60 ஆண்டுகள்.. தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட 17 மொழிகளில் 48 ஆயிரம் பாடல்கள், 4 தேசிய விருதுகள், 32 மாநில விருதுகள், தமிழக அரசின் கலைமாமணி பட்டம் இவையெல்லாம் ஒரு பெண் கலைஞருக்கு சாத்தியமா? அதுவும் கலைத்துறையில்?? என்னும் வினா எழுவது இயல்புதான்.. தன் கொஞ்சும் தேன்குரலால் இவற்றை சாத்தியமாக்கி திரையிசையில் தனக்கென ஒரு சகாப்தத்தை உருவாக்கிக் கொண்டார் ஒரு பாடகி.. அவர் தென்னிந்தியாவின் நைட்டிங்கேல் எனக் கூறப்படும் திருமதி எஸ்.ஜானகி..
3 வயது மழலையின் போதே இவரது குரலில் குடிகொண்ட இசை தேவதை, ‘விதியின் விளையாட்டு’ எனும் திரைப்படப் பாடல் மூலம் இருபதாம் வயதில் இவரை திரையுலகிற்கு கொண்டு சேர்த்தது. வெளிவராத அந்தப் பாடலால் கூண்டுக்குள்ளேயே பறந்துத் திரிந்த இந்தக் குயிலுக்கு கொஞ்சும் சலங்கையில் ‘சிங்கார வேலனே தேவா’ பாடலின் மூலம் சலங்கை பூட்டப்பட்டது..
அதன்பிறகு இவர் குரலால் கோலோச்சிய இடமெங்கும் தேவகான அரங்கேற்றமே.. திருமதி ஜானகி பாடிய பாடல்களை காணும் போதெல்லாம் உண்மையாகவே திரையில் தெரியும் நடிகர் தான் அதைப் பாடுகிறாரா எனத் தோன்றும் அளவிற்கு ஒவ்வொரு பாடலிலும் அந்தப் பாத்திரத்தை தன் குரலாலே வாழ்ந்திருப்பார். ஒரு பாடல் என்பது இசை மற்றும் வரிகளின் திரட்டு மட்டுமேயன்று.. அது திரையில் தெரியும் பாத்திரத்தின் மாண்பை, காட்சிச் சூழலின் அனுபவத்தை இசைக் கூட்டின் வழியே குரல் கொண்டு கடத்துவதாகும்..

அந்த வகையில் கதாபாத்திரங்களின் சூழ்நிலைகளுக்கு பாடலாசிரியர்கள் எழுதும் வரிகளை தன் உருகும் குரலால் குழைத்து, உணர்ச்சிகளின் நதியை நம் செவிகளின் வழியே இதயத்திற்கு ஓட விட்டிருப்பார் ஜானகி.. ‘சுந்தரி கண்ணால் ஒரு சேதி’ போன்ற பாடல்களில் காதல் கட்டின்றிப் பொழியும் என்றால், ‘காற்றில் எந்தன் கீதத்தில்’ தனிமை இதமாய் சுடும்.. ‘சின்னத்தாயவள்’ என பாடலில் அவர் குரல் தொடங்கும்போதே விழிகளில் நீர் தேக்கிக் கொள்ளும் தாய்மார்கள் ஏராளம்..
‘வெட்டி வேறு வாசம்’, ‘இஞ்சி இடுப்பழகி’ என கிராமத்துக் கிளிகளின் காதல் குரலாய், ‘பொன்மேனி உருகுதே’ என விரகத்தின் வெளிப்பாடாய், ‘எந்தன் கண்ணில் ஏழுலகங்கள்’ என போதையில் தள்ளாடும் பேதையாய் இசையின் பரிமாணங்களை தன் குரல் வழியாகவே வெளிப்படுத்தி வியக்க வைத்தவர்.. ஒரு பாடலின் எந்த நொடியிலும் குரலில் சிறு சிரமத்தையும் வெளிப்படுத்தாது, அனைத்து மொழிகளிலும் மிகச் சரியான உச்சரிப்பைக் கொண்டவர் பாடகர் ஜானகி..
‘போடா போடா போக்க’ பாடலை கிழவியின் குரலிலும், ‘மாமா பேரு மாறி’ பாடலை ஓர் ஆணின் குரலிலும் பாடி அசத்தியிருப்பார்.. ‘டாடி டாடி’, ‘ஒரு ஜீவன் தான்’ பாடல்களின் மழலைக் குரல் இவர்தான் என்றால், இன்றும் அப்படியா என ஆச்சரியத்தில் விழிகள் விரிவோர் இங்குண்டு.. எம்.எஸ்.விஸ்வநாதன், இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான், எஸ்.பி.பாலசுப்ரமணியம், யேசுதாஸ், அனிருத் எனப் பல தலைமுறை கலைஞர்களோடு பணியாற்றிய பெருமை இவருக்குண்டு..
‘மார்கழித் திங்களல்லவா’ பாடலுக்காக திருமதி ஜானகிக்கு மாநில விருதளித்து பெருமைப்பட்டுக் கொண்டது தமிழ்நாடு அரசு.. சில ஆண்டுகளுக்கு முன்பு வெளியான ‘வேலையில்லா பட்டதாரி’ படத்தில் அவர் பாடிய ‘அம்மா அம்மா’ பாடல் தாயின்றி வாடிய பல குழந்தைகளின் தவிர்க்க முடியாத தாலாட்டாகிப் போனது.. அதுவே தமிழில் அவரின் கடைசிப் பாடலாகவும் ஆனது.. பெரும் பெருமைகளுக்கெல்லாம் சொந்தக்காரர் என்றாலும், பொது நிகழ்ச்சி மேடைகளில் மிகவும் எளிமையாகவே வலம்வரும் ஜானகியம்மாள், மைக்கைப் பார்த்து ஒரு இடத்தில் பாட நின்றால் பாடல் முடியும் வரை அங்கேயே நின்று தான் பாடுவாராம்..

உச்சஸ்தாயியில் பாடினாலும் சரி, கீழஸ்தாயியில் பாடினாலும் சரி அவரது உடலில் எந்தவித அசைவும் இருக்காது.. இசை என்பது ஒரு தெய்வீக நிலை என சான்றோர்கள் கூறிய வார்த்தைகள், இவர் பாடுவதைப் பார்க்க நேரும் போதெல்லாம் தன்னை புதுப்பித்துக் கொள்கிறது.. 2016-ஆம் ஆண்டு இசைத்துறையில் தன் ஓய்வை அறிவித்த திருமதி எஸ்.ஜானகி, இனி மேடைகள் மற்றும் திரைப்படங்களில் பாடப் போவதில்லை எனத் தெரிவித்தார்..
ஓய்வுற்ற போதும் என்ன, இத்தனை தலைமுறைகள் தாண்டி இன்னமும் ஈர்த்துக் கொண்டிருக்கும் இந்தத் தேன் குரல், இனி எத்தனை ஆண்டுகள் ஆயினும் பல்லாயிரம் பாடல்களினூடே என்றும் தேங்கி நிற்கும் நம் செவிகளில் !!
Article by RJ Nalann