Cinema News Stories Trending

கர்ணனின் பண்டாரத்தி புராணம் இதோ !!!

தனுஷ் நடித்து மாரி செல்வராஜ் இயக்கியுள்ள கர்ணன் திரைப்படத்தின் இரண்டாம் பாடலான “பண்டாரத்தி புராணம்” பாடல் தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது. ஏற்கனவே இப்படத்தின் “கண்டா வர சொல்லுங்க” பாடல் வெளியாகி பட்டிதொட்டியெங்கும் ஒலித்துக்கொண்டிருக்கும் சூப்பர்ஹிட் பாடலாக அமைந்தது.

இப்பாடலின் தொடக்கத்தில் “பண்டாரத்தி எனும் மாடப்பறவை, ஏமராஜாவின் மாடவிளக்கான கதை” என குறிப்பிடப்பட்டிருக்கிறது. இப்பாடல் மனைவியை இழந்த கணவனின் வேதனையை எடுத்துரைக்கும் பாடலாக அமைந்துள்ளது. தேனிசைத் தென்றல் தேவா அவர்களின் காந்த குரல், யுகபாரதியின் அற்புத வரிகளுக்கு உயிர்கொடுத்துள்ளது என்றே கூறலாம்.

தேவாவின் பல கானா பாடல்களை நாம் நிறைய கேட்டு ரசித்திருந்தாலும், ‘பண்டாரத்தி புராணம்’ போன்ற கிராமிய பாடல்களை அவர் குரலில் கேட்கும்போது ஒரு இனம் புரியாத இனிமை நம் மனதில் உருவாகிறது. இப்பாடலில் சந்தோஷ் நாராயணின் இசை வழக்கம் போல் “Hats Off” என நம்மை பாராட்ட வைக்கிறது.

இதுவரை வெளியான இரு பாடல்களை வைத்து, ரசிகர்கள் பலரும் கர்ணன் படத்தின் கதை எவ்வாறு இருக்கும் என்ற மன ஆராய்ச்சியில் ஈடுபடத் தொடங்கிவிட்டனர். இன்று வெளியிடப்பட்ட வீடியோவில் தனுஷ் குத்தாட்டம் போடும் ஒரு சிறிய பகுதியும் இடம்பெற்றுள்ளது. இப்பாடலும் ‘கண்டா வர சொல்லுங்க’ பாடலை போலவே நம் மனதை விட்டு நீங்காத மெகாஹிட் பாடலாக அமையும் என தெரிகிறது.

கர்ணனை திரையில் நாம் கொண்டாட இன்னும் 34 நாட்களே உள்ள நிலையில், ‘பண்டாரத்தி புராணம்’ பாடல் படத்தின் மீது உள்ள எதிர்பார்ப்பை மேலும் அதிகப்படுத்தியுள்ளது. ‘பண்டாரத்தி புராணம்’ பாடலை கீழே காணுங்கள்.

About the author

alex lew