ஆலால விஷமானது தேவர்களை துரத்தியது. தேவர்கள் ஈசனை வலமாக ஓடி வந்தனர். ஆலால விஷம் இடமாக வந்து எதிர்த்தது. விஷம் எதிர்ப்பதைக் கண்டு தேவர்கள் அப்படியே திரும்பி இடமாக வந்தனர். ஆனாலும் வலமாக வந்து எதிர்த்தது. ஆலாலம் முன்னும் பின்னும் இப்படி தேவர்களை எதிர்த்ததால் பிரதோஷ நாள் அன்று சிவனை வலம் இருந்து இடமாகவும், இடமிருந்து வலமாகவும் தரிசனம் செய்ய வேண்டும் என்று சொல்லியிருக்கிறார்கள்.
ஈஸ்வரனை சாதாரண நாளில் இடமிருந்து வலமாக மூன்று முறை வலம் வந்தால் போதுமானது. பிரதோஷ நாளில் “சோமசூக்தப் பிரதட்சி ணம் ” முறையைக் கையாண்டு வலம் வர.. முதலில் சிவ சன்னதி எதிரே இருக்கக்கூடிய ரிஷபத்தின் கொம்பு வழியாக சிவனை தரிசிக்க வேண்டும்.
பிறகு ரிஷபத்தில் இருந்து வலது பக்கமாக சென்று சண்டிகேஸ்வரரை வணங்க வேண்டும். மறுபடியும் அதே வழியில் சென்ற வழியிலேயே திரும்பி ரிஷபத்தின் கொம்பு வழியாக சிவபெருமானை வணங்க வேண்டும். அடுத்து இடது பக்கமாக அபிஷேக தீர்த்தம் விழும் கோமுகி வரை வர வேண்டும்.
மீண்டும் அதே வழியில் திரும்பி ரிஷபத்தின் கொம்பு வழியாக சிவனை தரிசிக்க வேண்டும். திரும்பவும் முதலில் செய்த படி சண்டேஸ்வரரை தரிசிக்க வேண்டும். அப்படியே வலமாக கோமுகி வரை வலம் வர வேண்டும்,அதன் அருகே இருக்கும் சண்டிகேஸ்வரரை வணங்க வேண்டும். மீண்டும் இடது புறமாக ரிஷபம் வரை வந்து கொம்பு வழியாக சிவனை தரிசிக்க வேண்டும்.
பிரதோஷம் நீங்கலாக சோமவாரம் எனப்படும் திங்கட்கிழமைகளிலும் சோமசூக்தப் பிரதட்சிண முறையில் இறைவனை நாம் வலம் வரலாம் என்றும் சொல்லப்பட்டு இருக்கிறது.
Article By – “சூர்யோதயம் ” என். செல்வராஜ், கோவை.

