Specials Stories

வரலாற்றுச் சாதனை! மகளிர் உலகக் கோப்பையை உச்சிமுகர்ந்த இந்திய சிங்கப் பெண்கள்!

India lift the Women's World Cup
India lift the Women's World Cup

இந்திய மகளிர் கிரிக்கெட் அணி, நேற்று நடந்த ஐசிசி மகளிர் உலகக் கோப்பை இறுதிப் போட்டியில், தென்னாப்பிரிக்க அணியை 52 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி, தங்கள் முதல் உலகக் கோப்பை சாம்பியன் பட்டத்தை வென்று வரலாற்று சாதனை படைத்துள்ளது. 52 ஆண்டுகால உலகக் கோப்பை வரலாற்றில் இந்திய மகளிர் அணி கோப்பையை வெல்வது இதுவே முதல் முறை.

இந்தியாவில் மகளிர் கிரிக்கெட்டின் வரலாறு மிக நீண்டது. இது ஆண்களுக்கான கிரிக்கெட்டின் கட்டுப்பாட்டு வாரியம் (BCCI) உருவாகுவத்திற்கு முன்பே இந்திய மகளிர் கிரிக்கெட் சங்கம் (Women’s Cricket Association of India – WCAI) 1973 ஆம் ஆண்டு மகாராஷ்டிர மாநிலம் புனேவில் நிறுவப்பட்டது. ஆண்களுக்கான முதல் உலகக் கோப்பை (1975) நடப்பதற்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே, பெண்களுக்கான முதல் உலகக் கோப்பை 1973இல் இங்கிலாந்தில் நடந்தது.

Historic achievement! India lift the Women's World Cup
Historic achievement! India lift the Women’s World Cup

இந்திய மகளிர் கிரிக்கெட் அணி தங்கள் முதல் டெஸ்ட் போட்டியை 1976 ஆம் ஆண்டு மேற்கு இந்தியத் தீவுகளுக்கு எதிராகவும், முதல் ஒருநாள் சர்வதேசப் போட்டியை 1978 ஆம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிராகவும் விளையாடியது.

நீண்ட காலமாகத் தனியாக இயங்கி வந்த WCAI, 2007ஆம் ஆண்டு இந்தியத் கிரிக்கெட் கட்டுப்பாடு வாரியத்துடன் (BCCI) இணைக்கப்பட்டது. இதன் பின்னரே, மகளிர் கிரிக்கெட் அணிக்கு அதிக அங்கீகாரம் கிடைக்கத் தொடங்கின.

தங்கள் முதல் ஒருநாள் உலகக் கோப்பைக்காக சுமார் 52 ஆண்டுகள் காத்திருந்த இந்திய மகளிர் அணி இரண்டு முறை கோப்பையை வெல்லும் வாய்ப்பை மிக அருகில் தவறவிட்டனர், 2005 ஆம் ஆண்டு மிதாலி ராஜ் தலைமையிலான அணி இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் தோல்வி அடைந்து கோப்பையை இழந்தது . அதேபோல், 2017ஆம் ஆண்டு லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த இறுதிப் போட்டியில், இந்திய அணி வெற்றி உறுதி என அனைவரும் எண்ணிய நிலையில் இங்கிலாந்திடம் வெறும் 9 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

Historic achievement! India lift the Women's World Cup
Historic achievement! India lift the Women’s World Cup

நேற்று தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி வெற்றி பெற்றதன் மூலம், 52 ஆண்டுகாலமாகத் தொடர்ந்த அந்த ஏக்கத்திற்கும், கோப்பைக்கான காத்திருப்புக்கும் ஒரு பொன்னான முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. இது இந்திய மகளிர் கிரிக்கெட்டின் வரலாற்றில் மிகவும் பெருமைக்குரிய தருணம் ஆகும்.இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியின் மூலம், இந்திய மகளிர் கிரிக்கெட் ஒரு புதிய சகாப்தத்தை நோக்கி அடியெடுத்து வைத்துள்ளது. இது வெறும் கோப்பை மட்டுமல்ல, இது இந்தியாவில் கிரிக்கெட்டைத் தங்கள் கனவாகக் கொண்ட கோடிக்கணக்கான இளம் பெண்களுக்குக் கிடைத்த உத்வேகமாகும்.

Article By – சதீஸ்குமார் மனோகரன்

About the author

Sakthi Harinath