குழந்தையாக இருக்கும்போது துருதுரு என்று இருப்பதும், அவர்களே பெரியவர்கள் ஆகும் போது அமைதியானவர்களாக மாறுவதும்; அதேபோன்று குழந்தை பருவத்தில் அமைதியாகவும் பெரியவர்களாகிய பின் நேர் எதிர் மனப்பான்மைகளில் இருப்பவர்களையும் நாம் பல நேரங்களில் சந்தித்து இருக்கலாம் .
திரை உலகிலும் அதே போன்று குழந்தை நட்சத்திரமாக பல படங்களில் ஆதிக்கம் செலுத்தியவர்கள், அவர்கள் வளர்ந்த பிறகு சினிமாவில் பெரிய இடங்களை பிடிக்காமல் போய்விடுகிறார்கள். ஆனால் இதற்கு விதிவிலக்காக சிலர் இருக்கிறார்கள், அவர்களில் முக்கியமானவர்கள் கமல்ஹாசன் மற்றும் ஸ்ரீதேவி.
அந்த வரிசையில் குழந்தை நட்சத்திரமாகவும் ஜொலித்து பின்னாளில் புகழ்பெற்ற நடிகையாகவும் திகழ்ந்தவரின் பிறந்த தினம் இன்று. அவர்தான் நடிகை மீனா.

1982-ல் தனது 6வது வயதில் நெஞ்சினிலே என்ற படம் மூலம் பயாஸ்கோப் உலகத்தில் தோன்றிய மீனா, முதலில் நடித்தது நடிகர் திலகம் சிவாஜியுடன். அதனாலோ, என்னவோ குழந்தையாக இருந்தாலும் நடிப்பை மிக லாபகமாக படித்துக் கொண்டார். அதே வருடம் ரஜினிக்கு மகளாக எங்கேயோ கேட்ட குரல் படத்தில் நடித்தார்.
இதற்கிடையில் தெலுங்கு பட உலகில் குழந்தை நட்சத்திரமாக மீனா ஏராளமான படங்களில் நடித்தார். 2 ஆண்டுகள் இடைவெளியில் மீண்டும் அன்புள்ள ரஜினிகாந்த் படத்தில் நடித்து பெரும் புகழ் பெற்றார். தமிழ், தெலுங்கு, மலையாளம் மொழிகளில் குழந்தை நட்சத்திரமாக மட்டும் மீனா நடித்த படங்களின் எண்ணிக்கை 21.

எத்தனை நாட்கள் தான் மீனாவை குழந்தையாகவே நடிக்க காலம் அனுமதிக்கும்? நவ யுகம் என்ற தெலுங்கு படத்தில் பதவி உயர்வு பெற்ற மீனாவுக்கு, தமிழில் கதாநாயகியாக பெயர் பெற்றுக் கொடுத்த படம் என் ராசாவின் மனசிலே. 10 ஆண்டுகளுக்கு முன் எந்த நடிகருக்கு மகளாக நடித்தாரோ, அதே நடிகருடன் டூயட் பாடும் கதாநாயகியாக மாறினார் மீனா. 1993 எஜமான் படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடித்தவர், அடுத்து வீரா படத்தில் அவருடன் டூயட் பாடினார்.
ரஜினியோடு மட்டுமல்லாமல் கமல், விஜயகாந்த், சரத்குமார், சத்யராஜ், அஜித், கார்த்திக், மம்முட்டி, மோகன்லால், சிரஞ்சீவி, விக்னேஷ் என தென்னிந்தியாவின் எல்லா முன்னணி நடிகர்களுடனும் நடித்திருக்கும் மீனா வாங்கிய விருதுகள் ஏராளம். தமிழ்நாடு அரசின் கலைமாமணி விருது, ஆந்திர அரசின் நந்தி விருது, சினிமா எக்ஸ்பிரஸ் விருது, பிலிம் பேர் விருது என பல விருதுகளை பெற்றிருக்கிறார்.

அழகும் குழி விழுந்த கன்னமுமாக குடும்ப பாங்கான நடிகையாக தென்னிந்திய திரை உலகில் மின்னிக் கொண்டிருக்கும் மீனாவின் கணவர் வித்யாசாகர் கடந்த ஜூன் மாதம் நுரையீரல் தொற்று காரணமாக மறைந்து போனார். அவரின் குடும்ப வாழ்க்கையில் பெரும் இழப்பாக இடியாக இது அமைந்தது என்றாலும் அவருக்கு ஆறுதலாக இருப்பது அவரது சின்னஞ்சிறு மகள்தான்.
குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி கதாநாயகியாகி இன்று வரை தென்னிந்திய சினிமா உலகில் வலம் வந்து கொண்டிருக்கும் மீனாவுக்கு இன்று பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துக் கொள்வதில் சூரியன் FM பேரானந்தம் கொள்கிறது.