் வெண்ணெயையும், வெற்றிலை மாலையையும் சாற்றி வேண்டி வணங்கி வருகின்றனர்.

Article By – சுப்பு (பெரிய தம்பி), மதுரை