தந்தை ஒப்பனையாளராய் அன்று….
மகன் ஒப்பற்ற இயக்குனராய் இன்று…
தந்தை திரு.பீதாம்பரம் மிகச்சிறந்த ஒப்பனையாளராய் 30 வருடங்கள் சினிமாவில் வலம் வந்தவர். எனவே சினிமாவின் நுழைவு வாயில் வாசுவிற்கு எளிதில் திறக்கப்பட்டது. எளிதாக திறக்கப்பட்டாலும் தன்னுடைய திறமையால் மட்டுமே தனக்கென்று ரசிகப் பெருமக்களை பல காலமாக தக்கவைத்துக் கொண்டுள்ளார் .
பல வெற்றித் திரைப்படங்கள் கொடுத்த டைரக்டர் சி.வி.ஸ்ரீதர் அவர்களிடம் துணை இயக்குனராக பல திரைப்படங்களில் பணி புரிந்திருந்தாலும், அவர் திரைப்படங்களின் சாயல் துளியும் தன்னுடைய திரைப்படங்களில் வெளிப்படக்கூடாது என்பதில் உறுதியாய் இருந்தார்.
தன்னுடைய உற்ற நண்பன் டைரக்டர் திரு.சந்தானபாரதியுடன் இணைந்து 1981 இல் பன்னீர் புஷ்பங்கள் எனும் திரைப்படத்தை இயக்கி இயக்குனராக திரைப்பயணத்தை தொடங்கினார். அடுத்தடுத்து 3 திரைப்படங்களை ஒன்றாக இணைந்து இயக்கியவர்கள், இனி இருவரும் தனித்தனியாய் தனக்கென பாதையை உருவாக்க தொடங்கலாம் என்று முடிவெடுத்தனர்.
அடுத்து அவர் இயக்கிய படங்கள் எல்லாம் ப்ளாக்பஸ்டர் திரைப்படங்கள் என்று சொன்னால் மிகையாகாது. பணக்காரன், நடிகன், சின்ன தம்பி, மன்னன் என திரை உலகத்தையே தன் பக்கம் திரும்பி பார்க்க வைத்தார்.

யானைக்கும் அடி சறுக்கும் என்பதை போல தொடர்ந்து வெற்றித் திரைப்படங்கள் கொடுத்து வந்த வேலையில் சின்ன சின்ன தோல்விகளும் அவரை வந்தடைந்தது. தொடர் தோல்வியை சந்தித்ததால் இயக்குவதில் இருந்து சிறிது இடைவேளை எடுத்து நடிப்பதில் ஆர்வம் காட்டினார் வாசு. துணை நடிகராகவும், பின் எழுத்தாளராகவும், தயாரிப்பாளராகவும் இருந்த வேளையில் மீண்டும் இயக்குவதற்கு சிறப்பான ஒரு கதையை யோசிக்கத் தொடங்கினார்.
தோல்விகளை கண்டு துவண்டு விடாமல் விழுந்ததை விட அதீத வேகத்தில் எழுந்தார் வாசு. அடுத்து அவர் தமிழில் இயக்கிய சந்திரமுகி திரைப்படம் 800 நாட்களுக்கும் மேல் திரையரங்குகளில் ஓடி வசூல் சாதனை செய்தது. இந்த திரைப்படத்திற்கு பிறகே கோலிவுட்டில் Horror திரைப்படங்கள் பெரிதும் வரவேற்கப்பட்டன.

அடுத்தடுத்த திரைப்படங்கள் மக்களால் பெரிதும் வரவேற்கப்படவில்லை என்றாலும் இவருடைய திரைப்படத்திற்கான எதிர்பார்ப்பு என்றும் மக்களிடத்தில் குறைந்தது கிடையாது. வாசு அவர்களின் சினிமா பயணம் என்பது ஒரு ராட்டினம் போல என்று சொன்னால் அது மிகையாகாது.
வெற்றியெனும் உச்சத்தையும் சரி தோல்வியின் உச்சத்தையும் சரி ராட்டினத்தின் அச்சாணி போல சரிசமமாக கையாண்டுள்ளார். மனம் தளராமல் முயற்சி செய்து என்றும் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்த டைரக்டர் P.வாசு அவர்களுக்கு இன்னும் எண்ணிலடங்கா வெற்றிகள் வந்து சேர வாழ்த்துகிறது சூரியன் FM.