நம் நாடு சுதந்திரமடைந்து இன்றுடன் 75 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இந்த சுதந்திர தின நன்னாளில் இந்திய விடுதலைக்காக தமிழகத்திலிருந்து குரல் கொடுத்த சுதந்திர வீரர்கள் சிலரது பங்களிப்பு குறித்து பார்ப்போம்.
- இராமநாதபுர மன்னர் செல்ல முத்து சேதுபதி, சக்கந்தி முத்தாத்தாள் தம்பதியினருக்கு 1730 ஆம் ஆண்டில் ஒரு பெண் குழந்தை பிறக்கிறது. அந்த பெண் குழந்தை ஆண் குழந்தைகளுக்கு நிகராக கல்வி, விளையாட்டு, சிலம்பம், வாள்வீச்சு, ஈட்டி எறிதல், அம்பு விடுதல், குதிரை ஏற்றம், யானை ஏற்றம் என அனைத்தையும் கற்றுத் தேர்ந்தவளாக வளர்கிறாள்.
அதுமட்டுமல்ல தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், பிரெஞ்சு, ஆங்கிலம், உருது மொழிகளும் இந்த குழந்தைக்கு அத்துப்படி. 16-வது வயதில் சிவகங்கை மன்னர் முத்து வடுகநாதரை திருமணம் செய்கிறார். வடுகநாதர், ஆற்காட்டு நவாபுக்கு கப்பம் கட்ட மறுத்த காரணத்தால், ஆங்கிலேயப் படை உதவியோடு நவாபின் படைகள் சிவகங்கை மீது போர் தொடுத்து காளையார்கோவிலில் இருந்த மன்னர் வடுகநாதரை திடீரென தாக்கி கொன்று விடுகின்றனர்.
அவரது மனைவியோ சின்ன மருது, பெரிய மருது வீரர்களின் துணையோடு தப்பித்து ஹைதர் அலியிடம் சென்று உதவி கேட்கிறார். அவரும் உதவி செய்ய ஏழாண்டுகள் திண்டுக்கல் கோட்டை, விருப்பாட்சி கோட்டை, அய்யம்பாளையம் என இடம் மாறி மாறி ஆங்கிலேயரை பழி வாங்குவதற்கான திட்டம் தீட்டுகிறார். தளவாய் தாண்டவராயன் பிள்ளை, சேனாதிபதிகள் மருது சகோதரர்கள் மற்றும் குறுநில மன்னர்களை ஒன்றிணைக்க பல இடங்களுக்கும் செல்கிறார்.
1780-ஆம் ஆண்டு தனது 50வது வயதில் ஹைதர் அலியின் படையைத் தலைமை ஏற்று சிவகங்கையை நோக்கி வழி நடத்துகிறார். போர் வியூகம் வகுத்து படைகளை மூன்றாகப் பிரித்து, மும்முனைத் தாக்குதல் நடத்துகிறார். விஜயதசமி தினத்தில் சிவகங்கை அரண்மனை உள்ளே இருக்கும் ராஜராஜேஸ்வரி கோயிலில் பெண்கள் வழிபாடு நடத்துவார்கள். அந்த நாளுக்காக காத்திருந்து மகளிர் படையை திரட்டி ஆயுதங்களை ஆடைக்குள் மறைத்துக்கொண்டு அரண்மனைக்குள் சென்று, திடீர் தாக்குதல் நடத்தினார்.

போரில் மாபெரும் வெற்றி பெற்று சிவகங்கை அரசியாக அரியணையில் அமர்கிறார். இந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றிலேயே ஆங்கிலேயரை வென்று முடிசூடிய ஒரே ராணி அவர் தான் வீரமங்கை வேலு நாச்சியார்.
இந்த வீரப் பெண்மணி தனது 66-வது வயதில் உடல்நலக் குறைவால் இயற்கை எய்தினார். இவரது பெயரில் 2008-ஆம் ஆண்டு தபால் தலை வெளியிடப்பட்டது.

- 1884 ஆம் ஆண்டு திண்டுக்கல், வத்தலகுண்டுவில் உள்ள ஒரு ஏழ்மையான குடும்பத்தில் ஒரு ஆண் குழந்தை பிறக்கிறது. அந்த குழந்தை 12 வயது வரை மதுரையிலும், பின் ஒரு வருடம் கோவையில் கல்வி கற்கிறான். இலவச உணவு கிடைக்கும் என திருவனந்தபுரம் சென்று மேற்படிப்பு படிக்கிறான்.
தமிழ், ஆங்கிலத்தில் சரளமாக எழுதக்கூடிய, கவிதை புனைவு மற்றும் சொற்பொழிவில் சிறந்த அந்த இளைஞன் திருவனந்தபுரத்தில் இளைஞர்களை ஒன்றுதிரட்டி ‘தர்ம பரிபாலன சமாஜம்’ என்ற அமைப்பை உருவாக்கி அவர்களிடையே தேசபக்தியை ஊட்டுகிறான். இதையடுத்து ஆங்கில அரசுக்கு எதிராக செயல்பட்டதாக அங்கிருந்து வெளியேற்றப்படுகிறான். இருப்பினும் விடுதலை வேட்கை தணியாமல் ஊர் ஊராக நடந்து சென்று விடுதலைக் கனலை மூட்டுகிறான் அந்த இளைஞன்.

தூத்துக்குடி சென்று வ.உ.சிதம்பரனாரை சந்தித்து நட்பாகிறான். பாரதியார் உடன் இணைந்து மேடைதோறும் விடுதலைப் போராட்ட முழக்கமிடுகிறான். சென்னை, கல்கத்தா, தூத்துக்குடி, திருநெல்வேலியில் தொழிலாளர் போராட்டங்களை முன்னின்று நடத்துகிறான். பின் ராஜதுரோக குற்றம் சுமத்தப்பட்டு 1908-ல் சிறையில் அடைக்கப்பட்டு கடும் சித்ரவதைக்கு ஆளாகிறான். 1912-ல் விடுதலையாகி, சென்னையில் குடியேறுகிறான்.
மாத இதழ், வார இதழ் தொடங்கி புனைப்பெயரில் கட்டுரைகள் எழுதுகிறான். பல நூல்கள் மற்றும் கவிதைகள் எழுதுகிறான். துறவிபோல காவி உடை அணிந்து தனது பெயரை ‘ஸ்வதந்திரானந்தர்’ என் மாற்றிக்கொண்டு தொடர்ந்து விடுதலைப் போராட்டத்தில் ஈடுபடுகிறான். அவனுக்கு கடுங்காவல் தண்டனை விதிக்கப்படுகிறது. சிறையில் தொழுநோயால் பாதிக்கப்படுகிறான். விடுதலையானதும், சென்னைக்கு வருகிறான்.

உடல்நிலை ஓரளவு தேற தொழுநோயின் தீவிரத்தையும் பொருட்படுத்தாமல், ஊர் ஊராகச் சென்று மீண்டும் போராட்டங்களில் பங்கேற்கிறான். நோயைக் காரணம் காட்டி, பேருந்து, ரயில்களில் ஏற ஆங்கில அரசு தடை விதிக்கிறது. உடல் முழுவதும் புண்ணாகிப் போன போதும், துணியால் மூடிக்கொண்டு நடந்தும், கட்டை வண்டியிலும் பல ஊர்களுக்குச் சென்று சொற்பொழிவாற்றுகிறார்.
தொடர் பயணத்தால் உடல்நலம் குன்றுகிறது. இறுதியாக உடல்நிலை கவலைக்கிடமாகி தனது 41-வது வயதில் பாப்பாரப்பட்டியில் இயற்கை எய்துகிறார். அவர் வேறு யாருமல்ல ‘வீரமுரசு’ என்று போற்றப்பட்ட விடுதலைப் போராட்ட வீரர் சுப்பிரமணிய சிவா அவர்கள் தான். அவரது நினைவாக பாப்பாரப்பட்டியில் மணிமண்டபம் கட்டப்பட்டுள்ளது.

- 1890 ஆம் ஆண்டு கடலூர் முதுநகரில் உள்ள ஒரு எளிய குடும்பத்தில் ஒரு பெண் குழந்தை பிறக்கிறது. அந்த குழந்தையை ஐந்தாம் வகுப்பு வரை மட்டுமே படிக்க வைக்கின்றனர். வளர்ந்து வழக்கம் போல திருமணம் செய்து இல்லற வாழ்க்கையை வாழ்கிறாள் அந்த பெண்.
அவரது கணவர் முருகப்பா பத்திரிகையில் பணியாற்றுபவர். முற்போக்கான அந்த பெண் மகாத்மா காந்தியின் ஒத்துழையாமை இயக்கத்தில் இணைந்து தனது அரசியல் வாழ்க்கையை தொடங்குகிறார். ஒத்துழையாமை இயக்கத்தில் பங்கேற்ற தென்னிந்தியாவின் முதல் பெண்மணி என்ற சிறப்பை பெறுகிறார்.

தனது சொத்துக்களை விற்று இந்தியாவின் விடுதலைப் போராட்டத்திற்காக பணத்தை செலவிடுகிறார். 1927 ஆம் ஆண்டு சென்னையில் நடந்த நீலன் சிலை அகற்றும் போராட்டத்தில் பங்கேற்கிறார். தனது 9 வயது மகளையும், இப்போராட்டத்தில் ஈடுபடுத்தி குழந்தையுடன் சிறைக்குச் சென்றார். இதை அறிந்த காந்தியடிகள் சிறையில் இருந்த இருவரையும் சிறைக்கு சென்று பார்க்கிறார். பின்னர் அவர்களை வார்தா ஆசிரமத்திற்கு அழைத்துச் செல்கிறார்.
1930 ஆம் ஆண்டு நடைபெற்ற உப்புச் சத்தியாகிரகத்திலும் இந்த பெண் கலந்து கொள்கிறார். 1931-ல் அனைத்திந்திய மகளிர் காங்கிரசு கூட்டத்திற்கு தலைமை தாங்குகிறார். 1932 ஆம் ஆண்டு மற்றொரு போராட்டத்தில் கலந்துகொண்டதற்காக வேலூர் சிறைக்கு அனுப்பப்படுகிறார். அந்த சமயத்தில் கருவுற்றிருந்ததால் பிணையில் விடுவிக்கப்படுகிறார். ஆண் குழந்தை பிறக்கிறது. குழந்தை பிறந்த 2 வாரங்களுக்குள் மீண்டும் வேலூர் சிறைக்கு அனுப்பப்படுகிறார்.

பின்னாளில் ஒருமுறை காந்தி கடலூருக்கு வந்தபோது இவரை சந்திக்க முயல்கிறார். ஆனால் ஆங்கிலேயே அரசு அதற்கு தடை விதித்தது. அதை மீறி இந்த பெண் பர்தா அணிந்து ஒரு குதிரை வண்டியில் வந்து காந்தியடிகளை சந்தித்தார். அவரது துணிவை கண்டு வியந்து காந்தியடிகள் இவரை தென்னிந்தியாவின் ஜான்சி ராணி என்று அழைத்தார். அவர் தான் கடலூர் அஞ்சலையம்மாள்.
1947 இல் இந்தியா விடுதலை அடைந்த பின், 3 முறை தமிழகத்தின் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். மேலும் நாட்டுக்காக பாடுபட்ட எனக்கு தியாகி ஓய்வூதியம் வேண்டாம் என மறுத்து விட்டார். 1961-ல் சீ-மூட்லூர் பகுதியில் அஞ்சலை அம்மாள் இயற்கை எய்தினார்.
- 1904-ஆம் ஆண்டு அக்டோபர் 4-ம் தேதி ஈரோடு மாவட்டம் சென்னிமலையில், நாச்சிமுத்து – கருப்பாயி தம்பதியினருக்கு முதல் ஆண் குழந்தை பிறக்கிறது. குடும்ப சூழல் காரணமாக அந்த குழந்தையால் ஆரம்பப் பள்ளி மட்டுமே படிக்க முடிந்தது. அதன் பின் அந்த சிறுவன் நெசவுத் தொழில் செய்கிறான். 19-வது வயதில் திருமணம் செய்கிறான்.
அந்த இளைஞன் நாட்டுப்பற்றிலும், காந்தியக் கொள்கைகளிலும் ஈடுபாடு கொண்டவனாக இருக்கிறான். திருப்பூரில் நடக்கும் பல போராட்டங்களுக்கு தலைமை ஏற்று நடத்துகிறான். 1932-ஆம் ஆண்டு சட்ட மறுப்பு இயக்கம் மீண்டும் தொடங்கியதையடுத்து தமிழகம் முழுக்க அறப்போராட்டம் பரவியது. திருப்பூரில் தேசபந்து இளைஞர் மன்ற உறுப்பினர்கள் ஏற்பாடு செய்த மறியல் போராட்டத்தில் தீவிரமாக பங்கேற்கிறான்.

1932, ஜனவரி 10-ம் தேதியன்று கையில் தேசியக் கொடியை ஏந்தியபடி, தொண்டர் படைக்கு தலைமை ஏற்று அணிவகுத்துச் செல்கிறான். தடையை மீறி ஊர்வலம் சென்றதால், போலீசார் தடியடி நடத்துகின்றனர். ஆனால் இளைஞர் கூட்டம் வந்தே மாதரம்! என முழங்கியபடி முன்னோக்கிச் செல்கிறது.
அதில் பலமாக தாக்கப்பட்டு, மண்டை உடைந்து வந்தே மாதரம்! என முழங்கியபடியே அந்த இளைஞன் சரிந்து விழுகிறான். இரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய நிலையிலும், கரத்தில் பற்றியிருந்த தேசியக் கொடியை அவனது விரல்கள் பற்றியே இருந்தன. பின்னர், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி ஜனவரி 11-ம் தேதி அதிகாலையில் மருத்துவமனையில் உயிரிழக்கிறான். அந்த இளைஞன் தான் நாம் போற்றி வணங்கும் விடுதலை போராட்ட தியாகி திருப்பூர் குமரன்.

அவர் மறைந்த ஒரு மாதத்திற்குள் மகாத்மா காந்தி அவரது குடும்பத்தை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். காமராஜர் அவரது இறுதிக்காலம் வரை குமரன் குடும்பத்தினரை நலம் விசாரித்து பார்த்து வந்தார்.
தமிழக அரசு இவரது தியாகத்தைப் போற்றும் வகையில் திருப்பூரில், திருப்பூர் குமரன் நினைவகத்தை அமைத்துள்ளது. இதில் நூலகம் செயல்படுவதோடு, சுதந்திரப் போராட்ட வீரர்களின் படங்கள் வரையப்பட்டு பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. திருப்பூர் குமரனின் நூறாவது பிறந்த நாளைச் சிறப்பிக்கும் வகையில், சிறப்பு நினைவுத் தபால் தலையை இந்திய அரசு கடந்த 2004-ல் வெளியிட்டது.
இவர்கள் மட்டுமின்றி இது போல தமிழகத்திலிருந்து பலர் இந்திய விடுதலைக்காக வாழ்க்கை முழுவதும் போராடியும், ஏன் உயிரையும் தியாகம் செய்தும் உள்ளனர். அவர்களை இந்த நன்னாளில் இந்தியர்கள் அனைவரும் நினைவு கூர்வோம்.