Margazhi special Bhajan songs: நம் அண்டை மாநிலமான கர்நாடக தலைநகர் பெங்களூருவில் நான் பணிபுரிந்து கொண்டிருந்தபொழுது, டிசம்பர் மார்கழி மாத அதிகாலையில் அனைத்து சிறிய மற்றும் பெரிய கோயில்களில் ஒலிபெருக்கிகள் மூலம் பக்திப்பாடல்களை போடுவார்கள். ஆனாலும் இதற்கு மத்தியிலும் எந்த ஒரு செயற்கை ஒலிபெருக்கி கருவி இல்லாமல் ரம்மியமான ஆர்மோனியம் மற்றும் சில பக்க வாத்திய கருவிகளுடன் இறை நாமத்தை பாடிக்கொண்டு செல்வார்கள் .அந்த இறை பக்தி பாடல்கள் மார்கழி பனியில் இசை துளியாக என் மனதை வருடி செல்லும் .ஒரு நாள் கன்னடம் அடுத்த நாள் தமிழ் என அத்தனை இந்திய மொழிகளிலும் இறை பக்தி பாடல்களை மார்கழி மாதம் முதல் தை வரை பாடி செல்வார்கள். ஆனால் எனக்கு தமிழை தவிர மற்ற மொழிகளில் பாடப்படும் பக்தி பாடல்கள் புரியாது ஆனாலும் அந்த பாடல்களை கேட்கும்போது என்னுள் இறை பக்தியை உணர்ந்தேன், அப்பொழுதுதான் இசைக்கும் பக்திக்குமான தொடர்பை அறிந்தேன், இசையின் மூலம் இறைவனை அடையலாம் என்பதை உணர்ந்தேன்.
இறைவனை பற்றியும் அவன் புகழை பற்றியும் பாடப்படும் பாடல்கள் இறை பக்தி பாடல்கள் என்றுதான் அது நாள்வரை பொத்தாம்பொதுவாக நினைத்து கொண்டிருந்தேன் .பெங்களுருவில் இந்த இசையை கேட்டபிறகுதான் இந்த இறை இசையின் வடிவம், பெயர் என்ன என்பதை அறிய முற்பட்டேன். அதற்கு பஜன் என்று விடை கிடைத்தது .பஜன் என்பது ஆன்மிக கருத்துக்களை கொண்டு பாடப்படும் பாடல்கள் ஆகும் . இது பஜனம் என்ற சமுஸ்கிருத மொழியிலிருந்து தருவிக்கப்பட்டது.
பஜன் பாடல்கள் பொதுவாக எல்லா காலங்களிலும் பாடப்பட்டலும் கூட குறிப்பாக மார்கழி மாதத்தில் மட்டும் பெரும் விமரிசையாக இந்த பஜன் பாடல்கள் படப்படுவதற்கு கரணம் “மாதங்களில் நான் மார்கழி” என்கின்றார் இறைவன் . தமிழ் மாதம் பன்னிரண்டு, ஒவ்வொன்று மாதத்திற்கும் ஓர் தனி சிறப்பு உண்டு.அதேபோல் மார்கழியில் காலையில் எழுந்து குளித்து இணைவனை வழிபடுவது என்பது அறிவியல் சார்ந்தது
பஜன் ஒன்று அல்லது அதற்கும் மேற்பட்ட பாடகர்களுடன் தம்புரா, ஆர்மோனியம், மிருதங்கம், தபலா மற்றும் தளத்தை அளக்க கூடிய கர்தல் போன்ற இசை கருவிகள் பயன்படுத்தப்படுகின்றன. இவ்வாறு பாடப்படும் பாடல் குழுவினரை மண்டலி என்றும், பாடும் பாடகர்களை பாகவதர் என்றும் அழைப்பார்கள்.
இந்த பஜன் தோன்றிய காலம் என்பது ஈரேழுலோகங்களுக்கு முன் தோன்றியதாக கூறப்படுகின்றது .ஆனாலும் இந்த பஜனை சங்கீர்த்தனத்தை முறைப்படுத்தியவர் சங்கீர்தன மும்முர்த்திகளில் ஒருவரான சத்குருஸ்வாமி , இவர் கும்பகோணம் அருகில் உள்ள மருதாநல்லூரில் வாழ்ந்தவர் ஆவார். இவர்தான் சுலோகங்களாக இருந்த பக்திஇலக்கியங்களை ,பக்கவாத்திய இசை கருவிகளுடன் இசை வடிவமாக்கி எளிய மக்களும் இறைவனை தெரிந்து கொள்ளும் வகையில் நால்வர் தேவாரம், திவ்வியப்பிரபந்தம், திருவாசகம் போன்றவற்றில் பஜன் பாடல்களை இயற்றி உள்ளார்.இவருக்கு பின் வந்த முத்துத்தாண்டவர், மாரிமுத்து பிள்ளை,கோபால கிருஷ்ண பாரதி, நீல கண்டசிவன் ,பாபநாச சிவன் போன்ற பெரியவர்கள் எண்ணற்ற பஜனை பாடல்களை இயற்றியுள்ளனர்.
இந்த பஜனை பாடல்கள் ஒரு மொழிக்கோ, அல்லது ஒரு குறிப்பிட்ட பகுதிக்கோ சொந்தமானது இல்லை .ஏனென்றால்பஜனை பாடல்களின் முன்னோடியான சத்குரு ஸ்வாமிகள் இவற்றை முறைப்படுத்தும் போது மற்ற மொழிகளில் பக்தி இசை பாடல்கள் உதாரணமாக கன்னடத்தில் புரந்தர தாசர் ,மராட்டியத்தில் துக்காராம் ,ஒரிசாவில் ஜெயதேவர் ,மேற்கு வங்கத்தில் கிருஷ்ணா சைதன்யர் போன்றவர்களின் பக்தி பாடல்களில் சிறந்தவற்றை ஒரே பாமாலையின் தொகுத்து பஜன் என்கின்ற இறை இசை பூமாலையாக கோர்த்தார் .
பஜன் பாடல்கள் இணைவனை புகழ்ந்து பாடும் இறை இசை மட்டும் அல்ல ,அணைத்து மொழி மற்றும் கலாச்சாரங்களையும் தழுவி நிற்பதால் இவற்றை தேசிய ஒருமை பாட்டின் காலை வடிவம் என்று கூறினால் மிகையாகாது .
Article By – Jaishankar, Trichy

