உன் சமையலறையில், ஆள்தோட்ட பூபதி, ஆசை ஆசை, எகிறி குதித்தேன், அர்ஜுனரு வில்லு, கண்ணும் கண்ணும் நோக்கியா, காதல் சுத்துதே இப்படி எத்தனையோ Evergreen பாடல்களை சொல்லிக்கொண்டே போகலாம் மனதை ஆட்கொள்ளும் பாடலாசிரியர் கபிலனின் வரிகளுக்கு உதாரணமாய்.
கபிலனின் காதல் பாடல்களை பொறுத்தவரையில் அவை அனைவரது மனதிலும் ஆழப் பதிவதற்கான காரணம் என்ன தெரியுமா? பாடல்களில் இடம்பெறும் வரிகளின் அர்த்தம் கற்பனைக்கு அப்பாற்பட்டதாய் அழகானதாய் இருக்கும். உதாரணமாக எகிறி குதித்தேன் பாடலில் ‘ஆனந்தக் கண்ணீர் மொண்டு குளித்தேன், ஒவ்வொரு பற்களிலும் சிரித்தேன்’ என பாடல் முழுவதுமே மெய் சிலிர்க்க வைக்கும் கற்பனை வரிகள் ஆக்கிரமித்திருக்கும்.
அதே போல கண்ணும் கண்ணும் நோக்கியா பாடல் வரிகள் ‘Apple Laptop பெண்ணே மடியில் வைத்து உன்னை விரல்கள் தேய கொஞ்சி நான் ரசிப்பேனே, எனை ஆக்டோபஸ் விரல்களால் சுருட்டிவிட்டாய் ஒரு Atom Bomb உயிருக்குள் உருட்டி விட்டாய்’ என அட்டகாசமாய் அமைந்திருக்கும்.

ஒரு பாடலாசிரியருக்கு கற்பனை வளம் எத்தனை முக்கியமானது, அது ஒரு பாடலை எந்த அளவு மக்களிடம் கொண்டு சேர்க்கும் என்பதற்கு இவரது பாடல்கள் பல உதாரணமாக உள்ளது. கற்பனை வளம் இருந்தாலும் அதனை பாடல் வரிகளில் எதுகை மோனையுடன் எப்படி அழகாக உட்கார வைப்பது என்பதற்கும் கபிலனின் பாடல் வரிகள் உதாரணம்.
காதல் பாடல்களை தாண்டி கபிலனின் பாடல்கள் பல அழுத்தமான அரசியல் பேசக் கூடியது.
போக்கிரி பொங்கல், சென்ன வட சென்ன, உலகம் ஒருவனுக்கா, கற்றவை பற்றவை இப்படி பல பாடல்களிலும் இவரது பரந்துபட்ட அரசியல் சிந்தனை பாமர மக்களையும் சென்று சேரும் வகையில் எளிமையான அழகான எழுத்துக்களால் வெளிப்பட்டிருக்கும்.

சென்ன வடசென்ன பாடலில் ‘உழைக்கும் இனமே உலகை ஜெயித்திடும் ஒருநாள், விழித்து இருந்தால் விரைவில் வருமே அந்த திருநாள்’ என படத்திலிருந்து விலகாமல் கதைக்கேற்ப அரசியல் பேசியிருப்பார். அதேபோல் உலகம் ஒருவனுக்கா பாடலில் ‘அலைகடல் அடங்குமோ அதிகாரக் குரலுக்கு எப்போதும்’ என அரசியல் பேசியிருப்பார்.
அதே போல் தமிழ் சினிமாவில் எப்போதும் இடம்பெறக் கூடிய, கதாநாயகனின் கதாபாத்திரத்தை வர்ணித்து உயர்த்தி கூறும் வகையில் இடம்பெறக் கூடிய முதல் பாடல்கள் மற்றும் கதாநாயகனே கருத்து சொல்லக்கூடிய முதல் பாடல்கள் பலவற்றையும் இவர் எழுதியுள்ளார். குறிப்பாக நடிகர் விஜயின் பல படங்களுக்கு முதல் பாடல்கள் மற்றும் பா.ரஞ்சித்தின் படங்களுக்கும் முக்கியமான பாடல்களை எழுதியுள்ளார்.
மேலும் சென்னை மண்ணுக்கான பாடல்களை எழுதுவதிலும் வல்லவர் இவர். ஐ படத்தில் இடம்பெற்ற ‘மெர்சலாயிட்டேன்’ மற்றும் சார்பட்டா பரம்பரை படத்தில் இடம்பெற்ற ‘வம்புல தும்புல வம்புல தும்புல மாட்டிக்காத’ உள்ளிட்ட இவரது பாடல்கள் சென்னை தமிழில் மாபெரும் வெற்றி பெற்ற பாடல்கள்.

இப்படி சினிமாவில் தனக்கென ஒரு குறிப்பிட்ட எல்லையை வைத்துக் கொள்ளாமல் கொடுக்கப்படும் சூழலுக்கேற்ப தன்னை மாற்றிக்கொண்டு தனது எழுத்துக்களால் அங்கு கோட்டை கட்டும் வல்லமை படைத்தவராக விளங்குகிறார் பாடலாசிரியர் கபிலன். திரையுலகிற்கு வந்து 20 ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் அவர் நிலைத்து நிற்பதற்கு இதுவே காரணம். பாடலாசிரியர் கபிலனுக்கு சூரியன் FM சார்பில் பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம்.