சினிமாவைக் கனவுத் தொழிற்சாலை என்பார்கள்; அதனாலேயே அது பலருக்கு கனவாகவே அமைந்து போகிறது; ஆனால் அயரது அதிலும் போராடி வெற்றி பெற்றவர்கள் வெகு சிலர். அவர்களுள் இந்த தலைமுறையை ஈக்கும் எளிய மக்களின் கலைஞன் சூரி.1977 ஆம் ஆண்டு மதுரையில் ராஜாக்கூரில் பிறந்த சூரிக்கு சிறுவயதிலேயே சினிமா ஆசை தொற்றி்க் கொள்ள, தனது இருபதாவது வயதில் மதுரையிலிருந்து இருந்து புறப்பட்டு சென்னக்கு வந்து சேர்ந்தார்.
பட வாய்ப்பு தேடி அவர் கால்கள் காண தயாரிப்பு நிறுவனமும் இல்லை; சந்திக்காத பெரிய இயக்குநர்களும் இல்லை; ஆனால் பட வாய்புக்கள் கிடைக்கவில்லை; பெரிய போராட்டங்களைச் சந்தித்த சூரி தனது கனவுகளை மட்டும் கைவிடவில்லை; துப்புரவுத்தொழில் உள்பட பல்வேறு பணிகளைச் செய்தார். அதன் பின்னர் சினிமா தொடர்பிலேயே இருக்க வேண்டும் என்பதால் செட் அசிஸ்டெண்ட், லைட் பாய் உட்பட சிறு சிறு பணிகளைச் செய்தார். அதன் பின்னர் 2003 ஆண்டு வின்னர் படத்தில் வசனங்கள் ஏதுமின்றி கூட்டத்தில் ஒருவராக நடித்தார். அதே போலா தீபாவளி படத்திலும் நடித்தார்.
14 வருட போராட்டத்திற்குப் பிறகு இயக்குநர் சுசீந்திரன் முழுக்க முழுக்க புது முகங்களை மட்டுமே வைத்து இயக்கிய வெண்ணிலா கபடிக்குழு படத்தில் புரோட்டாவை விரும்பி உண்ணும் நகைச்சுவை பாத்திரத்தில் நடித்தார். அவருடைய அந்த பரோட்டா காமெடி வெற்றி பெற அவருக்கு சினிமாவின் கதவுகள் திறந்தன. பின்னர் அவர் போராளி (2011), சுந்தர பாண்டியன் (2012), வருத்தப்படாத வாலிபர் சங்கம் (2013), ஜில்லா (2014) போன்ற வரவேற்பைப் பெற்ற பல படங்களில் நகைச்சுவை மற்றும் துணைப் பாத்திரங்களில் தோன்றினார். ரஜினி முருகன் (2016) இது நம்ம ஆளு (2016), வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன் (2016), சங்கிலி புங்கிலி கதவத் தொற (2017) ஆகிய படங்களிலும் இவரது துணைக் கதாபாத்திரங்கள் பாராட்டப்பட்டன.

2018 ஆம் ஆண்டில் சிவகார்த்திகேயனுடன் சீமராஜா மற்றும் விக்ரமுடன் சாமி 2 ஆகிய இரண்டிலும் நடித்தார். இந்த இரண்டு படங்களிலும் இவரது நகைச்சுவை நடிப்பு கடுமையாக விமர்சிக்கப்பட்டது, இதனால் சூரியே அதற்கடுத்த படங்கள் வழியாக பதிலளித்தார். பின்னர் வெற்றிகரமான நம்ம வீட்டு பிள்ளை (2019), சங்கத்தமிழன் (2019) ஆகிய அடுத்தடுத்த படங்களில் நடித்தார்.
2023 ஆம் ஆண்டில், வெற்றிமாறனின் வரலாற்று குற்றவியல் பரபரப்பூட்டும் படமான விடுதலை பகுதி 1,பகுதி 2 இல் கதையின் நாயகனாக சூரி நடித்தார். இவரது நடிப்பு விமர்சகர்களிடமும், பார்வையாளர்களிடமிருந்தும் மிகவும் நேர்மறையான பாராட்டுகளைப் பெற்றது. இதைத் தொடர்ந்து கருடன் (2024), கொட்டுக்களி (2024) மாமன்(2025), ஆகியவற்றில் முன்னணி வேடங்களில் நடித்தார். மூன்று படங்களும் அவற்றின் இயக்கம் மற்றும் நடிப்பிற்காக பரவலாக விமர்சன ரீதியான பாராட்டுகளைப் பெற்றன. கொட்டுக்களி மற்றும் ஏழு கடல் ஏழு மாலை ஆகியவை முறையே 74வது பெர்லின் சர்வதேச திரைப்பட விழாவிலும் 53வது சர்வதேச திரைப்பட விழா ரோட்டர்டாமிலும் திரையிடப்பட்டன.
பொதுவாக காமெடிபாத்திரங்களில் நடித்து கதையின் நாயகனாக மாறும் போது, நடிகர்கள் பெரும் தடுமாற்றத்தை சந்திப்பார்கள். அது ரசிகர்களையும் பாதிக்கும். அதுவரை காமெடி பாத்திரத்தில் நடித்தவர்கள் சண்டைக்காட்சிகளில், காதல் காட்சிகளிலும் நடிப்பதை ரசிகர்களால் அவ்வளவு எளிதில் ஏற்றுக் கொள்ள முடியாது. ஆனால் அந்த சிக்கலை லாவகமாக சூரி கையாண்டார் என்று சொல்லாம். விடுதலை, கருடன், கொட்டுக்காளி,மாமன் போன்ற படங்களின் நாயகன் எளிய மக்களில் ஒருவராய் கதை பின்னப்பட்டதால் அது சூரிக்கு சிறப்பாக பொருந்தி போய்விட்டது. அதனை சூரியும் சிறப்பாக செய்திருந்தார். சூரியை அப்படி ஒரு பரிமாணத்துக்கு கொண்டு வந்ததில் இயக்குனர் வெற்றிமாறனுக்கு உண்டு. தனது படம் வெற்றி பெற வேண்டுதல் செய்த ரசிகர்களை கண்டித்து ஏழை மாணவர்களுக்கு உதவக் கோரி அனைவரின் கவனத்தையும் ஈர்த்து நிஜ வாழ்வின் நாயகனானார்.
இயக்குநர்களின் நாயகனாக மாறி எளிய மக்களின் நாயகனாக தமிழ் மக்களின் இல்லங்களில் நுழைந்துள்ள சூரியின் சூரத்தனமான நடிப்பும் வெற்றிப் பயணமும் தொடர அவரது48 வது பிறந்த நாளில் வாழ்த்தி மகிழ்கிறது சூரியன் எஃப் எம்.