இயக்குனர் மற்றும் நடிகரான எஸ்.ஜே சூர்யா அவர்கள் இன்று தனது 54-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். தமிழ், தெலுங்கு, ஹிந்தி என 3 திரைத் துறைகளிலும் எஸ்.ஜே. சூர்யா பணியாற்றியுள்ளார்.

தனது பள்ளிப்படிப்பை முடித்த எஸ்.ஜே. சூர்யா தனக்கு கிடைத்த பொறியியல் கல்லூரி சீட்டை நிராகரித்துவிட்டு சென்னையில் சினிமாவிற்குள் நுழைய வேண்டும் என்ற ஆசையுடன் ஒரு கல்லூரியில் சேர்ந்து படித்தார். தனது அன்றாட செலவுகளை தானே சமாளிக்க வேண்டும் என்ற சூழ்நிலையில் இருந்த இவர் ஹோட்டல்களில் பணிபுரிந்தார். அதன்பின் இயக்குனர் கே. பாக்யராஜ் அவர்களுக்கு அசிஸ்டன்டாக இருந்தார். ஆசை, சுந்தர புருஷன், உல்லாசம் போன்ற படங்களில் துணை இயக்குனராக எஸ்.ஜே சூர்யா பணியாற்றினார்.
“உல்லாசம்” படத்தின் படப்பிடிப்பின் போது அஜீத் குமாரிடம் தனது கதை ஒன்றை எஸ்.ஜே சூர்யா கூறியுள்ளார். அந்தக் கதை தல அஜித்துக்கு பிடித்துப்போகவே எஸ்.ஜே சூர்யா வின் முதல் படமான “வாலி” உருவானது. இப்படம் எஸ்.ஜே. சூர்யாவிற்கு தமிழ் சினிமாவில் ஒரு தனித்துவமான அடையாளத்தை பெற்றுக்கொடுத்தது. அதுமட்டுமின்றி தல அஜீத்தின் திரையுலக வாழ்க்கையில் ஒரு பெரிய திருப்புமுனையாக வாலி திரைப்படம் அமைந்தது.

இப்படத்தின் சிறப்பு காட்சியை பார்த்த தயாரிப்பாளர் ஏ.எம். ரத்னம் “குஷி” பட வாய்ப்பை எஸ்.ஜே. சூர்யாவிற்கு வழங்கினார். விஜய் மற்றும் ஜோதிகாவிற்கு ஒரு மாபெரும் வெற்றிப்படமாக குஷி அமைந்தது. தல மற்றும் தளபதி யை வைத்து தொடர்ந்து வெற்றி படங்கள் கொடுத்த சரித்திர இயக்குனராக எஸ்.ஜே. சூர்யா உருவெடுத்தார்.
இந்த இரு படங்களுமே வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்ப்பை பெற்றது. குஷி திரைப்படம் தெலுங்கு மற்றும் ஹிந்தி மொழிகளிலும் ரீமேக் செய்யப்பட்டது. வெளியான மூன்று மொழிகளிலுமே சூப்பர் ஹிட் படமாக குஷி அமைந்தது.
அதன் பின் 2004 ஆம் ஆண்டு வெளியான “நியூ” திரைப்படம் மூலம் எஸ்.ஜே. சூர்யா கதாநாயகனாக அறிமுகமானார். இப்படத்தை அவரே இயக்கி நடித்தது குறிப்பிடத்தக்கது. அதன்பின் வித்தியாசமான கதைக்களத்தை கொண்டு “அன்பே ஆருயிரே” திரைப்படத்தை இயக்கினார்.

பத்து ஆண்டுகள் படம் இயக்குவதில் இருந்து ஒதுங்கியிருந்த எஸ்.ஜே. சூர்யா 2015 ஆம் ஆண்டு நீண்ட இடைவெளிக்குப் பின்னர் இசை படத்தை இயக்கினார். அப்படத்தை அவரே தயாரித்து, இயக்கி, இசை அமைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. 2016ஆம் ஆண்டு கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் “இறைவி” திரைப்படத்தில் எஸ்.ஜே. சூர்யா நடித்த “அருள்” கதாபாத்திரம் மக்கள் மனதில் பதிந்த தத்ரூபமான கதாபாத்திரமாக நிலைத்து நிற்கிறது.
“ஸ்பைடர்” மற்றும் தளபதியின் “மெர்சல்” திரைப்படங்களில் எஸ்.ஜே. சூர்யா ஏற்று நடித்த கதாபாத்திரங்கள் அவரின் புதிய வில்லன் பரிமாணத்தை ரசிகர்களுக்கு காட்டியது. 2019 ஆம் ஆண்டு வெளிவந்த மான்ஸ்டர் திரைப்படம் தான் எஸ்.ஜே. சூர்யா நடித்து கடைசியாக வெளிவந்த திரைப்படம்.
தற்போது எஸ்.ஜே.சூர்யா நடித்து நெஞ்சம் மறப்பதில்லை, இறவாக்காலம், உயர்ந்த மனிதன் ஆகிய படங்கள் வெளிவர இருக்கின்றன. நடிப்பது, இசையமைப்பது இயக்குவது, தயாரிப்பது, பாடல்கள் எழுதுவது என வெவ்வேறு பரிமாணங்களை திரைத்துறையில் எஸ்.ஜே. சூர்யா வெளிப்படுத்தியுள்ளார்.

இவரது பிறந்தநாளை #HappyBirthdaySJSuryah #HappyBirthdaySJSurya #HBDSJSuryah என இணையத்தில் கொண்டாடிவருகின்றனர். தமிழ் சினிமா கண்ட திறமையான கலைஞர்களில் ஒருவரான எஸ்.ஜே. சூர்யாவிற்கு சூரியன் FM சார்பில் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.