Specials Stories

Mango Day: பழங்களின் அரசன் – மாம்பழம்

பழங்களின் அரசன் – மாம்பழம் | Mango Day Special in Tamil 2025
பழங்களின் அரசன் – மாம்பழம் | Mango Day Special in Tamil 2025

Mango Day: பழங்களின் அரசன் – மாம்பழம் – முக்கனிகளின் முதன்மையானது மாம்பழம். நமது நாட்டின் தேசியக் கனி அது. சிறுவர் முதல் பெரியவர் வரை அனைவரையும் உற்சாகமடையச் செய்யும் மாயாஜாலக் கனியான மாம்பழத்தை, ‘மாதா ஊட்டாத சோற்றை மா ஊட்டும்’ எனச் சிறப்பித்துக் கூறுவர்.

‘மாம்பழத்து வண்டு’ எனும் பதம், ‘பூவை மட்டுமல்லாமல், பழத்தைத் தேடியும் வண்டுகளை வரவழைக்கும் சாமார்த்தியம் மாங்கனிக்கு உண்டு’ என்பதை உணர்த்துகிறது. நாவிலே இனிமையாய்ப் படரும் அதன் சுவைமிக்க சாறு, மன மகிழ்ச்சியை அளிக்கும்.

உலக மக்களுக்கு இந்தியாவால் வழங்கப்பட்ட பெருங்கொடை மாங்கனி. புத்த பிட்சுகளுக்கு அனுமதிக்கப்பட்ட சில உணவு வகைகளுள் மாம்பழமும் ஒன்று. மா ஊறுகாய், மாவடு இல்லாமல் பலரது மதிய உணவு நிறைவு பெறாது எனச் சொல்லலாம்.

முக்கனிகளின் முதன்மையானது மாம்பழம். நமது நாட்டின் தேசியக் கனி அது. மாம்பழங்கள் சுமார் 4,000 ஆண்டுகளுக்கு முன்பே இந்தியாவில் தோன்றியதாக கூறப்படுகிறது. உலகிலேயே அதிகப்படியான மாம்பழங்கள் இந்தியாவில் தான் விளைகின்றன. ஆண்டுக்கு சுமார் 20 மில்லியன் டன் என்ற விகிதத்தில் மாம்பழங்கள் பயிரிடப்படுகின்றன.

கண்களின் ஆரோக்கியத்திற்குத் தேவையான நுண்ணூட்டங்களும் மாம்பழத்தில் உண்டு. இதிலிருக்கும் ‘பெக்டின்’ இரத்தக் குழாயில் கொழுப்புத் திட்டுக்கள் படிவதைத் தடுக்கும். மாம்பழத்தைத் தொடர்ந்து சாப்பிட்டுவர, சருமம் பொலிவடையும். மாம்பழத்திலிருக்கும் ‘மாங்கிஃபெரின்’ எனும் பொருள், வயிறு, குடற் ஆகிய உடற்பாகங்களில் வரக்கூடிய புற்று நோயைத் தடுக்கும் என்கிறது சமீபத்திய ஆய்வு. என்புத் திசுக்களை ஆரோக்கியமாக வைத்திருந்து முதிர்ந்த வயதிலும் நிமிர்ந்த நன்னடை போட மாம்பழம் துணையாக இருக்கும்.

வேதிக்கற்கள், வேதிப்பொருள்கள் ஆகியவற்றின் துணையோடு பழுக்க வைக்கப்படும் மாம்பழங்கள் செரிமானக் கோளாறுகள், அரிப்பு, வாந்தி, பேதி தொடங்கி, நுரையீரல் பிரச்சனைகள் எனப் பல பாதிப்புகளை உண்டாக்கும் என்பதால் கவனம் தேவை. மாம்பழத்திலிருந்து வெளிவரும் வாசனையை அளவீடாகக் கொண்டு மாம்பழங்களைத் தேர்வு செய்யலாம். மாம்பழங்களின் தோல், பளிங்கு போலப் பளபளக்க வேண்டும் என்று எதிர்பார்க்காதீர்கள். கருநிறக் கோடுகள், திட்டுக்கள் இருக்கும் மாம்பழங்களைத் தாராளமாக வாங்கலாம்.

வேனிற்காலத்தில் தாகத்தைத் தணிக்கவும், நீரிழப்பை ஈடுசெய்யவும் மாம்பழச் சாறு அற்புதமான தேர்வு. பழங்களை நேரடியாக வாங்கி, வீட்டிலேயே பழச்சாறு தயாரித்துக்கொள்ளலாம். பாட்டில்கள் அல்லது அட்டைகளில் அடைக்கப்பட்ட பதப்படுத்தப்பட்ட மாம்பழச் சாறைப் பருகுவது நல்லதல்ல.

மாமரங்கள் காய்ப்பதற்கு 4 முதல் 6 ஆண்டுகள் வரை ஆகும். மாமரங்கள் 150 அடி உயரம் வரை வளரக்கூடியது மற்றும் அதிகபட்சமாக 300 ஆண்டுகள் வரை பழங்களைத் தரும். மாம்பழங்களில் அளவற்ற சத்துக்களும் நிறைந்துள்ளன. வைட்டமின் ‘சி’ யை தவிர புரதம், வைட்டமின் பி6, வைட்டமின் ஏ, பொட்டாசியம், மக்னீசியம் போன்ற பிற சத்துக்களும் மாம்பழத்தில் நிறைந்துள்ளன.

பழங்களின் அரசனாக கருதப்படும் மாம்பழங்களை கவுரவிக்கும் வகையில் ஆண்டுதோறும் ஜூலை 22ஆம் தேதி தேசிய மாம்பழ தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. மாம்பழம் என்ற சொல் ஆங்கிலம் மற்றும் ஸ்பானிஷ் மொழி பேசும் நாடுகளில் ‘மாங்கோ’ என்று அழைக்கப்படுகிறது.

இந்த மாம்பழத்தில் பல வகைகள் உண்டு. சிறிய மாம்பழத்திலிருந்து ஒரு அடிவரை நீளம் வளரக்கூடிய மாம்பழங்கள் வரை இந்த உலகில் உள்ளன. அதிலும் ஒவ்வொரு மாம்பழத்திற்கும் ஒவ்வொரு ருசியும் உள்ளது. இந்தியாவைப் பொறுத்த வரையில் மியா, சாகி, காசா, அல்போன்சா, செந்தூரம், சப்போட்டா, பங்கனபள்ளி, மல்கோவா என 100க்கும் மேற்பட்ட மாம்பழ வகைகள் உள்ளன.

Article By -RJ Kannan