ஒரு பாட்டோட குரல் நம்மள என்ன செய்ய முடியும்? கேட்கும் உதடுகளை தானே புன்னகைக்க வைக்க முடியும், மனதோரம் தேக்கி வைத்த வலியை விழியோரம் கண்ணீராய் கொண்டு வர முடியும், அந்த கண்ணீர் துளிகளுக்கு மருந்தாக முடியும், தேக்கி வைத்த பல நினைவுகளை மீட்டு எடுக்க முடியும், வாழ்வை ரசிக்க வைக்க முடியும், காதலையும் காதலிக்க வைக்க முடியும்!
அப்படி பாடல்களில் தன் குரல் மூலம் பல கோடி மக்களின் உள்ளங்களில் ஜீவ நதியாய் பாயும் மாயக் குரலோன் பாடகர் “ஹரிஹரன்” அவர்கள். ஏ.ஆர்.ரஹ்மான் நமக்கு தந்த ரோஜா !

காற்றின் வழி வரும் அவர் குரல் நம் காதுகளைக் கடந்து மனதின் ஆழத்தை தொடாமல் சென்றதில்லை. அந்த குரல், பாடலின் உணர்வுக்கு ஏற்றார் போல் நம் இதயத் துடிப்பை ஏற்றவோ, இறக்கவோ செய்கிறது என்றால் அது மிகையில்லை!
இன்றும் இரவிற்கே உரிய அமைதியின் மடியில் படுத்து, நிலவொளியை ரசித்து பார்க்கும் போது, நம்மில் பலருக்கு நினைவில் வருவது இவர் குரல் தான் “இது இருள் அல்ல, அது ஒளியல்ல இது ரெண்டோடும் சேராத பொன் நேரம்”.
நம் மனதை மயக்கும் இந்த மாயக்குரலோனை இசைப்புயல் நமக்கு அறிமுகம் செய்தாலும், அந்த குரலின் மாயத்தை அதிகம் பயன்படுத்திக் கொண்டது, தேனிசைத் தென்றல் தேவா தான்!
கொஞ்ச நாள் பொறு தலைவா, ஒரு மணி அடித்தால் கண்ணே உன் ஞாபகம், மின்னல் ஒரு கோடி எந்தன் உயிர் தேடி வந்ததே, அவள் வருவாளா, முதல் முதலில் பார்த்தேன் காதல் வந்ததே, காஞ்சி பட்டு சேலை கட்டி, வண்ண நிலவே வருவது நீதானா, ஊதா பூ, உன் பேர் சொல்ல ஆசை தான், சோனா ஐ லவ் யூ டா, ஹே கீச்சு கிளியே, மொட்டு ஒன்று மலரந்திட மறுக்கும். இப்படி ஹரிஹரனை என்றும் நம் மனதை விட்டு நீங்கா வண்ணம் தன் பாடல்கள் மூலம் அரண் அமைத்தார் தேவா.
மேலும் அந்த ஹரிஹரன் எனும் அரணுக்கு, நம் உள்ளங்களில் வலு சேர்த்தது இசைஞானி இளையராஜா, ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான், வித்யாசாகர் ஆகியோரின் இசை படைப்புகள். தமிழ் சினிமாவில் இன்று தனி சாம்ராஜியம் வைத்துள்ள தல, தளபதிக்கு 90 களில் காதல் உணர்வின் பிரதிநிதியாக இருந்தது ஹரிஹரனின் குரல் தான்! எத்தனையோ பாடகர்கள் அஜித், விஜய்க்குப் பாடினாலும் ஹரி பாடும் பாடல்கள் என்னவோ அவர்கள் இருவரும் நேரடியாகப் பாடியது போலவே தோன்றும்!
இன்றும் ஹரிஹரன் குரலில் பலரின் Favorite-ஆக இருக்கும் “சந்திரனை தொட்டது யார்” பாடலை உருவாக்கும் போது ரஹ்மானுக்கும், கவிப்பேரரசு வைரமுத்துவிற்கும் “ஆம்ஸ்ட்ராங்” என்ற வார்த்தையால் சண்டையே வந்தது. மெட்டுடன் அந்த வார்த்தை பொருந்தவில்லை என்று ரஹ்மான் கூற, முதலில் ஹரி பாடட்டும், அவரால் முடியவில்லை என்றால் மாற்றுவோம் என வைரமுத்து பதில் மொழிய, பின்பு ஹரிஹரன் அதை பாடிய விதம் இன்று வரை வரலாறு. கடினமான அந்த வார்த்தையையும், மெட்டோடு சேர்த்து காதல் உணர்வு ததும்பும் மெலடியாக பாடி இருப்பார்.
திரையில் காதல் மன்னனாக ஜெமினி கணேசன் அவர்கள் இருந்தாலும், 90s , 2000 களில் பாடல்களின் காதல் மன்னன் “ஹரிஹரன்” தான் !
Article by RJ Nalann