ஒரு பொறியியல் மாணவன் அதிகபட்சமாக தனது துறையில் நன்கு படித்து மிகப் பெரிய விஞ்ஞானியாகி நோபல் பரிசு வரை போகலாம், ஆனால் இங்கு ஒரு பொறியியல் மாணவன் தனது படிப்புக்கு சம்பந்தமே இல்லாத வேறு ஒரு துறையில் கின்னஸ் ரெக்கார்ட் செய்யும் அளவுக்கு முன்னேறி இருக்கிறார். அதுவும் நாம் வாழும் காலத்தில், நமது பூமியில்.
அவர் தான் பாடல் என்ற மூன்று எழுத்தை தன் குரல் என்ற மூன்று எழுத்து மூலம் மென்மை என்ற மூன்று எழுத்தால் மாற்றிய எஸ்பிபி என்ற மூன்றெழுத்து.
6 தேசிய விருதுகள், 25 ஆந்திரப் பிரதேச மாநில விருதுகள் தவிர தமிழ்நாடு, கர்நாடகா, கேரள அரசின் விருதுகள், பிலிம்ஃபேர் விருதுகள் என விருதுகளின் நாயகனாக விளங்கிய எஸ் பி பாலசுப்பிரமணியம் பாடிய பாடல்களின் எண்ணிக்கை 40 ஆயிரத்தை தாண்டி கின்னஸ் சாதனை செய்துள்ளது.

1966 டிசம்பர் 15 அன்று தான் எஸ்பிபி தன் முதல் பாடலை பாடினார். “ஸ்ரீஸ்ரீஸ்ரீ மரியாதை ராமண்ணா” என்ற தெலுங்கு படத்தில் பாடினார். அதற்குப் பிறகு கன்னடத்தில் “நக்கரே அதே ஸ்வர்கா” என்ற கன்னட படத்தில் பாடினார் எஸ் பி பாலசுப்பிரமணியம்.
தமிழில் முதன் முதலில் அவர் பாடிய பாடல் வெளிவராமல் போனது ஆச்சரியம்தான். எம் எஸ் விஸ்வநாதன் இசையில் “ஹோட்டல் ரம்பா” படத்தில் தான் எஸ் பி பாலசுப்பிரமணியம் முதன்முதலில் பாடினார். ஆனால் அந்தப் படமே வெளிவரவில்லை. அதற்குப் பிறகு 1969 இல் “சாந்தி நிலையம்” படத்தில் “இயற்கை என்னும் இளைய கன்னி” என்ற பாடலை பாடினார். ஆனால் அதற்கு முன்பே எம்ஜிஆர் நடிப்பில் வெளிவந்த “அடிமைப்பெண்” படம் வெளியானது. அதில் எஸ்பிபி பாடிய ஆயிரம் நிலவே பாடல் வெளியாகி புகழ் பெற்றது.
இளையராஜா, எஸ் ஜானகி, எஸ் பி பாலசுப்ரமணியம் கூட்டணி 80-களில் ஆரம்பித்து 10 ஆண்டுகள் தமிழ் சினிமாவின் இசையில் மாபெரும் புரட்சி செய்தது என்றே சொல்லவேண்டும்.
எஸ்பிபி-யின் குரல் ஒரு காந்தக் குரல் .பாடல் காட்சிகளுக்கு ஏற்ப தனது குரலை குழைத்து நெளித்து பாடுவதால் அந்தப் பாடலின் தன்மை மேலும் வலுவடையும். குறிப்பாக காதல் பாடல்களில் எஸ்பிபி பாடும்போது காதலிக்காதவர்கள் கூட காதலை காதலிக்க ஆரம்பித்து விடுவார்கள். அதேபோன்று சோகப் பாடல்களில் எஸ்பிபி நம் கண்களில் மட்டுமல்ல நெஞ்சங்களிலும் கண்ணீரை வரவழைக்கும் ஆற்றல் பெற்றவர். வித்தியாசமாக தன் குரலை மாற்றி பாடுவதிலும் வல்லவர் எஸ்பிபி. அதற்கு நிறைய பாடல்களை உதாரணமாக சொல்லலாம்.
குறிப்பாக கமல் நடித்த “விக்ரம்” படத்தில் இடம்பெற்ற “என் ஜோடி மஞ்ச குருவி” பாடலில் மூன்று விதமான குரலில் பாடியிருப்பார். பெரும்பாலும் ரஜினியின் படங்களில் முதல் பாடல் எஸ்பிபி பாடியிருப்பதாக அமைந்திருக்கும்.
பாடுவதில் மட்டுமல்ல இசை அமைப்பதிலும் தான் ஒரு மகா கலைஞன் என்பதை பல படங்களில் நிரூபித்திருக்கிறார். துடிக்கும் கரங்கள், சிகரம் போன்ற படங்களில் எஸ் பி பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் அவதாரம் எடுத்தார்.
இசையைத் தாண்டி நடிப்பிலும் தான் ஒரு சிறந்த நடிகர் என்பதை பல படங்களில் நிரூபித்திருக்கிறார். சின்னச் சின்ன வேடங்களில் நடித்திருந்த எஸ்பிபி இயக்குனர் வசந்த்-ன் “கேளடி கண்மணி” படத்தில் கதாநாயகனாக நடித்தார். எவ்வளவு சிகரங்களையும் உயரங்களையும் தொட்டிருந்தாலும் பண்பாடும் பணிவும் குறையாதவர். மென்மையான பேச்சு, தன்னடக்கம், நகைச்சுவை உணர்வு என எஸ்பிபி சிறந்த மனிதராகவே கடைசி வரைக்கும் இருந்தார்.
அதனால்தான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த காலத்தில் சினிமாவைத் தாண்டி மொழியைத் தாண்டி மதம் தாண்டி அவருக்காக எல்லா மக்களும் பிரார்த்தனை செய்தனர். இருந்தும் 2020 செப்டம்பர் 25 அவர் நம்மை விட்டு பிரிந்தார். அவர் நம்மை விட்டு பிரிந்தாலும் அவரின் பாடல்களும் அவரின் குரலும் இன்றும் என்றும் மேடையில் ஒலித்துக் கொண்டே இருக்கும்.
இசை ஜாம்பவானாக திகழ்ந்த எஸ் பி பி யின் பிறந்த தினம் ஜூன் 4. அவரின் பிறந்த நாளில் அவர் நினைவுகளோடு பயணிப்பதில் ஒரு சுகம் இருக்கவே செய்கிறது.
Article by RJ K.S.Nathan