இந்திய வரலாற்றில் பல மாவீரர்களை பற்றிய வரலாறு, அயல்நாட்டில் இருந்து வந்து நம் நாட்டை ஆண்டவர்களை பற்றிய வரலாறுகளை நாம் படித்து வளர்ந்திருக்கிறோம்.
நம் மன்னர்கள் பலர் நம் நாட்டின் மீது போர் புரிந்தவர்களை வென்ற கதைகள், நம் மன்னர்கள் பலர் மடிந்த கதைகள் எல்லாம் கேட்டிருக்கிறோம். ஆனால் இப்போது ஒரு வித்தியாசமான வரலாறு பற்றி தெரிந்து கொள்வோம்.
ராஜா மார்த்தாண்ட வர்மா திருவிதாங்கூர் சமஸ்தானத்தை ஆட்சி செய்து கொண்டிருந்த காலம் அது. 1741 ஆம் ஆண்டு DUTCH நாட்டில் இருந்து கப்பல் மூலம் படையெடுத்து வந்த டச்சு தளபதியான ‘டி லென்னாய்’ தலைமையிலான வீரர்கள் குளச்சல் போரில் தோல்வி அடைந்து திருவிதாங்கூர் வீரர்களால் கைது செய்யப்பட்டனர்.

இதில் குறிப்பிடத்தக்க போர் வீரராக திகழ்ந்தவர் DUTCH தளபதியான EUSTACHIUS BENEDICTUS DE LANNOY. ஆனால் திருவிதாங்கூர் மன்னர் ராஜா மார்த்தாண்ட வர்மாவிடம் சரணடைந்தார் டி லென்னாய். பின்னர் திருவிதாங்கூர் வீரர்களுக்கு துப்பாக்கி, பீரங்கி தயாரிப்பதற்கான பயிற்சி அளிக்கவும் முன் வந்தார். ஏனெனில் டி லென்னாய் அந்த வேலையில் கை தேர்ந்தவர். பின்னர் அவரது திறமையை உணர்ந்து தனது படையில் சேர்த்துக் கொண்டார் ராஜா மார்த்தாண்ட வர்மா.
டி லென்னாய் கிறிஸ்துவ மதத்தை சேர்ந்தவர் என்ற காரணத்தால் ராஜா மார்த்தாண்டவர்மா வசிக்கும் பத்மனாபபுரம் அரண்மனையில் வசிக்க அனுமதிக்கவில்லை. டி லென்னாய் புலியூர் குறிச்சியில் அமைந்திருக்கும் உதயகிரி கோட்டையில் தனது குடும்பத்தினருடன் வசித்திருந்தார். உதயகிரி கோட்டை பண்டைய திருவிதாங்கூர் மன்னரால் கிபி 1600 ஆம் ஆண்டுகளில் கட்டப்பட்டது. பின்பு பதினெட்டாம் நூற்றாண்டில் மீண்டும் புனரமைக்கப்பட்டது. இது 90 ஏக்கர் பரப்பளவு கொண்டதாகும். அங்கு அவருக்கு சிறிய தேவாலயம் ஒன்றும் கட்டி கொடுக்கப்பட்டது.

டி லென்னாய் திருவிதாங்கூர் வீரர்களுக்கு பயிற்சியளிக்க தொடங்கிய பிறகு வீரர்கள் பயிற்சி செய்யும் களமாக மாறியது உதயகிரி கோட்டை. டி லென்னாய் ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்களை கையாளுவதில் கைதேர்ந்தவராக திகழ்ந்தார். திருவிதாங்கூர் சமஸ்தான மன்னர் ராஜா மார்த்தாண்ட வர்மாவுக்கு தொடர் பணியாற்றி வந்த நிலையில் 1758 ஆம் ஆண்டு மன்னர் உயிரிழந்தார். மன்னர் மார்த்தாண்ட வர்மாவின் மறைவிற்கு பின் அடுத்த மன்னராக பதவியேற்றார் தர்ம ராஜா.
தர்ம ராஜாவுக்கு தளபதியாக தொடர் பணியாற்றி வந்த டி லென்னாய் 1777 ஆம் ஆண்டு இயற்கை எய்தினார், பின்பு அவரது விருப்பத்திற்கு இணங்க அந்த தேவாலயத்தின் உள்ளே அவருக்கு கல்லறை எழுப்பப்பட்டது. அவரது கல்லறையோடு அவரது மனைவி, மகன்கள், அவருடன் பணியாற்றிய தளபதிகளின் சமாதியும் உள்ளன. டி லென்னாய் பயன்படுத்திய குதிரையின் சமாதியும் அங்கே இருப்பது குறிப்பிடத்தக்கது.

டி லென்னாய் அவர்களின் சமாதியின் மேல் “நில் பயணி! இங்கே இருக்கிறார் யூஸ்டாசியஸ் பெனடிக்டஸ் டி லென்னாய்: இவர் திருவிதாங்கூர் இராணுவத்தின் தளபதியாக இருந்து, ஏறக்குறைய முப்பத்தேழு ஆண்டுகள் மிகுந்த விசுவாசத்துடன் மன்னருக்கு சேவை செய்தார், அவருடைய படைகளின் வலிமையால் காயாங்குளத்திலிருந்து கொச்சின் வரை அனைத்து ராஜ்யங்களையும் கைப்பற்றினார்.
தனது 62 வது வயதில் 1777 ஜூன் 1 ஆம் தேதி இயற்கை எய்தினார். அவர் நிம்மதியாக ஓய்வெடுக்கட்டும்” என்ற வாசகங்கள் லத்தீன் மற்றும் தமிழ் மொழிகளில் பொறிக்கப்பட்டிருக்கும். அதில் DUTCH நாட்டின் சின்னமும் காணப்படும்.
1729 முதல் 1758 வரையிலான கால கட்டத்தில் பீரங்கி குண்டுகள் மற்றும் துப்பாக்கி செய்ய பயன்படுத்திய உலை கலங்கள் சிதைந்த நிலையில் உதயகிரி கோட்டையின் உள்ளே இப்போதும் காணப்படுகின்றன. இத்தகைய வரலாற்று சிறப்பு மிக்க இடம் மிகவும் வியப்பூட்டுவதாக உள்ளது.