44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி மாமல்லபுரத்தில் தற்போது நடைபெற்று வருகிறது.
தமிழக முதல்வர், பிரதமர் மற்றும் ஆளுநர் முன்னிலையில் தமிழ் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளுடன் நேற்று கோலகலமாக தொடங்கிய இந்த நிகழ்வில் பங்கேற்க 187 உலக நாடுகளிலிருந்து கிட்டத்தட்ட 3000-க்கும் மேற்பட்ட செஸ் விளையாட்டு வீரர்கள் தமிழகம் வந்துள்ளனர்.
அவர்களை வரவேற்கும் விதமாக நமது கலாச்சாரத்தை பிரதிபலிக்கக் கூடிய தம்பி சிலைகள் சென்னையின் பல்வேறு பகுதிகளில் வைக்கப்பட்டுள்ளது.
செஸ் ஒலிம்பியாட் தொடக்க நிகழ்வில் இந்தியாவில் 75 நகரங்களை சுற்றிவந்த ஒலிம்பிக் ஜோதியை முன்னாள் உலக சாம்பியன் விஸ்வநாதன் ஆனந்த், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் ஒப்படைத்தார். முதல்வர் மற்றும் பிரதமர் இருவரும் இணைந்து இந்த ஜோதியை இளம் கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தா உள்ளிட்ட இந்திய வீரர்களிடம் ஒப்படைத்தனர். இந்திய வீரர்கள் ஒலிம்பிக் ஜோதியை ஏற்றி வைக்க விழா தொடங்கியது.
இவ்விழாவிற்கு வருகை தந்த பிரதமரை தொல்காப்பியம் வழங்கி வரவேற்றார் முதல்வர் ஸ்டாலின்.

தன்னுடைய பல சாதனைகள் மூலம் தமிழகத்திற்கு பெருமை சேர்த்த லிடியன் நாதஸ்வரம், கண்களை கட்டிய படி பியானோ வாசித்து பார்வையாளர்களை சிலிர்க்க வைத்தார்.
உலகளவில் பேசப்பட்ட என்ஜாய் எஞ்சாமி பாடலை பாடகி தீ மேடையில் பாடி அசத்தினார்.
கமல்ஹாசனின் குரலில் தமிழர்களின் வரலாறு ஒலிக்க, 3D தொழில்நுட்பத்தில் காட்சிகள் அமைக்கப்பட்டது.
சிறப்பு விருந்தினராக நடிகர் ரஜினிகாந்த், மகள் ஐஸ்வர்யா உடன் வந்திருந்தார்.
குறுகிய காலத்தில் இந்த சர்வதேச போட்டிக்கான ஏற்பாடுகளை சிறப்பாக செய்து முடித்த அரசு அதிகாரிகளை முதல்வர் மற்றும் பிரதமர் பாராட்டினர். சாலைகளில் வெளிநாட்டினரை வரவேற்ற கரகாட்ட கலைஞர்களுடன் வெளிநாட்டினர் நடனமாடி மகிழ்ந்தனர்.
இது தவிர புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகம் சார்பில் செஸ் ஒலிம்பியாட் நிகழ்ச்சிக்கென பெரிய சதுரங்கத்தில் மனிதர்களை காய்களாக வைத்து அற்புதமான ஒரு வீடியோ உருவாக்கப்பட்டுள்ளது.
தமிழகத்திலிருந்து பிரக்ஞானந்தா, வைசாலி, அதிபன் பாஸ்கரன், கிருஷ்ணன் சசிகிரண், நாராயணன், குகேஷ், கார்த்திகேயன் முரளி, சேதுராமன் ஆகிய 8 வீரர்கள் இந்த போட்டியில் பங்குபெற்றுள்ளனர்.
இத்தொடரின் முதல் சுற்று போட்டிகள் இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. நேரலை ஒளிபரப்பும் செய்யப்படுகிறது.