Specials Stories

சாண்டா கிளாஸ் Aka கிறிஸ்துமஸ் தாத்தா

Secret Santa December
Secret Santa December

Secret Santa December: டிசம்பர் மாதம் வந்துவிட்டாலே கிறிஸ்துமஸ் பண்டிகை நினைவில் வருவது இயல்பே. அந்த நினைவுகளோடு முதலில் மனதிற்கு வருவது சாண்டா கிளாஸ் தான் சிவப்பு உடையில், வெள்ளை தாடியுடன், அன்பும் பரிசும் பகிரும் சாண்டா என்றாலே குழந்தைகள் முதல் பெரியவர்கள்வரை மகிழ்ச்சி தான் குறிப்பாக சாண்டா கிளாஸ் என்று அன்புடன் அழைக்கப்படும் கிறிஸ்துமஸ் தாத்தா, கிறிஸ்துமஸ் நாளன்று நமக்கு பரிசுகளை கொண்டு வருவார் என்கிற நம்பிக்கையுடன் நாம் காத்திருப்போம்.

கதைகளின்படி கிறிஸ்துமஸ் தாத்தா குழந்தைகளிடமிருந்து அவர்களுக்கு பிடித்த பரிசுகளைக் கோரி கடிதங்களைப் பெறுவார் பின்பு நல்ல குழந்தைகளாக இருந்தால் தான், கிறிஸ்துமஸ் தாத்தாவிடம் இருந்து பரிசுகளைப் பெறுவார்கள் என்றும் கூறுவார்கள். ஆனால் இதையும் தாண்டி கிறிஸ்துமஸ் தாத்தா பத்தி நாம் அறியாத பல சுவாரசியங்கள் இருக்கிறது அதில் முதலாவது இன்று உலகெங்கும் சாண்டா என்றாலே சிவப்பு உடைதான் நினைவிற்கு வரும்.

ஆனால் முதல் படங்களில் அவர் பச்சை, நீலம்,போன்ற பல நிறங்களில் வந்தார்.பின்னர் ஒரு விளம்பர கலைஞரின் படைப்பால்சிவப்பு நிறம் உலகெங்கும் பிரபலமாயிற்று. அதைபோல் நோர்வே, கனடா, ஃபின்லாந்து போன்ற நாடுகளில் குழந்தைகள் அனுப்பும் சாண்டா கடிதங்களை சிறப்பு குழுக்கள் படித்து, பல நேரங்களில் உண்மையான பதில் கூட அனுப்புகிறார்கள்.

அதிலும் குறிப்பாக பனியில் மூழ்கிய சாண்டாவின் உலகத்தை நிஜமாக காண முடியும் இடமே பின்லாந்தின் ரோவனியெமியில் உள்ள “சாண்டா கிளாஸ் வில்லேஜ்”.அர்க்டிக் சர்க்கிள் பகுதியில் அமைந்துள்ள இந்த கிராமம் வருடம் முழுவதும் கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாட்டத்தில் இருக்கும். இங்கே சாண்டா கிளாஸை நேரில் சந்திக்கலாம், அவருடன் பேசி புகைப்படம் எடுக்கலாம். பனி மூடிய வீடுகள், மின்மினக்கும் விளக்குகள், அலங்கரிக்கப்பட்ட மரங்கள் என இந்த கிராமம் முழுவதும் கிறிஸ்துமஸின் மாய உலகத்தை நினைவூட்டும்.இந்த வில்லேஜில் “Santa’s Post Office” எனப்படும் அஞ்சலகமும் உள்ளது.

உலகம் முழுவதும் உள்ள குழந்தைகள் அனுப்பும் ஆயிரக்கணக்கான கடிதங்கள் இங்கு சென்று சேரும். விரும்பினால் நாமும் சாண்டா கிளாஸிடமிருந்து சிறப்பு முத்திரையுடன் கூடிய கிறிஸ்துமஸ் கார்டுகளை அனுப்பிக் கொள்ளலாம்.மேலும், பனியில் ரெயின்டீர் சவாரி, ஹஸ்கி நாய் சபாரி, ஸ்னோமேன் உலகம், நோர்தர்ன் லைட்ஸ் பார்வை என அனுபவிக்க பல சிறப்புகள் உள்ளது. குடும்பத்துடன் செல்ல மிகுந்த மகிழ்ச்சியளிக்கும் சுற்றுலா இடமாக இது உலகம் முழுவதும் பிரபலமாக உள்ளது.கிறிஸ்துமஸ் உணர்வை எப்போதும் உயிர்ப்புடன் கொண்டிருக்கும் இந்த சாண்டா கிளாஸ் வில்லேஜ், அனைவர்க்கும் ஒரு கனவு உலகமாகவே இருக்கிறது பரிசுகள், கதைகள், ஆடைகள்… இவை எல்லாவற்றையும் தாண்டி சாண்டா சொல்ல நினைப்பது ஒரே விஷயம் “இன்பம் பகிருங்கள்… நல்லவர்களாக இருங்கள்… பிறர் சிரிக்க காரணமாகுங்கள்.”

Article By – RJ SHERLY