Cinema News Stories

Fahadh Faasil: FaFa என்னும் மாரிசன்…

Fahadh Faasil special article in Tamil 2025
Fahadh Faasil special article in Tamil 2025

கூத்து மட்டுமே மக்களுக்கான பொழுதுபோக்கு சாதனமாக இருந்த அன்றைய காலகட்டத்தில் கூத்துக் கலைஞர்களுக்கு என கிராமங்களில் அபரிதமான மரியாதையும், அளப்பெரிய அபிமானமும் இருக்கும். அந்த கூத்துக் கலைஞர்கள்தான் அன்றைய சூப்பர்ஸ்டார்கள், மெகாஸ்டார்கள். மக்களுக்கு அந்த கலைஞர்கள் மீது அத்துணை அபிமானம் உருவாக காரணம் மற்ற நேரமெல்லாம் சாதாரண சராசரி மனிதர்களாக, சாமானிய மனிதர்களில் ஒருவராக இருக்கும் கூத்துக் கலைஞர்கள் கூத்து நிகழ்த்தும் போது கர்ணனாக, கிருஷ்ணனாக, பீமனாக மற்றும் இன்னபிற புராண நாயகனாக, அந்தக் கதாபாத்திரமாவே உருமாறும் வித்தையில்தான் கலையின் அஸ்திவாரமும், கலைஞர்களின் ஆகிருதியும் அடங்கி இருக்கிறது.அன்றைய கூத்துக் கலைஞர்கள் தொடங்கி இன்றைய செல்லுலாயிட் நாயர்கள் வரை இந்த கதாபாத்திர உருமாற்றமே நடிகர்களை மக்களின் நாயகர்களாக மாற்றுகிறது.

அதிலும் இன்றைய சினிமாவின் பான் இந்தியா பரப்பில், மொழி பேதம் இல்லாமல் பல நடிகர்கள் பல்வேறு திரைப்படங்களில் பங்களிப்பு செய்கிறார்கள். இவர்களின் வரிசையில் முதன்மையான இடத்தை பெறுபவர் FaFa என ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்படும் நடிகர் பகத் பாசில்.

மலையாளம் மற்றும் தமிழில் பிரபலமான இயக்குனர் பாசிலின் மகனான பகத் பாசில் 2002-ம் ஆண்டு தன்னுடைய தந்தை பாசிலின் இயக்கத்தில் மலையாள திரையுலகில் கையேதும் தூரத்து படத்தின் மூலம் அறிமுகம் ஆனார் . ஆனால் அந்த திரைப்படம் தோல்விப்படமாக அமைந்தது மட்டுமில்லாமல் பகத் பாசிலின் நடிப்பும், நடனமும் கடுமையான விமர்சனத்திற்கு உள்ளானது. அந்த படத்திற்கு தான் முழுமையாக தயாராகவில்லை என்பதை உணர்ந்த பகத் பாசில் அதன் பிறகு சில ஆண்டுகள் திரைத்துறையை விட்டு விலகி இருந்தார். அந்த காலகட்டத்தில் அமெரிக்காவில் நடிப்பு பயற்சி எடுத்துக்கொண்டார் எனவும் அதற்கான சிறப்பு வகுப்புகளில் கலந்து கொண்டார் எனவும் சொல்லப்படுகிறது. பின்னர் பகத், கேரளா கஃபே மூலம் மீண்டும் மலையாள திரை உலகிற்குள் வந்தார் அதன் பிறகு அன்றிலிருந்து இன்று வரை அவருக்கு ஏற்றம் மட்டுமே..

Fahadh Faasil special article in Tamil 2025
Fahadh Faasil special article in Tamil 2025

சாப்பா குரிஷு, ரெட் ஒயின், அன்னையும் ரசூலும்,நார்த் 24 கதாம் போன்ற திரைப்படங்களில் தன் அடுத்தகட்ட பரிமாணங்களை நோக்கி நகர்ந்தார், குறிப்பாக மகேஷிண்டே பிரதிகாரம் திரைப்படம் அவருக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. அவருடைய சினிமா பயணத்தில் கும்பலங்கி நயிட்ஸ் திரைப்படம் முக்கிய திரைப்படமாக அமைந்தது அந்த படத்தின் இணை தயாரிப்பாளர் பகத் தான் ஆனால் படத்தில் அவர் ஏற்று நடித்த எதிர்மறை கதாபாத்திரமான ஷம்மி கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றது. எடுத்துக்கொண்ட எந்த கதாபாத்திரமாக இருந்தாலும் அதில் தனது தனி முத்திரையை பதிக்க FaFa -வால் முடியும் என ரசிகர்கள் அவரை கொண்டாடி வருகின்றனர். அதிலும் சென்ற ஆண்டு வெளியான ஆவேசம் திரைப்படத்தில் அவரின் மாறுபட்ட நடிப்பும்,நடனமும் மிகப்பெரிய அளவில் சமூக வலைதங்களில் கொண்டாடப்பட்டது.

தமிழுக்கு எப்போது வருவார் என இங்குள்ள ரசிகர்கள் எதிர்பார்க்கும் அளவிற்கு அவரது மலையாள படங்களும் அதில் FaFa -வின் கதாபாத்திரங்களும் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றிந்தது. விக்ரம், மாமன்னன், வேட்டையன் தற்போது மாரிசன் என தமிழிலும் தனது தடத்தை அழுத்தமாக பதிவு செய்து வருகிறார் FaFa. விக்ரம் படத்தின் அமரை மறந்து மாமன்னனின் ரத்னவேலுவை நாம் ரசித்தோம் என்றால் அதுதான் FaFa -வின் ஆளுமை.

அந்தவிதத்தில் மலையாளத்தில் மட்டுமல்ல தமிழ், தெலுங்கு என பல மொழி சினிமாக்களிலும் தனக்கென தனி இடம் பிடித்துள்ள நடிகராகி விட்டார். FaFa ஒரு படத்தில் நடிக்கிறார் என்ற அறிவிப்பு வந்தாலே ரசிகர்களிடம் ஒரு எதிர்பார்ப்பு ஏற்பட்டு விடுகிறது. இதற்கு அடிப்படையான காரணம் எந்த கதாப்பாத்திரம் ஏற்றாலும் அதில் தத்ரூபமாக அப்படியே பொருந்தி விடும் FAFA நம் காலத்தின் அசல் கலைஞர். ஆம் FaFa-வால் எந்த ஒரு கதாபாத்திரமாகவும் தன்னை உருமாற்றிக்கொள்ள முடியும் அதனால் நாம் தீர்மானமாக சொல்லலாம் FaFa ஒரு மாரிசனே…. நம் காலத்தின் ஆகச்சிறந்த கலைஞராக மக்களின் ஆதர்ச நாயகனாக திகழும் பகத் பாசிலுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவிப்பதில் பெருமிதம் கொள்கிறது சூரியன் எப் எம்.

Article By TM Kannan