“ஆமா இவர் பெரிய PC ஸ்ரீராம், Camera தூக்குனவன்லாம் PC ஸ்ரீராம் ஆகிட முடியுமா”, இந்த வசனத்தை வாழ்நாளில் நாம கேக்காம இருந்திருக்க முடியாது. அப்படி Camera, Cinematography என்றாலே நம் மனதில் நீக்கமற நிறைந்திருக்கும் ஒரு மாபெரும் கலைஞன், PC என்றழைக்கப்படும் PC ஸ்ரீராம்.
திரைத்துறையில் எப்பொழுதும் சிலரின் அறிமுகம் ஒரு மாற்றத்தை உருவாக்கும், ஆயினும் வெகு சிலரின் அறிமுகம் ஒரு புரட்சியை உண்டாக்கும், PC ஸ்ரீராம் ஒரு புரட்சி. திரைப்பட ஒளிப்பதிவின் பிதாமகனாக ரசிகர்கள் கொண்டாடுவதன் காரணம், அவரது காட்சி மொழி.
யாரும் எதிர்பார்த்திராத கோணத்திலும் ஒளியிலும் காட்சிகளில் கவிதை மொழி பாட வைத்த அசாத்திய ஒளிப்பதிவாளர். அவர் ஒளியூட்டிய ஒவ்வொரு காட்சியும் நம்மை சிலிர்க்க வைக்கும், கடல் அளவு இருக்கின்றன அவரின் வியத்தகு காட்சிகள், அதில் சில துளிகளை பற்றி இந்த பதிவில்…

அலைபாயுதே படத்தில் வரும் எவனோ ஒருவன் பாடலில் ஒவ்வொரு Frame-ம் ஒரு தனி போட்டோகிராபி, அந்த பாடலின் எந்த பகுதியை நீங்கள் Pause செய்து பார்த்தாலும் ஒரு அழகான புகைப்பட கவிதை போல் இருக்கும்,
கண்ணாடியை வைத்து ஒளிப்பதிவு செய்வதில் அத்துணை அலாதி பிரியம் கொண்டவர் PC.
அலைபாயுதே படத்தில் ஷாலினி, சொர்ணமால்யாவிடம் பேசும் ஒரு காட்சியில் இருவரும் நிலை கண்ணாடியில் ஒருவரை ஒருவர் பார்த்து பேசுவது போல காட்சி, கண்ணாடியின் நேரே கேமரா தெரிந்திருக்க வாய்ப்பிருந்தும் அதனை லாவகமாக தவிர்த்திருப்பார். நாயகன் படத்தில் முதன் முதலில் நாயகியை கண்ணாடியில் தான் பார்ப்பார் கதாநாயகன் கமலஹாசன் . நாயகன், அலைபாயுதே, OK கண்மணி, ஐ என கண்ணாடி முன் இவர் காட்டிய பிம்பங்கள் பற்றி சொல்லிக்கொண்டே போகலாம்.

திருடா திருடா திரைப்படம் chasing சீன் நிறைந்தது. ஒரு காட்சியில் ஒரு கிராமத்தில் பேருந்தை சேசிங் சீனில் பறக்கவிட்டிருப்பார்கள், அந்தரத்தில் காரும் பேருந்தும் சில கோழிகளும் பறந்துகொண்டிருக்கும். அதனை மிக அழகாக ஒளிப்பதிவு செய்திருப்பார், குதிரை சேஸிங்கில் camera குலுங்காமல் குதிரையிலிருந்தே படமாக்கியிருப்பார் PC.
அடுத்ததா ‘ஓ காதல் கண்மணி’ இந்த படத்தின் முக்கிய கரு, ஒரு வயதான தம்பதியும் ஒரு இளம் ஜோடியும் ஒரே வீட்டில் வசிப்பது போல இருக்கும். அவர்களுக்குள் இருக்கும் ஊடல் கூடல்களை கதவின் இடுக்கில் மிக அழகாக காட்சிப்படுத்தியிருப்பார் PC.
.jpeg?auto=format%2Ccompress&fmt=webp)
திரையில் உள்ள காதலர்களை தாண்டி நம்மையும் காதல் கொள்ள செய்யும் PC யின் ஒளிப்பதிவு. மௌனராகம் படத்தின் coffee ஷாப் காட்சி, பல திரைப்படங்களுக்கு பிள்ளையார் சுழி. கீதாஞ்சலி (தெலுங்கு) முதல் கண்ட நாள் முதல், ரெமோ வரை கேமரா வழி காதலை கசியவைத்தவர் PC.

தேவர் மகன் படத்தில் அவர் ஒளியூட்டி ஒளிப்பதிவு செய்த காட்சிகள் நிஜமாகவே மாயாஜாலங்களை அரங்கேற்றின. பாசம், வன்மம், பரிதாபம், கோபம், சோகம் என அனைத்து உணர்வுகளையும் அத்தனை இயல்பாக திரையில் மொழி பெயர்த்திருப்பார் PC ஸ்ரீராம்.
அதனால மறுபடியும் சொல்றேன், Camera தூக்குனவன்லாம் PC ஸ்ரீராம் ஆகிட முடியுமா…?!