இயக்குனர் சிகரம் பாலசந்தர் அவர்களின் 90 வது பிறந்தநாள் இன்று (ஜூன் 9, 2020) அவரது ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழ் சினிமாவிற்கு புதிய பரிமாணத்தையும் பல அரிய புதிய முகங்களையும் அறிமுகப்படுத்தியவர் பாலச்சந்தர்.

தமிழ்சினிமாவில் உள்ள எதார்த்தமான படங்களை பட்டியலிட்டால் அதில் பாலச்சந்தரின் படங்களுக்கு பெரிய வரிசையே இருக்கும். ஏறத்தாழ ஐம்பது வருடங்களுக்கும் மேல் தமிழ் சினிமாவிற்காக பாலச்சந்தர் ஆற்றிய கலைப்பணி அவரை இயக்கத்தின் சிகரத்தில் அமர வைத்தது. நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் கதாசிரியராகவும் இயக்குனராகவும் பணியாற்றிய பாலச்சந்தர் தனது படங்களில் இன்று தமிழ் சினிமா கொண்டாடும் பல நட்சத்திரங்களை அறிமுகப்படுத்தியுள்ளார்.
நாகேஷ், சுஜாதா, கமல்ஹாசன், ரஜினிகாந்த், சிரஞ்சீவி, ஜெயப்பிரதா, ஸ்ரீதேவி, ஜெயசுதா, சரிதா, ரேணுகா, நாசர், பிரகாஷ்ராஜ், ரமேஷ் அரவிந்த், விவேக் ஆகிய அனைவருமே பாலச்சந்தர் கொடுத்த அறிமுகத்தில் தங்கள் அடையாளத்தை சினிமாவில் பதிவு செய்தவர்கள் தான்.

பாலச்சந்தர் 9 தேசிய விருதுகளை வாங்கிய ஒரு அற்புத இயக்குனர். அதுமட்டுமின்றி பாலச்சந்தருக்கு பத்மஸ்ரீ பட்டத்தை அரசு கொடுத்து அழகு பார்த்தது. இந்திய சினிமாவின் உயர்ந்த மதிப்புக்குரிய விருதான தாதாசாகெப் பால்கே விருதையும் பாலசந்தர் பெற்றுள்ளார்.
பாலச்சந்தர் தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான கவிதாலயா புரொடக்ஷன்ஸ்-ஐ நிறுவி தமிழ், தெலுங்கு, கன்னடா, ஹிந்தி என 4 மொழிகளிலும் பல அற்புதமான படைப்புகளை தயாரித்துள்ளார்.

தனது இயக்கத்தில் பல அற்புதமான கதாநாயகர்களையும் கதாநாயகிகளையும் அறிமுகப்படுத்திய பாலச்சந்தர் தனது தயாரிப்பில் ஏ.ஆர். ரஹ்மான் எனும் இசை புயலையும் ரோஜா படம் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகப்படுத்தினார். அதுமட்டுமின்றி நாசர், டெல்லி கணேஷ், சார்லி, மதன்பாபு போன்ற திறமையான துணை நடிகர்களையும் பாலச்சந்தர் அறிமுகப்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
பாலச்சந்தர் இயக்குனராக மட்டுமின்றி ஒரு சில படங்களில் சிறப்பு கதாபாத்திரங்களில் நடிக்கவும் செய்துள்ளார். 1996 ஆம் ஆண்டு வெளிவந்த கல்கி திரைப்படத்தில் சிறப்பு கதாபாத்திரத்தில் நடிக்கத் தொடங்கிய இவர் குசேலன், ரெட்டைசுழி, உத்தமவில்லன் போன்ற படங்களில் நடித்துள்ளார்.
பாலசந்தர் தன் திரைவாழ்க்கையில் கடைசியாக நடித்த படம் 2015 ஆம் ஆண்டு கமல்ஹாசன் நடிப்பில் வெளிவந்த உத்தம வில்லன்.

பாலச்சந்தர் 2014ஆம் ஆண்டு டிசம்பர் 23ஆம் தேதி காலமானார். இவரது இழப்பு எவராலும் ஈடு செய்ய முடியாத இழப்பாய் இந்திய சினிமாவிற்கு அமைந்தது. பாலச்சந்தரின் உடல் மண்ணை விட்டுப் போனாலும் அவரது அருமையான படைப்புகள் நம் நினைவுகளை விட்டு நீங்காத பொக்கிஷமாய் அமைந்தது.