தர்ம துரை படத்தின் ஆரம்பக்காட்சியில் கையில் சேவலோடு முகத்தில் சோகத்தோடு வந்து, காளை மாட்டுக்கு தண்ணீர் வைக்கும் காட்சியில் பாண்டியம்மாவை மட்டுமே பார்க்க முடியும். கிழக்குச் சீமையிலே படத்தில் அண்ணனிடம் கெஞ்சும் தங்கையாக விருமாயி மட்டுமே தெரிவாள்; கேளடி கண்மணியில் சாரதா டீச்சரை மட்டுமே பார்க்க முடியும்.
ஒரு நட்சத்திரம் தன்னை மறைத்துக் கொண்டு அவர் ஏற்று நடிக்கும் கதாபாத்திரத்தை மட்டும் திரையில் காட்டும் மாயவித்தை ஒரு சிலருக்கு மட்டுமே கைவரப்பெற்றது; அந்த வகையில் ராதிகா சரத்குமார் காட்டிய நடிப்பின் பயணம் இன்றும் தொய்வில்லாமல் இருக்கிறது.
நடிக வேள் எம்.ஆர்.ராதாவின் மகள் என்ற அடையாளம் அவருக்கு கிழக்கே போகும் ரயிலில் ஏற மட்டும் பயணச்சீட்டாக அமைந்திருக்கலாம். ஆனால் தமிழில் தொடங்கிய அந்த பயணம் தென்னிந்திய மொழிகள்,ஹிந்தி என அனைத்திலும் இன்று வரை வெற்றிகரமாக தொடர அவரது பெரும் உழைப்பே காரணம்.

ரெட்டை வால் குருவி படத்தில் வரும் கண்ணன் வந்து பாடுகிறான் பாடலில், அவர் காட்டும் நளினம் அலாதியானது; ஊர்க்காவலன் படத்தில் ரஜினியுடனும், பேர் சொல்லும் பிள்ளை படத்தில் கமலுடனும் அவர் நடித்த காட்சிகள் ஒரு நாயகி நகைச்சுவையிலும் ஜொலிக்க முடியும் என்பதற்கு உதாரணம்.
வெள்ளித்திரையில் வாய்ப்பை தவறவிட்ட நடிகைகள் தஞ்சம் புகும் இடமாக தொலைக்காட்சி தொடர்கள் என்ற சொல்லை மாற்றி, வெள்ளித் திரையிலும், சின்னத்திரையிலும் ஒரே நேரத்தில் ஆதிக்கம் செலுத்திக் காட்டினார். அந்த வரலாறு இன்றும் தொடர்கிறது.
ஓரே நேரத்தில், தயாரிப்பாளர்,தொலைக்காட்சி தொகுப்பாளினி, இயக்குநர்,நடிகை என எல்லாத் தளங்களிலும் தொய்வில்லாமல் கால் நூற்றாண்டாய் கால் பதித்து நிற்கும் ராதிகா சரத்குமாரை சித்தி என்றும் வாணி ராணி என்றும் தமிழ் சமூகம் இன்றும் கொண்டாடி மகிழ்கிறது.
நல்ல படைப்பில் தனது பங்களிப்பு இருக்க வேண்டும் என்று எண்ணும் ராதிகா, தெலுங்கில் சுவாதி முத்தியம் படத்தில் நடித்த நேரத்தில், முதல் மரியாதையில் நடிக்க முடியாமல் போன பொழுது அதில் ராதாவுக்கு பின்னணி குரல் கொடுக்கும் வேலையை பாரதிராஜாவிடம் விரும்பி கேட்டு செய்தார்.
அந்த ஈடுபாடே ராதிகாவிற்கு திரையுல வரலாற்றில் தனி இடம் தருகிறது. அவர் தொடர்ந்து திரையில் நிறைவாய் இயங்க சூரியன் FM-ன் பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
Article by RJ Stephen