ஜூனியர் என்.டி.ஆர் மற்றும் ராம் சரண் இணைந்து நடிக்கும் RRR திரைப்படத்தின் glimpse வீடியோ தற்போது youtube-ல் வெளியாகியுள்ளது. பாகுபலிக்கு பின் நீண்ட இடைவெளி கழித்து ராஜமௌலி இயக்கியுள்ள இப்படம் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இப்படத்தில் ஜூனியர் என்.டி.ஆர், ராம் சரண், அஜய் தேவ்கன், ஒலிவியா மோரிஸ், சமுத்திரக்கனி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்தியாவின் சுதந்திரத்துக்கு முன் இருந்த வரலாற்று சிறப்புமிக்க சம்பவங்களை மையமாக வைத்து இப்படம் எடுக்கப்பட்டுள்ளது. இப்படத்திற்கான முதற்கட்ட வேலைகள் நவம்பர் 2018 முதல் நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இன்று வெளியாகியுள்ள glimpse வீடியோ படத்தின் பிரம்மாண்டத்தின் முன்னோட்டமாக பார்க்கப்படுகிறது. வியப்பளிக்கும் Action காட்சிகள் அடங்கிய இந்த வீடியோ படத்தை விரைவில் திரையில் காண வேண்டும் என்ற ஆர்வத்தை தூண்டும் வகையில் அமைந்துள்ளது.

‘நான் ஈ’ படம் முதலே ராஜமௌலி இயக்கும் படங்களுக்கு அகில இந்திய ரசிகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. அந்த வகையில் RRR திரைப்படமும் இந்திய அளவில் மாபெரும் வெற்றியையும் வசூலையும் ஈட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படம் சுமார் 400 கோடி ரூபாய் பட்ஜெட்டில் எடுக்கப்பட்டுள்ளது என அறிவிப்புகள் வெளியாகியுள்ளது.
இப்படத்திற்கு பாகுபலியின் கதாசிரியரான விஜயேந்திர பிரசாத் அவர்களே கதை எழுதியுள்ளார். அதுமட்டுமின்றி பாகுபலியின் இரண்டு பாகங்களுக்கும் இசையமைத்த எம்.எம். கீரவாணி தான் RRR திரைப்படத்திற்கும் இசையமைத்துள்ளார். இப்படம் தெலுங்கு, ஹிந்தி, தமிழ், கன்னடம், மலையாளம் என ஐந்து மொழிகளில் வெளியாகவுள்ளது.
இப்படத்தின் தமிழ் வசனங்களை பிரபல பாடலாசிரியர் மதன் கார்க்கி எழுதியுள்ளது குறிப்பிடத்தக்கது. பாகுபலி மற்றும் பாகுபலி 2 படங்களுக்கும் மதன் கார்க்கி தான் தமிழ் வசனங்களை எழுதியுள்ளார்.
இந்த glimpse வீடியோ வெளியான சில நிமிடங்களில் இருந்தே சமூக வலைதளங்களில் ரசிகர்களால் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது. Youtube-ல் வெளியாகியுள்ள RRR திரைப்படத்தின் glimpse வீடியோவை கீழே காணுங்கள்.
RRR திரைப்படம் பிரம்மாண்ட வெற்றி அடைய சூரியன் FM சார்பில் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம்.